2021-ம் ஆண்டு உண்மையிலேயே மதிமுகவுக்கு மறுமலர்ச்சி ஆண்டாக அமைந்திருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சிக்கு 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்திருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலிலும் கூடுதலாக வெற்றிக்கனிகளைப் பறித்திருக்கிறது மதிமுக. கூடவே, கட்சியின் அடுத்த தலைவராக வைகோவின் மகன் அதிகாரபூர்வமாக அடையாளம் காட்டப்படப் போகிறார் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் வழக்கறிஞருமான க.அழகுசுந்தரத்துடன் 'காமதேனு'வுக்காக உரையாடினோம்.
'சரியான நேரத்தில் தப்பான முடிவெடுக்கிற கட்சி' என்று சொல்லப்படும் மதிமுக, தொடர் வெற்றிகளின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறது. எப்படியிருக்கிறது இந்த உணர்வு?
2021 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, தற்போது நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக பெற்றிருக்கும் வெற்றி என்பது, இயக்கத்தின் தளகர்த்தர்களிடத்திலும், கழகக் கண்மணிகளிடத்திலும் புதிய உற்சாகத்தை உருவாக்கியிருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே வைகோ பூடகமாகத் தெரிவித்தபடி கட்சி முக்கிய மாற்றத்துக்குத் தயாராகி வருவதுபோல் தெரிகிறதே?
உண்மைதான். தலைவர் வைகோ குறிப்பிட்டதைப் போல, கட்சி அமைப்புகளில் புதிய மாற்றத்துக்குக்கான பதியம் போட ஆயத்தமாகிவருகிறோம். அதற்கு அச்சாரம்தான் இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்.
துரை வைகோ மதிமுகவின் அடுத்த தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்படுவார் என்கிறார்களே, அதைப் பற்றி கேட்டேன்...
மதிமுகவின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில், தலைமைக் கழகம் அதிகாரபூர்வமாக அறிவிக்காத சங்கதிகள் தொடர்பாக முன்கூட்டியே சொல்வது, கழகத்தின் விதிகளுக்கு உசிதமாகாது. வெயிட் அண்ட் சீ!
'திமுகவில் தகுதியான பலர் இருந்தும் கருணாநிதி தன்னுடைய மகன் ஸ்டாலினைத் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவருவதற்காக பலரின் வளர்ச்சியைத் தடுத்தார்' என்பது மதிமுக அடிக்கடி சொன்ன குற்றச்சாட்டுக்களில் ஒன்று. இனி, அதே குற்றச்சாட்டுக்கு வைகோவும் ஆளாவார்தானே?
‘காலம் மிகப் பெரிய மருத்துவன்' என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. இந்தக் கேள்விக்குக் காலம் பதில் சொல்லும்.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தும்கூட, திமுக அரசு அந்த உரிமையை நிலைநாட்டாமல் இருக்கிறது என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்தப் பிரச்சினைக்காக அதிகப் போராட்டங்களை நடத்திய மதிமுக ஏன் அமைதி காக்கிறது?
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறபோது, அமைச்சரவையில் சில மாற்றங்களை ஆக்கபூர்வமாகச் செய்தார் மு.க.ஸ்டாலின். அதில் முக்கியமானது பொதுப்பணித் துறையில் இருந்த நீர்வள ஆதாரத் துறையை தனியே எடுத்து நீர்வளத் துறை என்ற துறையை ஏற்படுத்தி, நிறைந்த அனுபவம் பெற்ற துரைமுருகனை அமைச்சராக நியமித்ததுதான். துரைமுருகன் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது, காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியைத் தடுப்பது போன்ற முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார். நிச்சயம் பெரியாறு அணையின் நீர் மட்டம் உயரும். நம் உரிமை காக்கப்படும்.
துரைமுருகன் என்று நீங்கள் சொன்னதும், வைகோவை துரோகி என அவர் குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வருகிறது. அது மதிமுகவுக்கு வருத்தம் தரவில்லையா?
தமிழக சட்டமன்றத்தில் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிற மூத்த தலைவரான அண்ணன் துரைமுருகனின் சமீபத்திய பேச்சு வருத்தமளித்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்னால் ஈரோட்டில் நடைபெற்ற வைகோவின் பொதுவாழ்வு பொன்விழா மாநாட்டில், “தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவனே... உன் வியர்வை ஒரு போதும் வீண்போகாது” என்று பேசியது நினைவுக்கு வருகிறது.
"கூட்டணி தர்மம் என்றால் என்ன?" என்ற கேள்விக்குப் பதிலளித்திருக்கும் நாஞ்சில் சம்பத், "மதுக்கடை ஒழிப்புக்காக தன் சொந்தத் தாயாரையே களத்தில் இறக்கி போராடிய வைகோ இப்போது அமைதி காக்கிறாரே, அதற்குப் பெயர்தான் கூட்டணி தர்மம்" என்று பதிலளித்திருக்கிறார். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
தமிழகத்தில் மதுவின் கேடுகள் குறைய வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக இருக்கிறது. கூடவே, கலைஞர் சொன்னாரே, “சுற்றிலும் நெருப்பு எரிந்துகொண்டிருக்கிற போது தமிழகம் மட்டும் எத்தனை நாளைக்குக் கற்பூரமாக இருக்க முடியும்?” என்று அதுவும் நினைவுக்கு வருகிறது. இது கூட்டணி தர்மத்துக்கான அமைதி அல்ல. நடைமுறை எதார்த்தம்.
தமிழக பாஜகவின் வளர்ச்சியையும், அதிமுகவின் இடத்தை அக்கட்சி பிடித்துவிடும் என்று சொல்லப்படுவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக உதவியுடன் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் காலூன்றுவதற்கு பாஜக எடுத்த முயற்சியானது, சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் வகுத்த திட்டத்தால் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. அதையும் தாண்டி பாஜக தமிழ்நாட்டில் வளர நினைப்பது வைக்கோல் கன்றுக்குட்டியை வைத்து பால் கறக்கின்ற முயற்சியாகும். காரணம், தந்தை பெரியாரால், பேரறிஞர் அண்ணாவால் மதவாதத்திற்கு எதிராக, சனதான சக்திகளுக்கு எதிராக பக்குவப்படுத்தப்பட்ட மண்தான் இந்தப் பைந்தமிழ் நாடாகும்.
தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான் என்கிறது பாஜக. தமிழகம் தொடர்ந்து திராவிட இயக்க பூமியாக இருக்க வேண்டுமென்றால் ஆளுங்கட்சியும் சரி எதிர்க்கட்சியும் சரி திராவிட கட்சியாக இருக்க வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. அதிமுகவின் இடத்தைப் பிடிக்க மதிமுக முயற்சி செய்யுமா?
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் கொள்கை கோட்பாடுகளை உள்வாங்கி, டாக்டர் டி.எம்.நாயர், தியாகராயர், நடேசனார் போன்ற திராவிட இயக்கத் தீரர்களின் உள்ளக்கிடக்கையை அரசியலில் அரங்கேற்ற வேண்டும் என்ற தாகத்தோடு தந்தை பெரியாரின் தடம் பார்த்து மதிமுகவை வைகோ தொடங்கினார். திராவிட இயக்கத்துக்கு ஒரு ஆபத்து என்றதும், அதன் வேர்களைத் தாங்கிப் பிடிக்கிற விழுதாகப் பரிணமித்த மதிமுக, அடுத்து இந்த மண்ணின் இரண்டாவது பெரிய சக்தியாகவும் திராவிட இயக்கமே இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், மூன்றாவது இடத்திலிருந்து இரண்டாம் இடத்தை நோக்கி நகரும்.
மதிமுக உதயமான போது தோள் கொடுத்த கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். மக்கள் நலக் கூட்டணி தந்த அனுபவத்துக்குப் பிறகு மதிமுக - மார்க்சிஸ்ட் உறவு எப்படி இருக்கிறது?
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தமிழீழம்தான் தீர்வு என்பதை இந்திய கம்யூனிஸ்ட் ஒப்புக்கொண்டாலும், மார்க்சிஸ்ட் கட்சி முரண்பட்டது. எனினும், நாங்கள் அவர்களோடு அரசியல் களத்தில் சுமூகமாக உறவைப் பேணியே வருகிறோம். பிற்போக்கு சக்திகளின் கைகளில் இந்தியா சிக்குண்டுள்ள நேரத்தில் முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஓரணியில் நிற்க வேண்டியது அவசியம் என்பதை இரு தரப்பும் உணர்ந்திருக்கிறோம்.
நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ்த் தேசிய கட்சிகள் திராவிட இயக்கங்களுக்கு எதிராகத் தீவிரமாகக் களமாடுகின்றனவே. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழ் தேசியம் என்பது நேசிக்கப்பட வேண்டிய கொள்கைதான். தோழர் தியாகு, அண்ணன் பெ.மணியரசன் போன்றோர் முன்வைக்கின்ற தமிழ்த் தேசிய கருத்துகளை திராவிட விளைச்சலுக்கான உரமாகவே நாங்கள் பார்க்கிறோம். ஆனால், ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்று மனப்பால் குடித்துக்கொண்டு, நுனிப்புல் மேய்ந்துவிட்டு சத்தம் போட்டுக் கத்துவதால் வெற்றிபெற்றுவிடலாம் என்று சில வீணர்கள் முயற்சிக்கிறார்கள். தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள, தான் மட்டுமே தமிழ்த் தேசியவாதி என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு, இளைஞர்களை திசைமாற்றம் செய்கிற வேண்டாத வேலையைச் செய்துகொண்டிருக்கிறார் சீமான். அவரது செப்படி வித்தைகள் இங்கே செல்லுபடியாகாது!