உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர், கெரி பகுதியில் அக்.3 அன்று, பாஜகவினர் மற்றும் விவசாயிகள் இடையிலான கலவரத்தில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இதில், மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உட்பட பலர் குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள்.
ஆனால், ஆளும் கட்சியின் செல்வாக்கு காரணமாக இந்த வழக்கில் உ.பி போலீஸார் இழுத்தடித்து வந்தனர். லக்கிம்பூர் சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், உ.பி அரசு மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து போக்குகாட்டி வந்த அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைதானார்.
உ.பி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை அடுத்து, இந்த வழக்கு ஆளும்கட்சிக்கு தலைவலியானது. தொடர்ந்து லக்கிம்பூர் வழக்கின் சாட்சிகள் மிரட்டலுக்கு ஆளாவதாகப் புகார்கள் எழுந்தன. எனவே ‘வழக்கின் பிரதான சாட்சிகளான 60 பேருக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு’ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி துப்பாக்கி ஏந்திய போலீஸார் காவலை உறுதி செய்த ஏஎஸ்பி அருண்குமார் சிங், அச்சுறுத்தலை உணரும் பிற சாட்சிகளுக்கும் பாதுகாப்பு விரிவுபடுத்தப்படும் என உறுதியளித்திருக்கிறார்.
லெக்கிம்பூர் வழக்கு தொடர்பான ஒவ்வொரு நகர்வையும் அரசியல் கட்சிகளும், உச்ச நீதிமன்றமும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.