எகிறும் சமையல் எரிவாயு விலை காரணமாக, மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு வழங்கிய இலவச சிலிண்டர்கள் காயலான் கடைக்குப் போகின்றன என காங்கிரஸ் தலைவர் கமல்நாத் குற்றம் சாட்டியுள்ளார்.
வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியிருக்கின்றன. சமையல் எரிவாயு விலையோ ரூ.1,000-ஐ நெருங்கி உள்ளது. பொதுமக்கள் மத்தியில் எரியும் இந்த பிரச்சினையை சரிகட்ட, கவர்ச்சிகரமான பல்வேறு இலவசத் திட்டங்களை பாஜக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அப்படி மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச எரிவாயு சிலிண்டர்கள், ஒருமுறை உபயோகத்துக்குப் பின்னர் காயலான் கடைக்குச் சென்றுள்ளன.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் ம.பி மக்களுக்கு கேஸ் ஸ்டவ், எரிவாயு இணைப்பு, எரிவாயு சிலிண்டர் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. முதல் சிலிண்டர் இலவசம் என்றபோதும் அடுத்த சிலிண்டர் நிரப்பல்களுக்கு உரிய விலை கொடுத்தாக வேண்டும். இலவச இணைப்பு என்றதும் அடித்துபிடித்து கேஸ் இணைப்பு வாங்கிய பொதுமக்கள், அடுத்த சிலிண்டருக்கு எரிவாயு விலையை கேட்டதும் வெறுத்துப் போகிறார்கள். இப்படி இலவச சமையல் எரிவாயுக்கு முழுக்கு போட்டவர்களால், காயலான் கடைகளில் சிலிண்டர்கள் குவிந்து வருவதாக குற்றம்சாட்டுகிறார் கமல்நாத்.
ம.பி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் இது தொடர்பாக பிந்த் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, பாஜகவை சாடியுள்ளார். பாஜக அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் கமல்நாத், ஜபல்பூரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தொடக்கிவைத்த உஜ்வாலா யோஜனா திட்டத்தையும் குறிப்பிட்டு ம.பி மாநிலத்தின் நிலை இதுதான் என விமர்சித்துள்ளார்.
கமல்நாத் குமுறலை காதில் போட்டுக்கொள்ளாத மத்திய பிரதேச பாஜகவினர், அவரை மேலும் வெறுப்பேற்றும் வகையில் இன்னொரு காரியத்தைச் செய்தனர். மோடி தலைமையிலான நல்லாட்சியில் 100 கோடி தடுப்பூசிகளை நாடு சாதித்திருப்பதாக ஊருக்கு ஊர் பிரம்மாண்ட பேனர்களை நிறுவி வருகின்றனர். அதில், தடுப்பூசியால் பயனடைந்த பொதுஜனமாக கமல்நாத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தையும் பெரிய அளவில் சேர்த்துள்ளனர்.