"தி.மலையின் இதய துடிப்பான செய்யாற்றை சுரண்டும் மணல் கடத்தலை தடுத்திடுங்கள்"


பிரதிநிதித்துவப் படம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட மக்களின் இதய துடிப்பான செய்யாற்றை சுரண்டி நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க 3 வட்டாட்சியர்களுக்கு ஆரணி கோட்டாட்சியர் எஸ்.பால சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகி செங்கம் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்துக்கும் செய்யாறு பாய்ந்தோடுகிறது. மேலும், ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் மற்றொரு நதியான பீமன் ஆறு, மிருகண்டா நதி ஆகியவை போளூர் அடுத்த சோழவரம் எனும் இடத்தில் செய்யாற்றுடன் இணைகிறது.

இதேபோல், ஜவ்வாதுமலையின் அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு அணையில் இருந்து உருவாகும் கமண்டல நதி மற்றும் அமிர்தி வழியாக நாகநதி ஆகிய இரண்டு துணை நதிகளும் ஆரணி அடுத்த சம்புவராயநல்லூர் கிராமத்தில் கமண்டல நாகநதியாக உருப்பெற்று, வாழைப்பந்தல் எனும் இடத்தில் செய்யாற்றுடன் இணைக்கிறது.

பின்னர், காஞ்சிபுரம் அருகே பழையசீவரம் எனும் கிராமத்தில் பாலாறு நதியுடன் இணைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதனால், செய்யாற்றில் 5 கி.மீ., தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை.

செய்யாறு என்பது திருவண்ணாமலை மாவட்டத்தின் இதய துடிப்பாகும். குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாய சாகுபடிக்கு முக்கிய பங்காற்றுகிறது. இதன்மூலம் செங்கம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு மற்றும் வந்தவாசி உள்ளிட்ட வட்டங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வுக்கு உற்ற துணையாக உள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், செய்யாற்றில் மணல் பரப்பும் கிடுகிடுவென உயர்ந்தது.

இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மணல் கடத்தும் கும்பலால் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆற்றில் மணல் எடுக்க தடை உள்ள நிலையில், செய்யாற்றில் இருந்து இரவு, பகல் பாராமல் மணல் கடத்தல் தடையின்றி நடைபெறுகிறது. மாட்டு வண்டிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மணலை கடத்தி, குறிப்பிட்ட இடத்தில் பதுக்கி வைத்து டிப்பர் லாரிகளில் கடத்தப்படுகின்றன. மேலும், ‘பொக்லைன்' இயந்திரம் மூலமாகவும் நேரிடையாக டிப்பர் லாரிகளிலும் மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதற்கு, அரசு இயந்திரத்தில் உள்ளவர்களின் அரவணைப்பு உள்ளது.

மணலை கடத்திக்கொண்டு அசுர வேகத்தில் இயக்கப்படும் டிப்பர் லாரிகளால் கிராம மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்து செல்வதற்கு கூட கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் அவர்கள், இரவு நேரத்தில் உறக்கத்தை தொலைத்துவிட்டனர். கேள்வி எழுப்பினால் பகிரங்கமாக மணல் கடத்தும் கும்பல் கொலை மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகிவிட்டது. மணல் கடத்தல் கும்பலை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற கிராம மக்களின் கோரிக்கை கானல் நீராக உள்ளது. நடவடிக்கை என்ற பெயரில் கண் துடைப்பு நாடகம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கலசப்பாக்கம், ஆரணி மற்றும் போளூர் வட்டாட்சியர்களுக்கு ஆரணி கோட்டாட்சியர் எஸ்.பாலசுப்பிரமணியன் கடந்த 14-ம் தேதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “செய்யாறு, கமண்டல நாகநதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. எனவே, தங்களது வட்டங்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் மணல் கடத்தலை முழுமையாக தடுக்க வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கடத்தலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை அனுப்பி வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

செய்யாற்றை சுரண்டுவதால் அது பாலைவனமாக மாறுவதற்கு முன்பாக தமிழக அரசும், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்து பாதுகாக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகும். மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுப் பார்களா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.