அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, கன்னியாகுமரியில் பயணத்தை நிறைவு செய்கின்றனர். "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" என்ற நடிகர் விவேக் வசனத்தைத்தான், வீதியெல்லாம் சென்று பேசுகிறார் மோட்டார் சைக்கிள் பிரச்சாரகரும், கிராமிய கலைஞருமான பழனியா பிள்ளை.
கலைமாமணி விருதுபெற்ற பழனியா பிள்ளையும், கிராமியப்பாடகர் கண்டண்விளை இ.ராஜேந்திரனும் தமிழகம், பாண்டிச்சேரிக்கு இருசக்கர வாகனத்திலேயே பயணம் சென்று கரோனா விழிப்புணர்வூட்டித் திரும்பியிருக்கின்றனர். குமரிமாவட்டத்தைச் சேர்ந்த இவர்களை, முதல்வர் மு.க.ஸ்டாலினும் வெகுவாகப் பாராட்டி அனுப்ப நெகிழ்ச்சியோடு நம்மிடம் பேசத் தொடங்கினார் பழனியாபிள்ளை.
”கரோனா நாம் நினைப்பதுபோன்று தொட்டுச் செல்லும் வியாதி அல்ல. ஒரு கணப்பொழுதில் நம்மையே பறித்துச் செல்லும் அரக்கன். எனக்கும் கரோனா வந்தது. 20 நாள்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். சிகிச்சை முடிந்து வீடு திரும்பினால் 3 மாதங்கள் என்னால் இயல்பாக இருக்கமுடியவில்லை. கடுமையான சோர்வு. 20 கிலோ குறைந்துபோனேன். அதன் பின்பு இப்போதுவரை பழைய உடல் வரவில்லை. இப்படியான சூழலில்தான் கரோனாவில் இருந்து மீண்டதும், பைக்கிலேயே சென்று கிராமியக் கலைகளின் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வூட்ட நினைத்தேன். இப்போது உடல்நலம் தேறியதும் முதல்வேலையாக அதைச் செய்துவிட்டேன்” என முன்னுரை படிக்கிறார்.
தனது பழைய புகைப்படத்தை செல்போனில் காட்டியவாறே, ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்?’ என விவேக் பாணியில் அவர் நடித்துக்காட்டுவது குபீர் சிரிப்பை வரவழைத்தாலும், அதன் பின்னால் இருக்கும் வேதனைகளையும் கடத்துகிறது.
கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் தமிழகத்தில் 35 மாவட்டங்கள், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நீண்டது. இதுகுறித்து மேலும் பகிர்ந்த பழனியாபிள்ளை, ”அனைவருமே 2 தவணை தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக வீண் வதந்திகளை நம்பக்கூடாது. தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், 3-ம் பாலினத்தவர் என அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அச்சப்படத் தேவையில்லை என்றே பிரச்சாரம் செய்தோம். இதற்காக ’இயக்கமாக மாறுவோம்’, ’ஊசியைப் போட்டிடுவோம்... தடுப்பூசியைப் போட்டிடுவோம்’ என 2 பாடல்களை எழுதினேன். அந்தப் பாடல்களை என்னோடு வந்த கிராமியப் பாடகர் இராஜேந்திரன் பாடினார்.
இந்தப் பயணத்துக்கு ரோட்டரி கிளப் நிர்வாகிகள், மாவட்டங்களின் ஆட்சியர்கள் உட்பட பலரும் ஊக்குவிப்பாக இருந்தனர். கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தொடங்கிவைத்தார். சேலம் எம்.பி. பார்த்திபன், மயிலாடுதுறை எம்.பி. இராமலிங்கம், புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, சிவகங்கை ஆட்சியர் மதுசூதன ரெட்டி என வழிநெடுகிலும் பல அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் எங்களை உற்சாகப்படுத்தி ஊக்குவித்தனர். முதல்வரை சந்தித்தபோது, ‘நல்ல காரியத்திற்காக இந்தச் செயலை செய்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள்’ என அவர் சொன்னதும், நெகிழ்ந்து போனோம். மேலும் எங்களை முதல்வர் உற்சாகப்படுத்தவும் செய்தார்.
முகக்கவசம் மட்டுமே இப்போது நம்மிடம்இருக்கும் ஆயுதம். அது கரோனாவிடமிருந்து மட்டுமல்ல, வேறுபல கிருமிகளிடம் இருந்தும் நம்மைக் காக்கும். 3-ம் அலை குழந்தைகளைத் தாக்கக்கூடும் என எச்சரிக்கை தொடர்ந்து வல்லுநர்கள் தரப்பில் வைக்கப்படுகிறது. இப்படியான சூழலில் பெற்றோருக்கு விழிப்புணர்வு வேண்டும் என்பதாலேயே இந்தப் பயணம். மொத்தம் 33 நாட்கள் பைக்கிலேயே இதற்காகச் சுற்றினோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் கரோனாவில் மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பியிருப்பதாக நினைக்கிறேன். அதனால், இந்த மறுபிறவியை அர்த்தமுள்ளதாக்கவே கரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். மீண்டும் அடுத்த பயணத்துக்கும், விழிப்புணர்வுக்கும் திட்டமிட்டு வருகிறேன்’’ என்றார்.