“சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்” என்று ஓபிஎஸ் கொளுத்திப் போட்ட நெருப்பு, அதிமுகவுக்குள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது.
இதற்கு முன்பும் பலமுறை இதே கருத்தை வலியுறுத்திப் பேசி இருக்கிறார் ஓபிஎஸ். ஆனால், அப்போதெல்லாம் பெரிதாகப் பேசப்படாத இந்த விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. “சசிகலாவையும் அவரைச் சார்ந்தவர்களையும் எதிர்த்துத்தான் அண்ணன் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் என்பதை நினைவுபடுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது” என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
தன்னைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கில், நாளை விசாரணை வருகிறது. ஏற்கெனவே, ஈபிஎஸ், செம்மலை தரப்பு வாதங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில். நாளைய விசாரணையில் ஓபிஎஸ் தரப்பு வாதம் எடுத்துவைக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில் ஓபிஎஸ் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்துச் சொல்லி இருப்பது, எதற்காக என்பதே இப்போது அதிமுக நிர்வாகிகள் மட்டத்தில் பெரும் கேள்வியாக இருக்கிறது.
அதிமுக தரப்பில் ஓபிஎஸ் கருத்து பிரதானமாகப் பேசப்பட்டாலும் சசிகலா தரப்பில் இதுபற்றி பெரிய அளவில் சலனம் காட்டாமல் இருக்கிறார்கள். கேட்டால், “ஓபிஎஸ் நம்பிக்கைக்குரியவராக இல்லை. இதற்கு முன்பு அதிமுக செயற்குழுவில் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துகளை பேசிவிட்டு வெளியில் வந்ததும் அப்படியே அதை மறந்துவிட்டு ஈபிஎஸ்ஸுடன் சமரசம் ஆகிவிட்டார். அப்படித்தான், இவருக்காக ஈபிஎஸ்ஸைப் பகைத்துக் கொண்டு பாமகவுக்கு பதிலடி கொடுத்த பெங்களூரு புகழேந்தியை, கட்சியைவிட்டு நீக்க கையெழுத்துப் போட்டார் ஓபிஎஸ். எனவே, அவருடைய இப்போதைய கருத்து எங்களை பெரிதாக ஒன்றும் பாதிக்கவில்லை” என்கிறது சசிகலா தரப்பு.
ஓபிஎஸ் தரப்பிலோ, “இப்போதும் பேசாமல் இருந்தால் என்ன செய்வது? அதிமுகவுக்கு இனிமேல் இரட்டைத் தலைமை எல்லாம் சரிப்பட்டு வராது. ஒரே தலைமையின்கீழ் இருந்தால்தான் கட்சியை வலுப்படுத்தி திமுகவைச் சமாளிக்கமுடியும். இதைத் தொண்டர்களுக்கு உணர்த்தவே ஓபிஎஸ் அண்ணன் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்காக, தனது தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் என அவர் நினைக்கவில்லை. இப்போதைக்கு கட்சிக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தொண்டர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை உண்டாக்க வேண்டும் என்றால், சசிகலாவை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும். அவரைப் பொதுச்செயலாளர் ஆக்கிவிட்டு தானும் ஈபிஎஸ்ஸும் ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கலாம் என்பதே அண்ணனின் யோசனை” என்று சொன்னவர்கள், “முன்னாள் சபாநாயகர் அண்ணன் காளிமுத்து 1992-ல் புரட்சித் தலைவியை, ‘வசந்த சேனை, பால்கனி பாவை’ என்றெல்லாம் விமர்சித்தவர். அப்படிப்பட்டவரையே மன்னித்து 2001-ல் சபாநயகர் இருக்கையில் உட்காரவைத்தார் அம்மா. எனவே, அரசியலில் பழைய சம்பவங்களையே பேசிக்கொண்டிருந்தால் நமக்கான இருப்பைத் தொலைத்துவிடுவோம். இதை உணர்ந்துதான் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் அண்ணன் ஓபிஎஸ்.
ஜெயக்குமார் சொல்வது போல், சசிகலா குடும்பத்தினரால் உச்சபட்சமாக அவமானப்படுத்தப் பட்டவர்தான் அண்ணன் ஓபிஎஸ். ஆனால், அதையே காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதால்தான், அதையெல்லாம் மறந்து தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய எண்ணமெல்லாம் அதிமுக என்ற கட்சியின் கட்டுக்கோப்பு சிதைந்துவிடக்கூடாது என்பதுதான். அந்த எண்ணத்தில்தான், ஈபிஎஸ் தரப்பினரால் தரப்படும் அவமானங்களை எல்லாம் இன்னமும் சகித்துக் கொண்டு அமைதி காக்கிறார். அதைப் போலவே கட்சியின் சீனியர்களும் சசிகலாவால்தானே நாமும் பாதிக்கப்பட்டோம். அவர் உள்ளே வந்தால் நமது எதிர்காலம் என்னாகுமோ என்றெல்லாம் யோசிக்காமல், கட்சி நலனைக் கருதி இந்த விஷயத்தில் கருத்துச் சொன்னால் சரியாக இருக்கும்” என்றனர்.
இதனிடையே, “அரசியலில் தன்னை தேவரினத்தின் அடையாளமாகக் காட்டிக்கொள்ள நினைக்கும் ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஆதரவாக இப்போது கருத்துச் சொல்லி இருப்பது தேவர் ஜெயந்திக்காகத்தான். அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி முடிந்து விட்டால், அவர் பழையபடி அமைதிப் புயலாகி விடுவார்” என்றும் அதிமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.