கோவா நோக்கிப் பாயும் மம்தா!


மம்தா பானர்ஜி

மேற்குவங்கம் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பாஜகவை வீழ்த்தும் நோக்கிலான தனது கோவா விஜயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து, பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே மூண்ட அரசியல் மோதல், தேர்தல் முடிவில் மம்தா வென்று முதல்வரான பின்னரும் தொடர்கிறது. அதன் அடிப்படையில் மேற்கு வங்கத்தின் மாற்றத்தை இந்தியா முழுக்க கொண்டுவருவேன் என்று சூளுரைத்திருக்கும் மம்தா, அதற்காக பாஜக எதிர்ப்பு கட்சிகளை ஒன்றிணைக்க முயன்று வருகிறார். டெல்லி சென்று சோனியா காந்தி போன்ற தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்து திரிணாமுலுக்கு வாய்ப்புள்ள மாநிலங்களில் காலூன்றவும் முடிவு செய்தார். திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் செல்வாக்கு பெற்றிருக்கும் மம்தா பானர்ஜி, அதே நோக்கில் இதர சிறிய மாநிலங்கள் பக்கம் திரும்பினார்.

லூய்சின்ஹோ பலேரோ உடன் மம்தா

மம்தாவுக்கு ஆதரவான காற்று கோவாவிலிருந்து வீசியது. கோவா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் எம்எல்ஏ-வுமான லூய்சின்ஹோ பலேரோ, ’மம்தாவால் மட்டுமே பாஜகவை வீழ்த்தி நாட்டுக்கு மாற்றத்தை தரமுடியும்’ என்று திரிணாமுல் கட்சிக்குத் தாவினார். அவர் திரிணாமுலின் துணைத் தலைவராக்கப்பட்டதை தொடர்ந்து, கோவா சுயேச்சை எம்எல்ஏவான பிரசாத் கோன்கர் என்பவரும் பச்சைக்கொடி காட்டியுள்ளார். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில்இ கோவா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிறுத்தி அங்கு ஆளும் பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்து, தேர்தலில் போட்டியிட திரிணாமுல் கட்சி முடிவு செய்துள்ளது.

இவற்றைத் தொடர்ந்து கோவாவுக்கான மம்தாவின் விஜயம் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இன்று(அக்.23) காலை அது தொடர்பான அறிவிப்பை மம்தா பானர்ஜி வெளியிட்டார். அதில் கோவா மக்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்புவிடுத்த மம்தா, ’பாஜகவின் பிரித்தாளும் போக்கை தடுக்க அதன் 10 ஆண்டு ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் வாருங்கள்’ என கோரிக்கை வைத்துள்ளார். கோவாவில் மக்களின் ஆட்சி அமைவதன் மூலம், புதிய விடியலை கொண்டு வருவோம் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார். இந்த அறிவிப்பின்படி அக்.28 அன்று மம்தா கோவா செல்கிறார்.

மம்தா பானர்ஜி

திரிணாமுல் கட்சிக்குத் தாவும் உள்ளூர் தலைவர்களால் தங்களுக்கு பாதிப்பு இல்லை என்கிறது கோவா பாஜக. அந்த தலைகளில் கணிசமானவர்கள் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்பதால், மம்தாவால் காங்கிரஸ் ஓட்டுகளையே பிரிக்க முடியும் என்றும் பாஜக அலட்சியம் செய்கிறது. பாஜகவுக்கு எதிராக இணைவோம் என்று காங்கிரஸை பிரிக்கும் திரிணாமுல் போக்கால், காங்கிரஸ் மேலிடமும் எரிச்சல் அடைந்துள்ளது. இதனால் மம்தா எதிர்பார்க்கும் கோவா கூட்டணி அதன் தொடக்கத்திலேயே சங்கடங்களை எதிர்கொண்டுள்ளது.

ஆனால், அதிரடி அரசியலுக்குப் பேர்போன மம்தாவின் அடுத்த கட்ட நகர்வைப் பொறுத்தே, இதர அரசியல் மாற்றங்களை கணிக்க முடியும். மேற்கு வங்கத்தின் அரசியல் மாற்றத்தை கோவாவில் அவர் கொண்டுவரும் பட்சத்தில், மம்தா மீதான நாடு தழுவிய பார்வையும் மாறும். பிராந்திய தலைவரான மம்தா, தேசியத் தலைவராக மாறவும் வாய்ப்பாகும். பிராந்தியத்திலிருந்து தேசியத்துக்கு முன்னேறும் வகையில், தவிர்க்க இயலாது மோடியின் அடியொற்றி தனது அரசியல் பயணத்தை மம்தாவும் தீர்மானிக்க நேரிடும்.

x