அண்மைக்காலம் வரை, தனது மகன் அருணுக்கு அரசியல் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த அமைச்சர் கே.என்.நேரு, இப்போது மகனை நேரடி அரசியலுக்குக் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாய் இறங்கி இருக்கிறார். அதுவும் மாநில அரசியல் வேண்டாம் என்று சொல்லி டெல்லி அரசியலுக்கு!
திமுக சீனியர்கள் எல்லாம் தங்களுக்கான அரசியல் வாரிசை உரிய காலத்தில் உள்ளே கொண்டு வந்துவிட்டார்கள். அப்படித்தான் டி.ஆர்.பாலு மகன் ராஜாவும் ஐ.பெரியசாமி மகன் செந்தில்குமாரும் அரசியலுக்கு வந்து எம்எல்ஏ-க்களாக கோலோச்சுகிறார்கள். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி, பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி ஆகியோர் எம்பி-க்களாக வலம் வருகிறார்கள். இன்னும் சில மூத்த தலைகளின் பிள்ளைகள் கட்சிக்குள் அதிகாரம் செலுத்தி வருகிறார்கள். இதையெல்லாம் பார்த்த பிறகும் கே.என்.நேரு தனது மகன் அருணை அரசியலில் இறக்கிவிட அவ்வளவாய் விருப்பம் இல்லாமல்தான் இருந்தார். ஆனால், அண்மைக்காலமாக அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டுவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்களே சொல்கிறார்கள்.
இது தொடர்பாக நேருவுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து நம்மிடம் பேசியவர்கள், “அரசியல் நம்மோடு போகட்டும் பிள்ளைக்கு வேண்டாம் என்றுதான் அண்ணன் நேரு நினைத்திருந்தார். காரணம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சிக்குள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்த பிறகு, அண்ணனுக்கு அரசியல் ரீதியாக ஏகப்பட்ட நெருடல்கள். தன்னையும் மகேஷையும் ஒப்பிட்டுப் பேசுவதையே அண்ணன் நேரு அவ்வளவாய் விரும்பவில்லை. ஆனால், உதயநிதிக்கு நெருக்கமானவராக இருப்பதால் திருச்சிக்குள் அண்ணனுக்குச் சமமாக மகேஷின் கையும் இப்போது ஓங்கி நிற்கிறது. இதையெல்லாம் பார்த்துவிட்டு அண்ணனே, அரசியலே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார். தனக்குள் இப்படியொரு எண்ணம் இருந்ததால்தான் தம்பி அருணை அவர் அரசியலுக்குள் இழுத்துவிடவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் லால்குடியில் அருணை நிறுத்தப்போவதாக பலமான ஒரு பேச்சு இருந்தது. ஆனால், அதை தவிர்த்துவிட்டார் நேரு.
ஆனால், அண்மை நாட்களாக அண்ணனின் வீட்டுக்குள் இது தொடர்பாக அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் காரசார விவாதங்கள் நடந்தபடி இருக்கின்றன. ‘மற்ற சீனியர்கள் எல்லாம் தங்களது பிள்ளைகளை சமயம் பார்த்து அரசியலில் இறக்கிவிட்டார்கள். நீங்கள் மட்டும் என்னை ஏன் இப்படி ஒதுக்கிவிட்டீர்கள்?” என்று அண்ணனிடம் அருண் நேரடியாகக் கேட்டே விட்டதாகவும் சொல்கிறார்கள்.
இதையடுத்துத்தான் மகனை நேரடி அரசியலுக்குக் கொண்டுவரும் முடிவுக்கு வந்திருக்கிறார் அண்ணன் நேரு. திருச்சி மேயர் தேர்தலில் அருணை நிறுத்தினால் நிச்சயம் ஜெயிக்க வைக்கலாம். ஆனால், மேயரைவிட எம்பி-யாகி டெல்லிக்குப் போவதைத்தான் அருண் அதிகம் விரும்புகிறார். நேருவும், மகனை மகேஷ் பொய்யாமொழியுடன் எல்லாம் மோதவிட்டுக் கொண்டிருக்காமல் பேசாமல் டெல்லி அரசியலுக்கு அனுப்பி வைத்துவிடலாம் என்றே நினைக்கிறார்.
கலைஞர் இருக்கும்போதே அண்ணனை எம்பி-யாக்கி டெல்லி அரசியலுக்கு அனுப்ப முயற்சி எடுத்தார். ஆனால், அப்போது அண்ணன் அதை மறுத்துவிட்டார். அப்போது மறுத்தாலும் அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் , ‘தலைவர் அப்பவே என்னை டெல்லிக்கு போகச் சொன்னார். அப்படிப் போயிருந்தால் நானும் மத்திய அமைச்சர் ஆகியிருப்பேன். கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டேன்’ என்று மேடைகளில் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்” என்று சொன்னார்கள்.
அருணுக்கு 45 வயது நெருங்கிவிட்டது. அவரை அரசியலில் ஈடுபடுத்துவதாக இருந்தால், இதற்கு மேலும் அதை தள்ளிப்போட முடியாது. அதனால்தான், பாராளுமன்ற தேர்தல் மூலம் மகனை தனது அரசியல் வாரிசாக அடையாளம் காட்டுவதற்கான வேலைகளை நேரு இப்போதே தொடங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். அதன் தொடக்கமாக, திருச்சி மக்களுக்கும் அருணுக்கும் நல்ல பரிச்சயம் ஏற்படும் விதமாக பொது நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதன் பின்னணியில், தமிழ் மையம் அமைப்பின் நிறுவனரான பாதிரியார் ஜெகத் கஸ்பார் இருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.