இளங்கோவனை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு வலை?


எடப்பாடி பழனிசாமியுடன் இளங்கோவன்

தமிழ்நாடு மாநில மத்திய தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும் சேலம் புறநகர் மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளருமான இளங்கோவனுக்குச் சொந்தமான 29 இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அதிமுக ஆட்சியில் சேலத்தில் அதிகாரப் புள்ளியாக இருந்த இளங்கோவன் மற்றும் அவரது மகன் மீது, வருமானத்துக்கு அதிகமாக 131 சதவீதம் அளவுக்கு சொத்துச் சேர்த்ததாக வழக்கு. 2014-2020 காலகட்டத்தில் வருமானத்தை மீறி 3.78 கோடி அளவுக்கு சொத்துக் குவித்ததாக இளங்கோவன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிப்படையாக பார்க்கையில், இது இளங்கோவனுக்கு எதிரான நடவடிக்கையாகத் தெரிந்தாலும் முன்னாள் முதல்வர் எடப்படி பழனிசாமிக்கு எதிராக ஊழல் வழக்கு அஸ்திரத்தைத் திருப்பும் முன்னோட்ட நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவரான இளங்கோவன், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் பொறுப்பில் இருந்துகொண்டு முறைகேடான பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அதிமுக பிரமுகர்களின், கணக்கில் வராத பணம் சுமார் ரூ.400 கோடியை கூட்டுறவு வங்கிகள் மூலமாக மாற்றிக் கொடுக்க உதவி இருக்கிறார் இளங்கோவன். அத்துடன், கூட்டுறவு வங்கிகளில் போலியான ஆவணங்கள் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கே மீண்டும் மீண்டும் நகைக் கடன்கள் வழங்கப்பட்ட விவகாரத்திலும் இளங்கோவனின் கை இருப்பதாகச் சொல்கிறார்கள். வங்கி விவகாரங்களுக்கு அப்பாற்பட்டு, அதிமுக ஆட்சியில் தலைமைக்கு வரவேண்டிய வருமான விவகாரங்கள் அனைத்தையும் சென்னையில் இருந்தபடியே இளங்கோவனே கவனித்து வந்தார். இவரது சென்னை வீட்டில், பணம் எண்ணும் மெஷின்கள் மட்டுமே 10-க்கும் மேல் இருக்கும் என்று அப்போதே அதிமுகவினர் கதை கதையாய் சொல்வார்கள். தொடர்ந்து இவரைக் கண்காணித்து வந்த அமலாக்கத் துறையினர், தேர்தலுக்கு முன்பாக இவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தி சுமார் ரூ.50 லட்சம் அளவுக்கு ரொக்கத்தைக் கைப்பற்றிய சம்பவமும் நடந்தது.

நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருக்கும் தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இளங்கோவன் மீதான இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் செலவுகளைக் கவனிக்கும் பொறுப்பையும் இளங்கோவன் வசமே ஒப்படைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. மொத்தத்தில், எடப்பாடியார் சென்னையில் இருந்ததால், இளங்கோவன் சேலத்தில் ஓர் ஆக்டிங் முதல்வரைப் போலவே செயல்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு அஸ்திரத்தை அடுத்தடுத்துப் பாய்ச்சி வரும் திமுக அரசு, இளங்கோவன் மீதும் அந்த அஸ்திரத்தை ஏவி இருப்பது எடப்பாடியார் வட்டாரத்தை ஏகத்துக்கும் கலக்கமடையச் செய்திருக்கிறது. இன்னொரு பக்கம், எடப்பாடியாருக்கு சிக்கலை உண்டாக்கும் கோடநாடு கொலை வழக்கிலும் போலீஸ் தனது விசாரணை வளையத்தை இறுக்கி வருகிறது. ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக இருந்த எடப்பாடி கனகராஜ், கார் விபத்தில் உயிரிழந்ததாகச் சொல்லப்படும் வழக்கையும் மறு விசாரணைக்கு எடுத்திருக்கிறது சேலம் போலீஸ். இந்த வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் உண்டாக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இளங்கோவனுக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமி வீட்டை நோக்கி லஞ்ச ஒழிப்புத் துறையினர் நகரலாம். அல்லது, எடப்பாடியார் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கைக்கு தேவையான ஆவணங்களை இப்போதைய ரெய்டு நடவடிக்கைகள் மூலம் திரட்டி வைக்கும் முயற்சியில் முனைப்புடன் செயல்படலாம் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில்.

x