4 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களும் அமைப்பாய் திரளட்டும்!


கட்டுமான தொழிலாளர்கள், உணவு விடுதிகளில் உதவிப் பணி செய்பவர்கள், வீட்டுவேலை செய்வோர், பனியன் உள்ளிட்ட ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள், வீதியோர உதிரி வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துவரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர்.

இவர்களில் பலர் தங்களுடைய சொந்த ஊரையும் உற்றார் உறவினர்களையும் விட்டு, நகரங்களுக்கு வேலை தேடி வந்த புலம்பெயர் தொழிலாளர்களே. கரோனா பெருந்தொற்று உலகை ஸ்தம்பிக்க வைத்ததும் முதலில் வேலையும் கூலியும் பறிபோனது இம்மக்களுக்கே. அன்றாட வருமானத்தை மட்டுமே நம்பி இருந்தவர்களுக்கு, வேலை இப்போதைக்கு இல்லை என்றதும் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை.

வீடின்றி எப்படி வீடடங்குவது?

கரோனா முதல் அலையில் 4 மணிநேர இடைவெளியில் 21 நாள் முழு ஊரடங்கை மத்திய அரசு பிறப்பித்தது. மக்கள் அனைவரும் வீடடங்கி இருக்கும்படி அரசு அறிவித்ததும், வீடிருந்தால்தானே என்ற துயரகரமான கேள்வி இம்மக்களுக்கு எழுந்தது. எப்படியாவது பிறந்த மண்ணை சென்றடைந்துவிடலாமென சாரை சாரையாகச் சொந்த ஊர் நோக்கி நடந்தே சென்ற புலம்பெயர் தொழிலாளர்களை, கரோனா காலத்தில் ஒட்டுமொத்த தேசமும் மவுன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்து.

உண்ண உணவு, பருக நீர்கூட இன்றி பரிதாபமாக உயிரிழந்தவர்களையும் கண்டது. பிஹார் மாநிலம் முசாபர்பூர் ரயில் நிலையத்தில், புலம்பெயர் தொழிலாளரான தன்னுடைய தாய் இறந்துகிடப்பதுகூட அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தையின் காணொலி நாட்டின் மனசாட்சியை உலுக்கியது.

பலியானவர்கள்!

இதைவிடக் கொடுமை, பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சொந்த ஊரை சென்றடைய ரயில் பாதை மேல் கால்கடுக்க நடந்த 16 புலம்பெயர் தொழிலாளர்கள், சரக்கு ரயில் மோதி பலியான சம்பவம். இது மட்டுமே தலைப்பு செய்தியானது.

ஆனால், 2020-ம் ஆண்டில் ரயில் பாதை வழி ஊர்சேர முயன்று பலியான புலம்பெயர் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை என்ன தெரியுமா? ரயில்வே வாரியம் வெளியிட்ட அதிகாரபூர்வமான தகவலின்படி 8,733 தொழிலாளர்கள். இதுதவிர, காயங்களுடன் உயிர் தப்பியவர்கள் 805 பேர்.

எந்தப் பாதுகாப்பாவது உண்டா?

ஊரடங்கு தளர்த்தப்பட்டு போக்குவரத்து திறந்துவிடப்பட்ட பிறகும் இவர்களில் பலர், கை செலவுக்குப் பணமின்றி நடந்தே செல்ல நிர்பந்திக்கப்பட்டவர்கள். சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காகச் செயலாற்றி வரும் ’ஸ்வான்’ அமைப்பு, இது தொடர்பாக 11 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்களிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில் 96 சதவீத புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரேஷன் அட்டை இல்லாதது தெரியவந்தது. 89 சதவீதத்தினருக்கு ஊடரங்கு காலத்தில் கூலி மறுக்கப்பட்டதும் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது.

கரோனா பரவல் தீவிரம் குறைந்து பலர் பணிச்சூழலுக்குத் திரும்பிய பிறகும் அமைப்புசாரா தொழிலாளர்கள், அதிலும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. காரணம் முதலாவதாக நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த எந்தக் கணக்கெடுப்பும் நடத்தப்படாமலே இருந்தது. இதை செப்டம்பர் 2020-ல் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், அப்போது தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த சந்தோஷ் கேங்வார் ஒப்புக்கொள்ளவும் செய்தார். கரோனா காலத்தில் நகரங்களைவிட்டு ஊர் திரும்பிய அமைப்புசாரா தொழிலாளர்கள், செல்லும் பாதையில் உயிரிழந்தவர்கள் குறித்த தரவுகள் இல்லை என்று கைவிரித்தார்.

பணி பாதுகாப்போ, சமூகப் பாதுகாப்போ இல்லாத சூழலுக்குத் தள்ளப்பட்ட இம்மக்களின் நிலையை மாற்ற வேண்டுமானால், முதலில் நாட்டின் அமைப்புசாரா தொழிலாளர்களின் தற்சமய எண்ணிக்கை, பாலினம், சமூக பின்புலம் குறித்த அதிகாரபூர்வமான கணக்கெடுப்பு வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

சமூகமும் பொருளாதாரமும்!

இந்நிலையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமும் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொதுச் சேவை மையங்கள் இணைந்து நடத்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் இணையதளத்தில், முதன்முறையாக நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, மொத்தம் 4 கோடியே 73 லட்சத்து 66 ஆயிரத்து 269 அமைப்புசாரா தொழிலாளர்கள், தற்போதுவரை நாட்டில் உள்ளது தெரியவந்துள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (50.02 சதவீதம்) பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இப்பெண்களுக்கு இதுவரை மகப்பேறு விடுப்பு, குழந்தை வளர்ப்புக்காக உதவித் திட்டங்கள் எதுவும் இருந்ததில்லை. இனி அவை உறுதிசெய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இத்தொழிலாளர்களில் 65.68 சதவீதத்தினர் 16-40 வயதுக்குட்பட்டவர்கள். 43 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், 23 சதவீதத்தினர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், 7 சதவீதத்தினர் பழங்குடியினர் என்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் சாதிய அடுக்கில் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்களே, பொருளாதார அடுக்கிலும் மிகவும் பின் தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது உறுதியாகிறது. தங்களின் பெயர்களை அரசின் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டவர்கள் குறித்த தகவல் மட்டுமே இவை. இதுபோல பல மடங்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் நாடு முழுவதும் இருப்பது திண்ணம்.

அமைப்பே தீர்வா?

அமைப்புசாரா தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்று, அவர்களது உயிர்கூட ஒரு பொருட்டாக மதிக்கப்படாததே. இந்நிலையில், மத்திய அரசின் eshram.gov.in இணையதளத்தில் தங்களைப் பதிந்துகொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்கள், விபத்துக்கு உள்ளாகி நிரந்தர ஊனமோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ அவருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ ரூ. 2 லட்சம் அல்லது படுகாயமடைந்தால் ரூ.1 லட்சம் சமூகப் பாதுகாப்பு உதவித்தொகையாக வழங்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக மத்திய, மாநில அரசுகளால் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஏற்கெனவே செயல்பட்டுவருகிறது. தமிழகத்தில், இதில் 75 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பதாக தெரியவருகிறது. ஆனால், அதிமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் இம்மக்களுக்கு எந்த உதவித்தொகையும் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஊரடங்கால் பலர் வாழ்வாதாரம் இழந்தபோது, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு ரூ.1,000 நிவாரணம் அறிவித்தது. இருப்பினும் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு அரசின் நிவாரணம் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுகவின் 50 நாள் ஆட்சியை ஒட்டி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவித்தார்.

இதுமட்டுமின்றி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்குப் பணி பாதுகாப்பும், குறைந்தபட்ச ஊதியமும், குடியிருப்புப் பகுதியும் உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரும் அமைப்பாய் திரள வேண்டும்!

x