செயற்கை வனத்தில் உலாத்தும் ஆட்கொல்லி புலி


அழுத்தத்துக்கு ஆளான புலி

கூடலூர் அருகே பிடிபட்டு தற்போது மைசூரு வனவிலங்கு மீட்பு மையத்தில் குணமாகி வரும் ஆட்கொல்லி புலியை, அதன் அழுத்த சூழலில் இருந்து விடுவிக்க அங்குள்ள செயற்கை வனப் பட்டியில் உலவ விட்டுள்ளனர்.

4 மனித உயிர்கள், 30-க்கும் மேற்பட்ட கால்நடைகள் என கூடலூர் பகுதியில் பீதி உண்டாக்கிய ஆட்கொல்லி புலியை 21 நாள் வேட்டைக்குப் பின்னர், மயக்க ஊசி செலுத்தி வனத் துறையினர் பிடித்தனர். டி.23 என அழைக்கப்படும் இந்தப் புலி, தற்போது மைசூரு வனவிலங்கு மீட்பு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

மைசூருவில் சிகிச்சை பெறும் டி.23

அதன் உடலில் இருக்கும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், சரியாக உணவு உட்கொள்ளாதிருந்த புலிக்கு ஊன் உண்ணிக்கான இறைச்சிகள் வழங்கப்பட்டன. பிராய்லர் கோழி இறைச்சி வழங்கப்படுவதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, புலிக்கு தற்போது மாட்டிறைச்சி வழங்கப்படுகிறது. ஆனால் கடும் அழுத்தத்தில் சிக்கி கூண்டுக்குள் சோர்ந்திருக்கும் புலி, தனக்கான அளவை விட குறைவான இறைச்சியையே உண்டது. மேலும் கூண்டின் கம்பிகளை கடித்ததில் அதன் பற்களில் ஒன்று உடைந்ததால், எலும்புகளை தவிர்த்து விட்டு, வெறும் இறைச்சியை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. உடைந்தது புலிப் பல் என்பதால், புலியை பராமரிக்கும் அதிகாரிகள் அதை பாதுகாப்புடன் சேகரித்துள்ளனர்.

டி.23 பிடிபட்டபோது

உடல் காயங்கள், இரத்தத்தில் ஹீமோக்ளோபின் குறைவு ஆகியவற்றுடன் சீர பரிசோதனையில் கல்லீரல் வீக்கத்துக்கும் டி.23 ஆளாகி இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து அதற்கான சிறப்பு மருந்துகள் மட்டும் ஊசிகள் வழங்கப்பட்டதை அடுத்து, நேற்று(அக்.19) புலி உண்ணும் இறைச்சியின் அளவு 8 கிலோவாக உயர்ந்தது. ஆனால், ஒரு மாதத்துக்கும் மேலான அயர்ச்சி காரணமாக கடும் அழுத்தத்தில் கூண்டுக்குள் உழலும் புலியை குணமாக்குவது குறித்து, அதிகாரிகள் மருத்துவருடன் கலந்தாலோசித்தனர். அதன்படி இன்று (அக்.20) அங்கே அமைந்துள்ள இயற்கை வேலிகள் மற்றும் பசுமையான வன மாதிரியுடன் கூடிய பட்டி போன்ற இடத்தில், புலியை சுதந்திரமாக உலவ விட்டு கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர்.

இதன் மூலம் ஆசுவாசமாகும் புலியால், அதன் உடல்நிலை மேலும் விரைவாக குணமாகும் என மருத்துவர்கள் நம்புகின்றனர்.

x