அழகு ஓவியங்களால் பளிச்சிடும் அரசுப் பள்ளிகள்!


பஸ் வசதி கூட இல்லாத அந்தக் கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியின் சுவர்களில், அழகழகாய் கார்ட்டூன் பொம்மைகளை வரைந்து கொண்டிருந்த லுங்கி வேட்டி, பனியன் ஆசாமிகள் எல்லாம் ஆசிரியர்கள் என்று சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை.

இவர்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்க்காரர்கள். ‘பட்டாம்பூச்சிகள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு குழுவாக இயங்கும் இவர்கள், வார விடுமுறை நாட்களில் கிராமத்துப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, இப்படி கார்ட்டூன் பொம்மைகளை வரைந்து கொடுக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 250 பள்ளிகளில், இவர்கள் இப்படி அழகோவியம் தீட்டியிருக்கிறார்கள். கரோனா காலத்தில் மட்டும், 54 பள்ளிகள் இவர்களின் தூரிகையால் புதுப் பொலிவு பெற்றுள்ளன.

இந்த ஆசிரியர்கள், கோவை கணுவாய்பாளையம் ஆரம்பப்பள்ளியில் ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு சென்றோம். சந்தோஷ்குமார், ரவிச்சந்திரன், கார்த்திகேயன், ஹரிகிருஷ்ணன் என்ற அந்த ஆசிரியர்கள் நால்வருமே, திருப்பூரில் வெவ்வேறு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள். இவர்களில் சந்தோஷ்குமார் இந்தப் பணி குறித்தும், பட்டாம் பூச்சிகள் குழு குறித்தும் விளக்கினார்.

ரவிச்சந்திரன், சந்தோஷ்குமார், கார்த்திகேயன், ஹரிகிருஷ்ணன்.

“தேனியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜசேகர் 2016-ல் ‘அரசுப் பள்ளி காப்போம்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். விடுமுறை நாட்களில் அரசுப் பள்ளிகளுக்கு ஓவியங்கள் தீட்டி, குழந்தைகளை அரசுப் பள்ளிகளை நோக்கி வரவைப்பதுதான் அதன் நோக்கம். இதற்கான செலவுகளை ஆசிரியர்களே பங்கிட்டுக் கொண்டார்கள். ஆசிரியர்கள் வரைந்த ஓவியங்களைப் பார்து, பக்கத்து கிராமத்துப் பள்ளிகளிலும் ஓவியங்கள் வரைய அழைத்தார்கள். அப்போது ஓவியத்தில் ஆர்வம் உள்ள மற்ற ஆசிரியர்களும் குழுவில் சேர்ந்தார்கள். அப்படித்தான் நானும் 5 வருடம் முன்பாக இந்தக் குழுவில் இணைந்தேன்.

நான் ஓவிய ஆசிரியர் இல்லை. குழுவில் சேர்ந்தே இந்தக் கார்ட்டூன் பொம்மைகள் வரையக் கற்றுக் கொண்டேன். ஓவியங்கள் வரைய நாங்கள் பல இடங்களுக்கும் சிறகடித்துப் பறந்ததால் ‘அரசுப் பள்ளி காப்போம் இயக்கம்’ என்ற பெயரை ‘பட்டாம்பூச்சிகள் இயக்கம்’ என்று மாற்றி விட்டோம். மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது பாதிக்காத வகையில், விடுமுறை நாட்களில் மட்டுமே நாங்கள் கையில் தூரிகை எடுக்கிறோம். போகும் இடங்களில், ஓவியத்தின்பால் ஆர்வம் கொண்டு எங்கள் குழுவில் இணைய விரும்புகிறவர்களையும் சேர்த்துக் கொள்கிறோம்’’

என்றவரிடம், ‘‘பள்ளி ஆசிரியர்களான நீங்கள் இப்படி லுங்கி கட்டிக்கிட்டு, பெயின்ட், பிரஸ் எடுத்து வேலை செய்கிறீர்களே... கூச்சமாக இல்லையா?’’ எனக் கேட்டோம்.

‘‘முதலில் கொஞ்சம் கூச்சமாத்தான் இருந்தது. பிறகு பழகி விட்டது. தவிர, இதைப் பள்ளி லீவு நாட்களில்தானே வரைகிறோம். அந்த நாளில் யாரும் வரமாட்டாங்க’’ என்றவர், எந்தப் பள்ளியில் எந்த மாதிரியான ஓவியங்களை வரைகிறோம். எந்த மாதிரியான பள்ளிகளை இதற்கு தேர்ந்தெடுக்கிறோம் என்பதையும் விளக்கினார்.

‘‘ஓவியங்களுக்கு தனியாக கேட்லாக் வைத்திருக்கிறோம். அதை கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியரிடம் காட்டி அப்ரூவல் வாங்கிடுவோம். அதையே பள்ளிக்கு வெளியே வரைவோம். வகுப்பறைக்குள் பாடம் சம்பந்தப்பட்ட படங்களை ஆசிரியர்களைக் கேட்டு வரைவோம். ஒரு வட்டாரத்தில் ஒரே ஒரு ஸ்கூலுக்கு போய் படம் வரைந்து வந்தால் போதும். பக்கத்தில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்துவிடுகிறது. எங்களை அழைக்கும் பள்ளிகள் பற்றிய விவரங்களை பதிவுசெய்து வைத்துக்கொண்டு, சீனியாரிட்டிப் படி படங்களை வரைந்து கொடுப்போம். மலைவாழ் மக்கள் வசிக்கும் பள்ளிகள் என்றால் முதலிடம் தருவோம். சுவர்களுக்கு முறையா சுண்ணாம்பு அடிச்சுக் குடுத்துட்டாங்கன்னா, அஞ்சு பேர் ரெண்டு நாள் அங்கேயே தங்கியிருந்து ஓவியங்களை வரைஞ்சு முடிச்சிட்டுத்தான் ஊருக்குக் கிளம்புவோம்’’ என்றார் சந்ஷோஷ்குமார்.

தொடர்ந்து பேசிய ஆசிரியர் ரவிச்சந்திரன், “மாதத்துக்கு 4 சனிக்கிழமை, 4 பள்ளிக்கூடம் என்பது எங்க கணக்கு. இப்படி போன 3 மாதத்தில் ஒருநாள் கூட எங்களுக்கு லீவு இல்லை. கொஞ்சம் வசதியான மக்கள் வசிக்கும் ஊர்ல படம் வரைஞ்சா அவங்க ஒரு தொகை கொடுப்பாங்க. அந்தத் தொகையை வசதியில்லாத மலைமக்கள் வசிக்கும் ஊர்ப் பள்ளியின் பெயின்ட் செலவுக்கு பயன்படுத்திக்குவோம்” என்றார்.

‘‘சரி, இப்படி பள்ளிக்கூடங்களில் படங்களா வரைவதால் மாணவர்களுக்கு என்ன பயன்?’’ என்று கேட்டதற்கு, ‘‘வெறுமனே பெயின்ட் அடிச்சு வர்ணமா பள்ளிக்கூடம் இருப்பதை விட அதில் குழந்தைகள் விரும்பும் பொம்மைப் படங்களும் இருந்தா, அதைப் பார்த்து குழந்தைகள் இந்தப் பள்ளிக்கு வர ஆர்வம் காட்டும். இதுபோன்ற சூழலில் கல்வி கற்கும்போது கற்பனை வளமும் பெருகும். முன்பெல்லாம் பள்ளிக்குழந்தைகள் சுவற்றில் கிறுக்குவாங்க. பெயின்டை சுரண்டி அசிங்கப்படுத்துவாங்க. இப்ப ஓவியம் வரைஞ்ச பள்ளிகள்ல அப்படி யாரும் சுரண்டுவதில்லை. அசிங்கப்படுத்துவதில்லை. மாறாக, பல பள்ளிகளில் இந்தப் படங்களைப் பார்த்து குழந்தைகள் அவங்கவங்க நோட்டுல இதே பொம்மை படங்களை வரைஞ்சு வச்சிருக்காங்க.

தனியார் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும்கூட இது போல ஓவியம் வரைந்து தரச் சொல்லி கூப்பிடறாங்க. நாங்க போவதில்லை. எங்களுடைய நோக்கம் எல்லாம் அரசுப் பள்ளிகள் இப்படி ஓவியங்களால் அழகுபெற வேண்டும் அதை நோக்கி குழந்தைகள் கல்விகற்க திரளாக வரவேண்டும் என்பதுதான். இதுவரை நாங்கள் ஓவியங்கள் வரைந்த பள்ளிகளில் எல்லாம் மாணவர் வருகை கூடியிருக்கிறது’’ என்று பூரிப்புடன் சொன்னார் ரவிச்சந்திரன்.

அப்துல் கலாம் ஓவியத்துடன் நால்வர்

கணுவாய்பாளையம் பள்ளியில், இவர்கள் அப்போதுதான் ஓவியங்களைத் தீட்ட ஆரம்பித்திருந்தார்கள். அதனால் கடந்த வாரங்களில் தாங்கள் ஓவியம் தீட்டிய கோபனாரி, நீலம்பதி ஆகிய கிராமத்துப் பள்ளிகளுக்கு நம்மை அழைத்துச் சென்று காட்டினார்கள்.

உண்மையிலேயே அவை அரசுப் பள்ளிகள்தானா என்று சந்தேகம் வந்தது. அப்படியொரு ஜொலிப்பு. ‘அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுகமா இருக்காங்க. வருடத்தில் பாதி நாட்கள் விடுமுறை. அதுவும் இந்தக் கரோனா காலத்தில் ரொம்பவே வசதி. வருஷக் கணக்கா வேலையே செய்யலை. ஆனா, சம்பளம் மட்டும் வந்துடுது’ என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், பொத்தாம் பொதுவில் அனைவரையும் அப்படிச் சொல்லிவிட முடியுமா? இந்த பட்டாம்பூச்சி குழுவைப் போன்ற ஆசிரியர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்!

x