தேர்தலில் ஓட்டுப் போட்டுவிட்டால் அத்தோடு மக்களின் கடமை முடிந்துபோகிறது. 5 ஆண்டுகளில் ஆட்சியாளர்கள் எவ்வளவு தவறு செய்தாலும், ஆடித்தீர்த்தாலும் அமைதியாக வேடிக்கைதான் பார்க்க வேண்டும். தட்டிக்கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ வழியில்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும், அவரால் ஓட்டுப்போட்டுத் தேர்வு செய்தவர்களுக்கும் இடையிலான உறவு என்பது தேர்தலோடு முடிந்துபோகிறது.
ஆட்சியாளர்களைத் திரும்பப்பெறும் உரிமை
எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானைக் காட்டியே அரசியல் செய்கிற பாஜக அரசுக்கு, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை வெறும் 60 ரூபாய்தான் என்பது தெரியாதா? இந்தியாவின் சில இடங்களில் 120 ரூபாயை எட்டிப்பிடிக்கப் போகிறது. அதாவது, இருமடங்கு விலை. அதில் கணிசமான பங்கு, வரிகள். நாட்டின் பொருளாதாரம் சரியில்லை, வரி வருவாயும் குறைந்துவிட்டது. இப்போதைக்குப் பணக்காரன், ஏழை பாகுபாடில்லாமல் பணம் பறிக்க எளிய வழி பெட்ரோல், டீசல் மீது வரி போடுவதுதான் என்று கண்மூடித்தனமாக வரியையும், விலை உயர்வையும் அமல்படுத்திக்கொண்டே இருக்கிறது மத்திய அரசு. தமிழக அரசுகூட மக்களின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்களில் குடிமக்களின் உணர்வுக்கு நேரெதிராகச் செயல்படுகிறது மத்திய அரசு. கரோனாவை காரணம் காட்டி, பயணிகள் ரயிலை எல்லாம் சிறப்பு ரயிலாக அறிவித்தார்கள். ஓடுவது அதே ஓட்டை உடைசல் ரயில். ஆனால், கட்டணமோ பல மடங்கு அதிகம். பெட்ரோல் பங்க் வாசலிலோ, ரயில் நிலைய முகப்பிலோ நின்று மத்தியில் நடப்பது மக்களாட்சியா? என்று கேளுங்கள், மக்களின் பதில் வேறு மாதிரி இருக்கும். நம் முன்னோர்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் விஷயத்திலும் மக்கள் உணர்வுக்கு மாறாகவே செயல்படுகிறது மத்திய அரசு. மாநில அரசும் கூட, அதே பாதையில் நடைபோடத் தொடங்கியிருக்கிறது என்பதற்கு, அரசுப் பள்ளியின் நலிவும், தனியார் பள்ளிகளின் வளர்ச்சியுமே சான்று.
இன்றைய மக்களாட்சி முறை என்பது, நேரடியாக மக்களாட்சி முறை கிடையாது. வெறுமனே கட்சியின் ஆட்சியாகவே மாறிவிட்டது. பாஜகவுக்கு மக்களின் விருப்பத்தைவிட, ஆர்.எஸ்.எஸ்-ஸின் கொள்கைகளை நிலைநாட்டுவதுதான் முக்கியம். பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளைக் கட்டுப்படுத்த முடியாத திராவிடக் கட்சிகளும்கூட, இருமொழிக்கொள்கையே எங்கள் விருப்பம் என்று மக்கள் விரும்புகிற நவோதயா பள்ளிகளை அனுமதிக்காமல் இருக்கின்றன. இந்தியாவிலேயே கணிசமாக சிமென்ட் உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழகம். ஆனால், விலையோ அண்டை மாநிலங்களைவிட மிகமிக அதிகமாக இருக்கிறது. அதுவும் திமுக ஆட்சிக்கு வந்தால், சிமென்ட் முதலாளிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடுகிறது. பேசிவைத்துக்கொண்டு விலையை உயர்த்துகிறார்கள். பெயருக்கு கொஞ்சம் விலையை குறைக்க வைப்பதும், அரசு சிமென்ட் தயாரிப்போம் என்று சொல்வதும் மட்டுமே தன்னுடைய கடமை என்று மாநில அரசும் விட்டுவிடுகிறது. மத்திய அரசுக்கு அம்பானி, அதானி என்றால், மாநில அரசுக்கு இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் போன்றோரின் நலனே முக்கியம். சில மாநிலங்களில் கட்சியின் முடிவு கூட அல்ல, கட்சித் தலைமையின் முடிவுதான் சட்டமாகவும், திட்டமாகவும் நிறைவேறுகின்றது. இதனால் மக்கள் நலனும், விருப்பமும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
’ஜனநாயக ஆட்சியின் தீமைகளில் இதுவும் ஒன்று’ என்று மேம்போக்காகச் சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. எல்லா நாடுகளிலும் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சிதான் ஆட்சியமைக்கிறது, அதன் கொள்கைகளைத்தான் சட்டமாகவும் திட்டமாகவும் நிறைவேற்றுகின்றது என்பது உண்மைதான். ஆனால், அடுத்த தேர்தல் வரையில் அந்த ஆளுங்கட்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும், அதிகாரங்களும் மக்களுக்கு இருக்கின்றன. முக்கியமான சட்டங்களும், சட்ட திருத்தங்களும் நிறைவேற்றப்படும்போது, அதுகுறித்து மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பும் நடத்தப்படுகிறது. மக்களில் பெரும்பான்மையினர் ஒப்புதல் பெற்றே அவை சட்டமாகின்றன. இந்தியாவில் அப்படியொரு முறையிருந்தால், இன்று வேளாண் சட்டமும், நீட் தேர்வு முறையும் நடைமுறைக்கு வந்திருக்குமா என்பது சந்தேகமே.
அறிஞர் அண்ணா 1962-ல் மாநிலங்களவைவில் பேசும்போது சொன்னார், “விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையும், ஆட்சியாளர்களின் குறிப்பிட்ட செயல்பாட்டுக்கு மக்களின் ஆதரவு உண்டா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளும் கருத்தறியும் வாக்கெடுப்பு முறையும் இல்லாதவரை ஜனநாயகத்துக்கான எந்தப் பயனையும் நாம் எதிர்பார்க்க முடியாது!” என்று. அண்ணாவுக்கு முன்பே, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்திலும் இதுபற்றிய விவாதம் இந்தியாவில் நடந்திருக்கிறது. நம் நாட்டுக்கு ஜனநாயகமே புதிது என்பதால், அதன் அடுத்தகட்டமான இதைப் பற்றி அப்போது அதிக அக்கறை காட்டாமல் விட்டுவிட்டார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் முடிவை அந்நாட்டு அரசு தனித்து எடுக்கவில்லை. உண்மையைச் சொன்னால், நாட்டை ஆண்ட பிரதமருக்கே அதில் துளியும் விருப்பமில்லை. ஆனால், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் (Brexit) பிரிட்டன் விலக வேண்டும் என்றே பெரும்பான்மையானவர்கள் வாக்களித்ததால், நாடு அதில் இருந்து விலகியது. மக்களின் விருப்பத்துக்கு எதிரான மனநிலை கொண்ட பிரதமரும், சொல்லாமலேயே பதவி விலகினார்.
அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற பல நாட்டு வாக்காளர்களுக்குத் தாங்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளையே ‘திரும்பப்பெறும் உரிமை’ இருக்கிறது. இன்னும் சில நாடுகளில் ஊழல் செய்யும் அதிகாரிகளை திரும்பப்பெறும் உரிமையும் இருக்கிறது. நம் நாட்டில் கூட சில மாநிலங்களில், தவறு செய்யும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாம் அவ்வளவு எல்லாம் கேட்கவில்லை. மக்கள் விரோத முடிவுகளை அரசு எடுக்கிறபோது, அந்த முடிவைத் திரும்பப் பெறுகிற அதிகாரமாவது குடிமக்களுக்குத் தரப்பட வேண்டும். ஆள்வோரின் ஒவ்வொரு முக்கியமான முடிவுகளுக்கும், குடிமக்களிடம் விளக்கம் சொல்வதும், அவர்களின் கருத்தைக் கேட்பதும் ஒரு நடைமுறையாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான மக்களாட்சியாக இருக்கும். இல்லையென்றால், தேர்தலுக்கு மட்டுமே மக்களைப் பயன்படுத்திவிட்டு பிறகு அவர்களையே வதைக்கும் சர்வாதிகார, பாசிச ஆட்சிகளுக்கு முடிவுரை எழுதமுடியாது.