’சஞ்சய் தத்துக்காக கைகோர்த்த பாலிவுட் பிரபலங்கள், ஷாருக் விவகாரத்தில் ஒதுங்கி நிற்பது ஏன்’ என பழைய வீடியோ ஒன்றை வைரலாக்கி, ஷாருக் ரசிகர்கள் நியாயம் கேட்கின்றனர்.
1993 மும்பை குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையின்போது,பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கப்பட்டிருந்த ஏ.கே 56 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை தனிப்படை போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பான வழக்கில் ’தடா’ சட்டத்தின்கீழ் சஞ்சய் கைது செய்யப்பட்டார்.
’தானே’ சிறையில் சஞ்சய் அடைக்கப்பட்டிருந்தபோது, அப்போதைய பாலிவுட் பிரபலங்கள் பல்வேறு பொதுநிகழ்வுகளில் பங்கேற்று சஞ்சய்க்கு ஆதரவு தெரிவித்தனர். சல்மான்கான், அக்ஷய்குமார், ஆஷா பரேக், அம்ரிஷ் பூரி உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த நிகழ்வில், சஞ்சய்க்கு ஆதரவாக ஷாருக்கானும் பேட்டி தந்திருந்தார். ’சஞ்சு நாங்கள் உன் பக்கமிருக்கிறோம்’ என்னும் வாசகங்கள் தாங்கிய போஸ்டருடன் ஷாருக் உள்ளிட்ட நடிகர்கள் காட்சி தந்தனர்.
அந்த வீடியோவை தூசுதட்டி தற்போது பகிர்ந்து வரும் ஷாருக் ரசிகர்கள் மற்றும் அபிமானிகள், ஷாருக் மகன் ஆர்யன் கானுக்காக பாலிவுட்டில் எவரும் திரண்டு ஆதரவு தெரிவிக்காதது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசியல் மோதல் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஷாருக்கின் பிரபல்யமும், ஆர்யன் கானும் பலிகடாவாகி இருப்பதாக ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.
ரசிகர்களின் ஆதங்கத்துக்கு வலுசேர்க்கும் வகையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவாப் மாலிக் உள்ளிட்ட பலரும் ஆர்யன் கான் கைதின் பின்னே பெரும் அரசியல் இருப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர். அவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், நாளொரு காட்சி ஆர்யன் கான் வழக்கில் அரங்கேறி குழப்பம் ஏற்படுத்தி வருகின்றன.
வழக்கை விசாரிக்கும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குநரான சமீர் வான்கடே மீது, ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடிக்கு பேரம் பேசியதாக புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆர்யன் கைதானபோது, அவருடன் செல்ஃபி எடுத்து பிரபலமான கோஸாவியின் சகாவான பிரபாகர் சாயில் என்பவர் இந்த பரபரப்பை கிளப்பி உள்ளார்.