கட்சிக்கும், மக்களுக்கும் உண்மையாக இருங்கள்: திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


சென்னை: வாய்ப்பு வழங்கிய கட்சிக்கும், வாக்களித்த தமிழக மக்களுக்கும் மிக மிக உண்மையாக இருங்கள் என்று திமுக எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது:

நாற்பதுக்கு நாற்பது என்று சொல்லி பிரச்சார பயணத்தை நான்தொடங்கினேன். அந்த வெற்றியை அடைந்து விட்டோம். முழுமையான வெற்றியைப் பெறுவது என்பது சாதாரணமான சாதனை அல்ல, வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும். இந்த சாதனை வரலாற்றில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதுதான் உங்களுக்கான பெருமை. வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்ற அடிப்படையில்தான் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

உங்களுக்கு இத்தகைய பெரிய வாய்ப்பை அளித்த கட்சிக்கும், உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் மிக மிக உண்மையாக இருங்கள். இதுதான் கட்சி தலைவர் என்ற முறையில் நான் வைக்கும் வேண்டுகோள். திமுக என்ற கொள்கை குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி செல்லும் நீங்கள், என் பெயரையும், கட்சியின் பெயரையும் காப்பாற்ற வேண்டும்.

ஒரு சில மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் லேசாக மாறி இருந்தால் மத்தியில் ‘இண்டியா’ கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும். 370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி 240-க்கு இறங்கி விட்டது பாஜக. இந்த சூழலில் நாம் தமிழகத்துக்கான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாட வேண்டும். போராட வேண்டும்.

ஏராளமான வாக்குறுதிகளை நாம் மக்கள் மன்றத்தில் வைத்தோம். அவை அனைத்தையும் நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து அதனை செயல்பட வைக்க வேண்டும். பலவீனமான பாஜக அரசை, நம்முடைய முழக்கங்களின் மூலமாக செயல்பட வைக்க வேண்டிய கடமை உங்கள் அனைவருக்கும் இருக்கிறது. கடந்த முறை எதிர்க்கட்சி வரிசையில் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த முறை 234 உறுப்பினர்கள் இருக்கப் போகிறார்கள். ஒருவிதத்தில் பார்த்தால் பாஜகவுக்கு சரிக்கு சமமாக ‘இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் இருக்கப் போகிறோம். இந்த வாய்ப்பை ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.

தொடர்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கும், வெற்றிக்கு வழிநடத்திய திமுக தலைவருக்கும், தோழமைக் கட்சி தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, தேர்தல் வெற்றிக்கு தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, இந்தியாவே வியந்துபார்க்கும் வெற்றிக்கு அழைத்துச் சென்ற திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக வரும் ஜூன் 14-ம் தேதி கோவையில் கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட தேசத் தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தின் திட்டங்களுக்காக, நிதியுரிமை, மொழியுரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் அயராது குரல் கொடுப்போம் என நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் உறுதி கொள்கிறோம். நீட் எனும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த கோரிக்கையை முதல்வர்கள் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியில் சிஐஎஸ்எஃப் வீரர்களை ஈடுபடுத்துவதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, பிஎஸ்எஸ் அணியினரையே மீண்டும் ஈடுபடுத்த வலியுறுத்துகிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன