ஓபிஎஸ்ஸும் வேண்டாம் ஈபிஎஸ்ஸும் வேண்டாம்... தனி அணி திரட்டும் அதிமுக எம்எல்ஏ-க்கள்!


அதிமுக எம்எல்ஏ-க்கள்

"சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவெடுப்பார்கள்” என்று ஓபிஎஸ் மதுரையம்பதியில் சொன்ன கருத்து, மாநிலம் முழுக்க எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் அதிமுகவுக்குள் பல்வேறு விவாதங்களைக் கிளப்பி இருக்கும் நிலையில், 15 முதல் 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவையில் தனி அணியாக செயல்பட முடிவு செய்திருப்பதாக அடுத்தகட்ட தகவல்கள் வருகின்றன.

கோடநாடு வழக்கை வைத்து, எடப்பாடியாருக்கு திரும்பிய பக்கமெல்லாம் திகில் கொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இன்னொரு பக்கம், அவருக்கு ஆதரவாகச் செயல்படக்கூடும் என கணிக்கும் முன்னாள் அமைச்சர்கள் மீது வரிசையாக ரெய்டு நடவடிக்கைகள் ஏவப்பட்டு வருகின்றன. அதேநேரம், ஓபிஎஸ் மீதோ அவருக்கு அனுசரணையாக இருக்கக் கூடிய முன்னாள் அமைச்சர்கள் மீதோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாறாக, திமுக தரப்பிலிருந்து ஓபிஎஸ் தரப்புக்கு மறைமுக ஆதரவு வழங்கப்படுவது போல் ஒரு தோற்றம் தான் தெரிகிறது.

இந்த நிலையில்தான், சசிகலாவுக்கு ஆதரவான தனது உள்ளக் கிடக்கையை வெளியிட்டு அதிமுகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார் ஓபிஎஸ். இவரது கருத்துக்கு, வழக்கம் போல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் எதிர்க்கருத்துச் சொன்னாரே தவிர, ஈபிஎஸ் உள்ளிட்ட யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை.

ஓபிஎஸ்

இந்நிலையில், அடுத்த அதிரடியாக தஞ்சையில் நடைபெற்ற டி.டி.வி.தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தனது தம்பி ஓ.ராஜாவை அனுப்பிவைத்து ஆழம் பார்த்திருக்கிறார் ஓபிஎஸ். அவர் எதிர்பார்த்தது போலவே இதுவும் இப்போது விவாதமாகி இருக்கிறது. ஆனாலும் யாரும் இந்த விஷயத்தில் ஓபிஎஸ் கருத்துக்கு எதிராக முன்புபோல் வெளிப்படையாக கருத்துச் சொல்ல முன்வரவில்லை. மாறாக, “ஓபிஎஸ் சொன்னதில் என்ன தவறு இருக்கு?” என்கிற ரீதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ போன்றவர்கள், அவருக்கு ஆதவு நிலையில் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். இன்னும் சில 2-ம் நிலைப் பொறுப்பாளர்கள், “ஓபிஎஸ்ஸை விமர்சிப்போர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கொந்தளித்திருக்கிறார்கள்.

இதற்கு முன்பும் ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஆதரவாக கருத்துச் சொல்லி இருக்கிறார். ஆனால், அப்போதெல்லாம் கட்சிக்குள் அவருக்குக் கிடைக்காத வெளிப்படையான ஆதரவு இப்போது கிடைத்திருக்கிறது. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆட்சியில் இருந்தவரை அமைச்சர்கள் அனைவருமே ஈபிஎஸ் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நின்றார்கள். அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இதனால், ஓபிஎஸ்ஸால் அப்போது எதையும் சாதிக்க முடியாமல் இருந்தது. இப்போது அதிகாரத்தை இழந்து நிற்பதால், ஈபிஎஸ்ஸின் கை மெல்ல மெல்ல வலுவிழந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்களே சொல்கிறார்கள்.

ஓபிஎஸ்- ஈபிஎஸ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது எடப்பாடியார் சொல்வதுதான் அனைவருக்கும் வேதவாக்காக இருந்தது. அந்த வகையில் யாருடைய மனமும் புண்படாத வகையில் ‘அனைத்தையும்’ கவனித்துக் கொண்டார் எடப்பாடியார். ஆனால், இப்போது அப்படி இல்லை. அதிகாரத்தில் இருந்தபோது அவருக்குப் பக்கத்தில் இருந்து வளம் கொழித்தவர்களே, இப்போது அவருக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒன்று, சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் சொன்ன கருத்தை அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவில் 8 பத்தி செய்தியாக பிரதானமாக வெளியிடுகிறார்கள். ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு பதில் சொன்ன ஜெயக்குமாரின் ஸ்டேட்மென்ட்டுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. கட்சிப் பத்திரிகையாக இருந்தாலும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் இவர்களின் மூலதனத்தில்தான் நமது அம்மா நாளிதழ் இயங்குகிறது. இவர்கள் அத்தனை பேருமே சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகக் காட்டிக் கொண்டவர்கள். சண்முகம் இன்னமும் சசிகலாவுக்கு எதிராக சங்கநாதம் எழுப்பிக் கொண்டிருக்கிறார். நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜை வைத்து, சசிகலாவை மனம்போன போக்கில் எல்லாம் விமர்சித்து எழுதவைத்த இவர்களெல்லாம் இன்னமும் அதே மனநிலையில் இருப்பார்களேயானால், சசிகலாவுக்கு ஆதரவான செய்திக்கு நமது அம்மாவில் இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருப்பார்களா?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

சி.வி.சண்முகம்

இதனிடையே, ஈபிஎஸ்ஸின் நிழலில் நின்றால் நம்மீதும் ரெய்டு நடவடிக்கைகள் பாயலாம் என்ற கோணத்திலும் சில முன்னாள் அமைச்சர்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த சிந்தனை அவர்களை மெல்ல ஓபிஎஸ் பக்கம் ஒதுங்கவைத்திருக்கிறது. இப்படி ஒதுங்க ஆரம்பித்த பிறகு, அதிமுகவுக்குள் முக்குலத்தோர் அணி, கவுண்டர்கள் அணி என 2 அணிகள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முட்டிமோதுவது வெளிப்படையாகவே தெரியவும் ஆரம்பித்திருக்கிறது. இந்த முட்டலை முன்மொழியும் விதமாக, திமுக தரப்பிலுமிருந்து ஓபிஎஸ் தரப்புக்கு மறைமுகமாக நேசக்கரம் நீட்டிக் கொம்பு சீவிக்கொண்டிருக்கிறார்கள்.

எஸ்.பி.வேலுமணி

அதிமுகவை முன்வைத்து நடக்கும் இந்தக் கூத்தை எல்லாம் பார்த்துவிட்டு, ஜெயலலிதா காலத்து சீனியர் லீடர்கள் பலரும் வெந்து நொந்து போய்க் கிடக்கிறார்கள். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குமே கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விட, தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டமே பிரதானமாக இருக்கிறது. அதனால்தான், ஆளுக்கொரு விதமாக ஸ்டேட்மென்ட் விட்டு தொண்டர்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே அந்த சீனியர்களின் ஆதங்கம்.

இந்த நிலையை இதற்கு மேலும் தொடரவிடக் கூடாது என்ற மனநிலைக்கு வந்திருக்கும் அந்த சீனியர்கள், இனியும் இரட்டைத் தலைமையை அனுமதித்தால் அதிமுக என்ற கட்சியே கரைந்து காணாமல் போய்விடும். எனவே, ‘ஓபிஎஸ்ஸும் வேண்டாம் ஈபிஎஸ்ஸும் வேண்டாம்; தகுதியான வேறொரு சீனியரின் தலைமையின்கீழ் கட்சியை வழிநடத்துவோம்’ என பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

நத்தம் விசுவநாதன்

அதில் முதல்கட்டமாக, இப்படியான சிந்தனையில் இருக்கும் 15 முதல் 25 அதிமுக எம்எல்ஏ-க்களை, சாதி பாகுபாடு கடந்து ஒருங்கிணைக்கும் வேலைகளை தொடங்கி இருக்கிறார்கள். கொங்கு மண்டலத்து எம்எல்ஏ-க்கள் ஒட்டுமொத்தமாக ஈபிஎஸ்ஸை ஆதரிப்பதுபோல் ஒரு தோற்றம் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இருவருமே வேண்டாம் என்ற யோசனைக்கு கொங்கு மண்டல அதிமுக எம்எல்ஏ-க்கள் சிலரும் ஆதரவு தெரிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இப்படி அணி திரளும் எம்எல்ஏ-க்களை, சட்டப்பேரவையில் தனி அணியாகச் செயல்பட வைக்கவும் யோசனை சொல்லப்பட்டு வருகிறது. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன் ஒருங்கிணைப்பில் திரளும் இந்த எம்எல்ஏ-க்கள் கூடிய சீக்கிரமே பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தங்களது தனி அணி பிரகடனத்தையும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்ற கருத்தையும் பகிரங்கமாக வெளியிடுவார்கள் என்கிறார்கள்.

வைத்திலிங்கம்

இந்த சீசனில், அதிமுகவை மீட்கப் புறப்பட்டிருக்கும் ‘புரட்சித் தாய்’ சசிகலாவுக்கு என்ன கதாபாத்திரம் கிடைக்குமோ தெரியவில்லையே!

x