நீதிபதி அறையில் என்னை தனியாக சந்திக்க வர வேண்டாம்: ஜி.ஆர்.சுவாமிநாதன் வேண்டுகோள்


மதுரை: சென்னையை சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விடுமுறைகால நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பாலாஜி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என அதிகாரம் மிக்க நபர்கள் தன்னிடம் கேட்டுக் கொண்டதால், வழக்கை அவசரமாக விசாரித்தாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரத்தில், தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, நீதிபதி பாலாஜி விசாரணையை தள்ளிவைத்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிபதி அறையில் தன்னை சந்திக்க வேண்டாம் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக 12-வது நீதிமன்ற அரங்கில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில், “வழக்கறிஞர்கள் என்னை நீதிமன்ற அறையில் சந்திக்க வர வேண்டாம். என்னிடம்சொல்ல வேண்டியதை, நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்கு அழைக்க வேண்டாம்.

இந்த மாதம் 3 நிகழ்வுகளில் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளேன். அந்த நிகழ்வுகளில் பங்கேற்பேன். அதற்குப் பிறகு என்னை அழைத்து, தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு நோட்டீஸில், “தேதி குறிப்பிட்டு தள்ளிவைக்கப்பட்ட வழக்குகள், அந்த தேதியில் எடுக்கப்படும். மற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு மூப்பு அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். பட்டியலில் உள்ளவழக்குகளை முன்கூட்டியே விசாரணைக்கு எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்க அனுமதியில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

x