கதைவிடும் மலையாளிகள்... கள்ள மவுனம் காக்கும் தமிழகத் தலைவர்கள்!


பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றி, தமிழர்களில் பெரும்பான்மையினருக்கு அடிப்படைப் புரிதல்கூட இல்லை என்று சொன்னால் பலருக்கும் சுருக்கென்று கோபம் வரும். ஆனால், உண்மை அதுதான்!

தென்தமிழகத்தில் நிலவிய கொடூரமான பஞ்சம், பெரியாறு அணை கட்டப்பட்ட வரலாறு, அது தமிழர்களுக்குப் பயன்பட்டவிதம், மின் உற்பத்திக்காக கேரளா 1973-ல் கட்டிய இடுக்கி அணை, எதிர்பார்த்த தண்ணீர் அந்த அணைக்கு வராததால் பெரியாறு அணை மீது கேரள மின் துறையின் கவனம் திரும்பியது, ‘மலையாள மனோரமா’ நாளிதழ் வெளியிட்ட பொய்ச்செய்தி, அதைத் தொடர்ந்து திட்டமிட்டுப் பரப்பப்பட்ட வதந்திகள், அதற்கு இரையாகி எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் 152 அடியில் இருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்ட அணையின் நீர்மட்டம், பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2006-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அதற்கு முரணாக இனி அணையின் அதிகபட்ச நீர்மட்டமே 136 அடிதான் என்று கேரளா நிறைவேற்றிய சட்டம், அதை ரத்து செய்துவிட்டு தண்ணீரை 142 அடி வரை தேக்கலாம் என்று 2014-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அந்த ஆண்டில் சரிவர மழை பெய்யவில்லை என்றாலும்கூட நம் உரிமையை நிலைநாட்டுவதற்காக வேண்டுமென்றே அணை திறப்பைத் தள்ளிப்போட்டு நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்காட்டிய அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் நெஞ்சுரம் என ஏகப்பட்ட விஷயங்களைத் தமிழர்கள் அறிந்துகொள்வது இப்பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

இடுக்கி அணை

கேரளாவின் பேராசை...

மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் வரும் ஆறு வைகை. ஆனாலும், இன்றும் வைகையை நாம் ஜீவனுள்ள ஆறாக அதை மதிக்கக் காரணம், அதில் ஓடும் பெரியாறு தண்ணீர். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி ஓடி அரபிக் கடலில் கலந்த தண்ணீரை, பென்னிகுவிக் கட்டிய அணை கிழக்கு நோக்கித் திருப்பி வைகை ஆற்றில் கொண்டுவந்துவிடுகிறது. அந்தத் தண்ணீரை வைகை அணையில் தேக்கி நாம் திறப்பதால், அதை வைகைத் தண்ணீர் என்று சொல்லிக்கொள்கிறோம்.

அது ஒருபுறம் இருக்கட்டும். கேரளா கட்டிய இடுக்கி அணை இருக்கிறதே, அதன் கொள்ளளவு 72 டி.எம்.சி. அதாவது, நம்முடைய பெரியாறு அணை (10.6 டி.எம்.சி), வைகை அணை (6.1 டி.எம்.சி) இரண்டையும் சேர்த்தால்கூட இடுக்கி அணையின் கால்வாசி தண்ணீருக்கு ஈடாகாது. அவ்வளவு பிரம்மாண்டமான அணையை முழுக்க முழுக்க மின்உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்துகிறது கேரள அரசு. இந்த அணையை மட்டுமல்ல அங்குள்ள 81 அணைகளில் 59 அணைகள் மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.

கேரளாவில் எல்லா அணையும் நிரம்பி வழிந்தாலும் பிரம்மாண்ட அணையான இடுக்கி மட்டும் அவ்வளவு சீக்கிரம் நிரம்புவதில்லை. 1982, 1991, 2018, 2021 என்று மொத்தமே 4 முறைதான் அந்த அணை நிரம்பியிருக்கிறது. மற்ற ஆண்டுகளில் பாதித் தண்ணீர்கூட இருக்காது. இந்த அணை எப்போதும் நிரம்பி வழிய வேண்டும், அதில் இருந்து தாங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது கேரளாவின் பேராசை. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அத்தனை ஆறுகளையும் அதை நோக்கித் திருப்பிவிட்டால்தான் அது சாத்தியம்.

ஆனால், அவர்களோ முல்லை பெரியாறு அணை தண்ணீரைத் தமிழகத்துக்குத் திருப்புவதால்தான் இடுக்கிக்குத் தண்ணீர் வரவில்லை என்று கருதிக்கொண்டார்கள். விளைவாக வதந்திக்கு மேல் வதந்தியைப் பரப்புகிறார்கள். கேரளாவில் இவ்வளவு வெள்ளம், பேரழிவு எல்லாம் ஏற்பட்ட பிறகும், ட்விட்டரில் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக ட்வீட் போட்டு, ட்ரெண்ட் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

பினராயி விஜயன்

கேரள வெறி

இவ்விஷயத்தில் அங்குள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, பொதுவுடமைவாதிகள் எல்லோரும் ஒரே குரலில்தான் பேசுகிறார்கள். இடுக்கி மாவட்ட ஆட்சியர், தமிழக அரசுக்குக் கடிதம் எழுதினார், “தயவுசெய்து 136 அடிக்கு மேல் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்காதீர்கள். உச்சபட்சமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்துகொள்ளுங்கள்” என்று. அவர் கடிதம் எழுதுவதற்கு முந்தைய நாளே நாம் அப்படித்தான் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தோம். இதோ இந்தக் கட்டுரையை எழுதும்போதுகூட, பொதுப்பணித் துறை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவைக் கேட்டபோது, விநாடிக்கு 2,300 கன அடி தண்ணீரை வெளியேற்றுவதாகச் சொன்னார்கள் அதிகாரிகள். அதுதான் உச்சபட்ச அளவு.

தமிழகத்தை ஆளும் திமுக அரசோ, அண்டை மாநிலமான கேரளத்தை நமது அரசியல் கூட்டாளிகளான, முற்போக்கான கம்யூனிஸ்ட்டுகள் ஆள்கிறார்கள் என்று கருதுகிறது. ஆனால், அவர்களோ தங்களை முழு மலையாளிகளாகத்தான் கருதிக்கொள்கிறார்கள். இல்லை என்றால், “அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் தேக்காதீர்கள்” என்று தமிழக முதல்வருக்குக் கேரள முதல்வர் கடிதம் எழுதுவாரா?

இது தவிர, மறைமுகமாக வெவ்வேறு வகையில் நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கிறது கேரள அரசு. கர்நாடகத்தின் வாட்டாள் நாகராஜன் போல, கேரளாவில் ஒரு நபர் இருக்கிறார். பெயர் ரசூல் ஜோய். தமிழக அரசுக்கு எதிராக அவர் ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்திருக்கிறார். புரிதலற்ற அந்த நபருக்கு அரசு ஆவணங்களையும், புள்ளிவிவரங்களையும் அளித்து ஆதரவு தருகிறது கேரள ஆளும் வர்க்கம்.

சீனிராஜ்

விவசாயிகள் கோபம்

அணையையும், தமிழர்களின் வாழ்வாதாரத்தையும் கட்டிக்காக்க வேண்டியவர்கள் என்பதால், இவ்விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் பொறுமையாகத்தான் இருந்தாக வேண்டியிருக்கிறது. அந்தப் பொறுமையை, காமராஜர் காலம் தொடங்கி மு.க.ஸ்டாலின் காலம் வரையில் தமிழக அரசு காட்டிவருகிறது. கூடவே, தமிழக விவசாயிகளும் அமைதி காத்தார்கள். ஆனால், ‘அணையைப் பலப்படுத்திவிட்டு 152 அடியாகக்கூட உயர்த்திக்கொள்ளுங்கள்’ என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது. இந்த நேரத்தில் 138 அடிக்கு மேல் தேக்காதீர்கள் என்று கேரள முதல்வரே கேட்கிறார் என்றால், விவசாயிகள் பொறுப்பார்களா? தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய தமிழக தேசிய விவசாயிகள் சங்க தேனி மாவட்ட தலைவர் சீனிராஜ், ”பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்பது நம்மைவிட அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அணையின் மொத்த உயரம் 155 அடி. அணையை முழுமையாக நிரப்பினால், 8 ஆயிரம் ஏக்கர் பரப்புக்குத் தண்ணீர் தேங்கி நிற்கும். அந்த 8 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கான குத்தகையைத் தமிழக அரசு ஆண்டுதோறும் கேரளத்துக்கு வழங்கிவருகிறது. ஆனால், 1962 முதல் 1979 வரையிலான 17 வருடங்களில் வெறும் இரண்டே இரண்டு முறைதான் பெரியாறு அணை அதன் முழுக் கொள்ளளவான 152 அடியை எட்டியிருக்கிறது. அதன் பிறகு கேரளா சொன்ன பொய்யால், அது 136 அடியாகக் குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் நீர்த்தேக்கப் பரப்பு 4,677 ஏக்கராகக் குறைநதுவிட்டது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு கேரள அரசும், தனியாரும் சுற்றுலாத் திட்டங்கள், ரிஸார்ட்கள் என்ற பெயரில் மீதியுள்ள நிலத்தை எல்லாம் ஆக்கிரமித்துவிட்டார்கள். கடந்த 2014-ல் நீர்மட்டத்தை நாம் 142 அடியாக உயர்த்தியபோது, பல ரிஸார்ட்களும், தனியார் பங்களாக்களும் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இப்போதும் அந்த ஆக்கிரமிப்புகளைக் காப்பாற்றுவதற்கே கேரள அரசு இவ்வளவு மெனக்கிடுகிறது. அந்த ஆக்கிரமிப்புகள் இருக்கிற வரையில், ஆண்டுதோறும் நம்மை 136 அடிக்கு மேல் தேக்கவிடமாட்டார்கள். எனவே அவற்றை அகற்றக்கோரி, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம்” என்றார்.

அரசியல்வாதிகளின் கள்ள மவுனம்

முல்லை பெரியாறு அணையால் பயன்பெறும் மாவட்டங்களைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகளுக்கு கேரளாவில் எஸ்டேட்களும், தோட்டங்களும் இருக்கின்றன. பொதுப் பிரச்சினைக்காக ஏதாவது பேசினால், தங்கள் சொந்த நலன் பாதிக்கப்படும் என்று அமைதி காக்கிறார்கள் இவர்கள். சில அரசியல்வாதிகள், தங்கள் மாநிலத் தலைவரிடம், “இது ஒவ்வொரு வருஷமும் எழும் பிரச்சினைதான் தலைவரே. ஒண்ணும் ஆகாது” என்று சொல்லி சமரசப்படுத்திவிடுகிறார்கள். தமிழகத்தின் வாழ்வுரிமைப் பிரச்சினையை, ஒரு மாவட்டப் பிரச்சினை போலவே பல அரசியல் கட்சிகள் அணுகுவதற்கு இதுவே காரணம்.

முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையைப் பலப்படுத்தி 152 அடியாக உயர்த்த வேண்டிய காலகட்டத்தை, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் நிதியமைச்சராக இருந்தும் 7 ஆண்டாக வீணடித்தார்கள். பேபி அணையில் 18 மரங்கள் இருக்கின்றன. அவற்றை வெட்ட மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற வேண்டும் என்று காரணம் சொன்னார் ஓபிஎஸ். சேலம் எட்டுவழிச் சாலைக்கு ஒரே மாதத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்களை வெட்ட மத்திய அரசிடம் அனுமதிபெற்ற அவர்களால், 18 மரங்களை வெட்ட அனுமதி பெற முடியாதா என்ன?

அவர்களை, மத்திய அரசின் அடிமைகள் என்று விமர்சித்த திமுக இன்று ஆட்சியில் இருக்கிறது. கேரளா இவ்வளவு கொக்கரிக்கும்போதும், தமிழக நீர்வளத் துறை அமைச்சரும், இந்தத் துறையில் பழம் தின்று கொட்டைபோட்டவருமான துரைமுருகன் அமைதி காப்பது, பொறுமை காரணமாகவா, அல்லது தமிழக உரிமையை விட்டுக்கொடுப்பதற்குத் துணை போகும் செயலா என்பது உண்மையிலேயே விளங்கவில்லை.

தமிழகம் இதுவரையில் இழந்த உரிமைகளையும், கேட்டுப்பெற வேண்டிய நியாயமான உரிமைகளையும் திமுக அரசு மீட்டெடுக்கும் என்று நம்புகிறார்கள் விவசாயிகள். கேரளத்துக்கு விசுவாசமாக, உறுதுணையாக பினராயி விஜயன் இருக்கிறார், தமிழகத்துக்கு உறுதுணையாக நமது முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சரும் இருப்பார்களா என்பது இந்த மாதம் தெரிந்துவிடும்.

x