சிவகங்கையும் சிதம்பரமும் - 17


நமது அன்புத் தலைவர் சிதம்பரம் யாரையும் பெலக்கா (சத்தமா) அதட்டி ஒரு வாரத்தை சொல்லமாட்டார். ஆனால், அவரது அருமைப் புதல்வர் அவருக்கு நேர்மாறாக இருப்பதாகச் சொல்கிறார்கள் அனுபவப்பட்டவர்கள்.

இளைய நிலா கார்த்தி சிதம்பரம் அரசியலில் தன்னை இன்னும் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். நான்கு பேருடன் போய் கையேந்தி பவனில் கைமா வாங்கி சாப்பிட்டுவிட்டுப் போவதல்ல காங்கிரஸ் அரசியல். ஒரு வார்த்தைதான் வெல்லும்... ஒரு வார்த்தைதான் கொல்லும் என்பதை இளைய நிலா கார்த்தி இன்னும் புரியாமல் இருந்தால், இப்படித்தான் நம்மைவிட்டுப் பலரும் போய்க்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு, இன்னுமொரு உதாரணம் இந்த அத்தியாய நாயகன்.

காங்கிரஸ் கரை வேட்டி, கையில் எப்போதும் காங்கிரஸ் துண்டு, சட்டைப் பையில் கை சின்னம் போட்ட பேனா, தனது மைக்செட் கடையில் வைத்திருக்கும் பில் புக்கிலும் காங்கிரஸ் கொடியின் நிறம், வாடகைக்குப் போகும் ஜெனரேட்டர்களிலும் காங்கிரஸின் மூவர்ணம் என வாழ்க்கையே காங்கிரஸாக வாழப்பழகியவர் கொங்கரத்தி நாராயணன்.

கொங்கரத்தி நாராயணன்

தனது 17-வது வயதில் கிராம காங்கிரஸ் கமிட்டி செயலாளர், பிறகு, சேவாதளத்தின் வட்டாரத் தலைவர், இளைஞர் காங்கிரஸின் வட்டாரத் தலைவர், பிற்பாடு, ஒன்றுபட்ட கல்லல் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் என 24 ஆண்டுகள் காங்கிரஸை தோளில் சுமந்தவர் கொங்கரத்தி நாராயணன்.

வட்டாரத் தலைவர் என்றால், சிலரைப் போல செட்-அப் ஆட்களை வைத்து சீன் போடாமல், தன்னுடைய வட்டாரத்துக்கு உட்பட்ட அத்தனை பகுதிகளிலும் மிகச்சரியாக கிளை அமைப்புகளை வைத்து, நேரடியாக அத்தனை பேருடனும் தொடர்பிலிருந்து சிறப்பாகச் செயலாற்றியவர் அவர்.

தனது வட்டாரத்தில் காங்கிரஸ்காரர்கள் யார் இறந்தாலும் காங்கிரஸ் கொடியுடன் சென்று, அவர்களுக்கு இறுதி மரியாதை செய்யும் வழக்கம் உள்ளவர். அதேபோல், கட்சியினரின் இல்ல விழாக்களில் தவறாது கலந்து கொள்ளக்கூடிய பண்பாளர். தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில்தான் இவரது திருமணம் நடந்தது. அதனால் ஆரம்பத்திலேயே, ‘வாழப்பாடி கோஷ்டி’ என்ற முத்திரை இவர் மீது வான்டடாக குத்தப்பட்டது.

ஆனால், தலைவர் சிதம்பரம் போன்றவர்களே தமிழக காங்கிரஸ் இனி தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகத்தில் தமாகா கண்டபோதுகூட, தடம் மாறாமல் தாய்க்கட்சியிலேயே தங்கிப்போன தியாகி நாராயணன். 4 முறை ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இவர், அத்தனை முறையும் 15, 20 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

இப்படி தொடர் தோல்விகளைச் சந்தித்த நாராயணன், 5-வது முறை, கட்சியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு 2006 தேர்தலில் பட்டமங்கலம் பெருமாளுக்காக தனது வார்டை விட்டுக்கொடுத்து, அவருக்காக தேர்தல் பணி செய்து அவரை ஜெயிக்கவும் வைத்தவர். அந்த முறை பெருமாள் கல்லல் ஒன்றிய பெருந்தலைவராகவும் வந்தார். அப்போது வட்டாரத் தலைவராக இருந்த நாராயணன் நின்று வென்றிருந்தால், அவர்தான் அந்த இடத்துக்கு வந்திருப்பார்.

கார்த்தி சிதம்பரம்

2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கொங்கரத்தி நாராயணன், மீண்டும் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். அவருக்காகப் பிரச்சாரம் செய்ய நமது இளைய நிலா மதிய வெயிலில் போனார். மதியம் 2 மணிக்கு கூடி நின்ற சொற்பமான கூட்டத்தினர் மத்தியில் பேசிவிட்டு கிளம்புகிற போது, “நாராயணனுக்கு ஓட்டுப் போடுவீர்களா?” என்று இளைய நிலா கார்த்தி கேட்க, நொந்தே போனார் கொங்கரத்தி. “நாராயணனுக்கு ஓட்டுப் போடுங்க; நல்லது நடக்கும்” என்று சொல்லாமல், “ஓட்டுப் போடுவீர்களா?” என்று கேட்டால் என்ன அர்த்தம்?

ஆனாலும் எப்படியோ உருண்டு புரண்டு ஒன்றியக்குழு உறுப்பினர் ஆகிவிட்டார் நாராயணன். அடுத்ததாக வந்த மறைமுக வாக்கெடுப்பில், ஒன்றியக் குழு துணைத் தலைவர் பதவிக்கு நாராயணன் போட்டியிட்டார். அந்த நேர செலவுகளுக்காக நாராயணனுக்கு கொஞ்சம் பைனான்ஸ் தேவைப்பட்டது. இது எல்லா இடத்திலும் இப்போது இயல்பாக நடக்கும் விஷயமாகிவிட்டது என்பதால், இதை வெளிப்படையாகச் சொல்வதில் தப்பில்லை என நினைக்கிறேன்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் நாராயணன், தனது நிதிச் சிக்கலை சமாளிக்க, பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சின்னவரைப் போய் பார்த்தார். “உனக்குத் தகுதி, திராணி இருந்தா நில்லு. இல்லேன்னா விலகிக்கய்யா... நான் வேற ஆளப்போட்டு ஜெயிச்சுக்கிறேன்" என்று ‘அன்பாகச்’ சொல்லி அனுப்பிவிட்டார் அன்புத் தலைவரின் பிள்ளை.

வேறு வழியில்லாமல், அங்கே இங்கே சமாளித்து தனது சுய முயற்சியில் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஆகிவிட்டார் நாராயணன். இதெல்லாம் முடிந்த நிலையில், கரோனா களத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் குறித்து, காணொலி வழியாக ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார் கட்சியின் மாநில தலைவர் அண்ணன் கே.எஸ்.அழகிரி. அதில் பங்கேற்ற நாராயணன், “எங்க எம்பி நிவாரண களத்துல எந்த உதவியும் செய்யல. என்னுடைய வார்டுக்கு உட்பட்ட 3 பஞ்சாயத்துக்கு வேற ஆட்கள் உதவி பண்ணிட்டாங்க. நரியங்குடி பஞ்சாயத்துக்கு ஏதாவது கொடுக்கணும்னு நான் கேட்டதுக்கு, ‘நீயே ஏதாவது ஏற்பாடு பண்ணு; நான் வந்து கொடுக்க வரேன்’னு சொல்றாரு. நான் காசு பணம் செலவழிச்சு வாங்கி வெச்சத இவர வெச்சு ஏன் கொடுக்க வைக்கணும்? இதையெல்லாம் நீங்களே எடுத்துச் சொல்லி எங்க எம்பியையும் மக்களுக்கு ஏதாச்சும் உதவி பண்ணச்சொல்லுங்க" என்று பளிச்சென பேசிவிட்டார்.

இந்தக் காணொலி கூட்டம் நடந்த மறுநாள், வேப்பங்குளத்தில் வேறு ஒரு நிகழ்ச்சிக்காக வருகிறார் கார்த்தி. வந்தவர், “என்ன நாராயணா... நீ எல்லாம் ஸூம் மீட்டிங்கில் பேசுற... உன்னை நான் ஸூம் பண்ணிப் பார்க்கிறேன்; பாத்துக்கிறேன்” என்று நக்கலாய் சொன்னார். இதைத் தனிப்பட்ட முறையில் கேட்டிருந்தால்கூட, வழக்கம்போல விதியே என சகித்துக் கொண்டிருப்பார் நாராயணன். ஆனால், அத்தனை பேர் மத்தியில் வைத்துக் கேட்ட விதம், நாராயணனை தளர வைத்தது. தனி ஒரு நாராயணனாக இல்லாமல், ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் நாராயணன் என்கிறபோது, கார்த்தியின் நக்கல் பேச்சு அவருடைய தன்மானத்தைத் தட்டிப் பார்த்தது. இனிமேல், இந்த மனிதருடன் குப்பைகொட்ட முடியாது என அப்போதே முடிவெடுத்துவிட்டார் நாராயணன். இவர்களைத் தவிர்த்துவிட்டு காங்கிரஸுக்குள் அரசியல் பண்ணமுடியாது என்று தெரிந்ததால், அதிமுகவின் பக்கம் நாசூக்காய் ஒதுங்கிவிட்டார் நாராயணன்.

ப.சிதம்பரம்

இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் நாராயணன் என்று நேற்று, கல்லல் வட்டாரத்து எனது காங்கிரஸ் நண்பர்களிடம் விசாரித்தேன். “அவர் பாட்டுக்கு வைஸ் சேர்மன் வேலைய அழகாப் பாத்துட்டு இருக்காரு. அவங்க வீட்டுக்காரம்மா 100 நாள் வேலைக்குப் போயிட்டு இருக்கு” என்றார்கள்.

கட்சிமாறினாலும் கலர் மாறவில்லை நாராயணன். இன்னும் காங்கிரஸ்காரராகவே இருக்கிறார். அடித்தட்டு மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள இப்படியான காங்கிரஸ் களப்போராளிகளை எல்லாம் வரிசையாய் காவுகொடுத்துவிட்டு, யாரைவைத்து நாம் கட்சியை வாழவைக்கப் போகிறோம்?

(தனது மனைவிக்குப் போட்ட 101 பவுனையும் அரசியலுக்காகவே அழித்தவர். திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனின் தடாலடிகளையும் தாக்குப்பிடித்தவர். இத்தனையும் செய்தவர் பெரிதாக ஒன்றும் ஆசைப்படவில்லை. ‘பச்சை மையில கையெழுத்துப் போடணும்’ - இதுதான் அவரது அதிகபட்ச ஆசை. ஆனால், கண்ணை மூடும் கடைசி நிமிடம்வரை அந்த ஆசை அவருக்குக் கைகூடவில்லை. என்ன காரணம்? அடுத்து பார்ப்போம்!)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும்... 16

x