சிவகங்கைச் சீமையில் காணாமல்போன காங்கிரஸ் குடும்பங்களின் கதைகளை எழுத ஆரம்பிக்கும்போது, இவ்வளவு வரவேற்பு இருக்குமென நான் கருதவில்லை. நான் ஒவ்வொருவராய் தேடிப்பிடித்து தரவுகளை திரட்டி எழுத எழுத, பலரும் என்னுடன் காணொலி வழியே கைகுலுக்கி உற்சாகப்படுத்துகிறார்கள். அத்தனை பேருமே ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்கள்தான் போலிருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் ஓர் உண்மையான காங்கிரஸ்காரனாய் ஆறுதல் சொல்வதைத் தவிர எனக்கு வேறுவழி தெரியவில்லை. இன்னும் சிலர், “எங்கள் அப்பாவைப் பற்றி எழுதுங்கள்... அண்ணனைப் பற்றி எழுதுங்கள்” என்று அட்ரஸ் கொடுக்கிறார்கள். ஆதங்கப் பட்டியல் ஹனுமன் வால்போல் நீண்டுகொண்டே போகிறது. பின்னே, 40 வருடத்து பாதிப்பல்லவா ?
சிவகங்கை அரசியலின் சதுரங்க விளையாட்டில் பாதிப்பு என்னவோ சிவகங்கை காங்கிரஸ் கட்சிக்கும், அதைத் தோளில் சுமக்கும் தொண்டர்களுக்கும்தான். நான் எழுதும் கட்டுரைகளில் உண்மையும் நியாயமும் இருப்பதால் உண்மையான காங்கிரஸ்காரர்கள் வரவேற்கிறார்கள். உண்மைதான் என்று உணர்ந்திருந்தாலும் சிலரால் இதை எல்லாம் உள்வாங்கி ஜீரணிக்க முடியவில்லை. உறக்கத்தைத் தொலைத்து உழல்கிறார்கள். ‘பழனியப்பன் இப்படி எழுதுகிறாரே... இதுபற்றி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கருத்து என்ன?’ என்று ‘மனு நீதிச் சோழர்கள்’ சிலர் மனு போடுகிறார்கள். அவர்களால் மனுதான் போடமுடிகிறதே தவிர... பழனியப்பன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சொல்ல அவர்களது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. “பழனியப்பன் சொல்வதில் என்ன தப்பு இருக்கு... உள்ளதைத் தானே எழுதுறார்” என்று நியாயமான காங்கிரஸ் தொண்டன் பேசுவதும் கேட்பதும் அவர்களின் காதிலும் அரசல் புரசலாக விழாமலா இருக்கும்?
சரி, இன்றைய கதைக்கு வருவோம்...
தமிழகத்தில் பல எம்எல்ஏ-க்களையும் எம்பி-க்களையும் உருவாக்கியவர் அவர். அப்படிப்பட்டவரால் சொந்த மண்ணில் ஒருமுறைகூட எம்எல்ஏ ஆகமுடியவில்லை. அதற்குக் காரணம், அவர் சிவகங்கையில் பிறந்தது தானோ என எண்ணத் தோன்றுகிறது.
சிவந்த கண்கள், தூக்கிச் சீவிய நரைத்த முடி, கையைக் கிழித்துவிடும் கஞ்சி மொரமொரப்புக் கதராடை, கம்பீரமான உருவம் யாரையும் பார்த்தவுடன் கும்பிட வைக்கும் பாந்தமான தோற்றம். இதுதான் அண்ணன் சிவகங்கை வி.ராஜசேகரன்.
1969-70-களில் சிவகங்கையைச் சுற்றி உள்ள பள்ளிக் கூடங்களுக்குச் சென்று ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களை அழைத்து, “நீதான் சிவாஜி ரசிகர் மன்ற தலைவர்... நீ தான் செயலாளர்” என்று அங்கேயே அவர்களை நியமனம் செய்தவர். அந்த மாணவர்களோடு உடனிருந்து அவர்களைச் சுவர் விளம்பரங்கள் செய்யவைத்து, அப்படியே அவர்களின் உள்ளத்தில் இடம்பிடித்து அவர்களை நண்பனாக்கிக் கொண்ட ஒரு தலைவர் ராஜசேகரன்.
“ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று நண்பர்கள் கேட்டால், “இன்றைய மாணவர்கள் தான் நாளைய வாக்காளர்கள். நாளை நான் நகர்மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறபோது இவர்கள் வாக்காளர்களாக வருவார்கள். எனக்காக வேலையும் செய்வார்கள். வாக்களித்து என்னை வெற்றிபெறவும் செய்வார்கள்” என்று தொலைநோக்குப் பார்வை பார்த்தவர் ராஜசேகரன்.
அதேபோல, தன்னுடைய இளவயது நண்பர்களை சைக்கிளில் அமரவைத்து சிவகங்கை நகரில் 100 போஸ்டர்கள் ஒட்ட வேண்டிய முக்கிய இடங்களை அவர்களுக்குக் காட்டிவிடுவார். அவர்களை சிவகங்கை இக்பால் கடையில் இரவு பரோட்டா சாப்பிட வைத்து, போஸ்டர் ஒட்ட அனுப்பி விடுவார். மறுநாள் காலை மீண்டும் சைக்கிளை எடுத்துக்கொண்டு 100 போஸ்டரும் ஒழுங்காக ஒட்டி இருக்கிறதா என்று ஒரு சுற்று சுற்றி வந்து பார்த்துக் கொள்வது ராஜசேகரனின் வழக்கம்.
சிவகங்கை ஒன்றியம், சிவகங்கை நகராட்சி, காளையார்கோவில் ஒன்றியம் என்று சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அத்தனை கிராமத்துக்கும் கிராமத்தின் பெயரிட்டு ராஜசேகரினிடம் ஒரு நோட்டு இருக்கும். அந்த நோட்டை எடுத்தால், அந்த ஊரில் யார்யாரெல்லாம் காங்கிரஸ்காரர்கள், அவர்கள் என்னவெல்லாம் நிகழ்ச்சி செய்திருக்கிறார்கள், அடுத்து நிகழ்ச்சி வைத்திருக்கிறார்கள், அவருடைய தகப்பனார் பெயர், தொடர்பு எண் என டோட்டல் டேட்டாவே அதில் இருக்கும்.
1980-ல் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் அடையாளம் காட்டப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு ஐசரி வேலனை வீழ்த்தி வென்றவர் ராஜசேகரன். அடுத்த தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடவில்லை. ஆனால், 5 எம்எல்ஏ-க்களையும் 4 எம்பி- க்களையும் உருவாக்கினார். அப்போது சிவாஜி ரசிகர் மன்றத் தலைவராக ராஜசேகரன் இருந்தபோது, காங்கிரஸ் கட்சியில் சிவாஜிக்கு கோட்டா சீட் ஒதுக்கப்பட்டது. அந்தக் கோட்டாவில் மன்றத்துப் பிள்ளைகள் சிலரை எம்எல்ஏ-க்களாகவும் எம்பி-க்களாகவும் நிறுத்தி ஜெயிக்கவைத்ததில் ராஜசேகரனுக்கு பெரும் பங்கு உண்டு.
அப்போது சீட்டு ஒதுக்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டபோது, நடிகர் திலகத்தின் பிரதிநிதியாக அன்றைய கர்நாடக முதலமைச்சர் குண்டுராவைச் சந்தித்து, அவர் மூலம் தலைவர் ராஜீவ் காந்தியிடம் பேசி பிரச்சினையை சிக்கலின்றி முடித்தவர் ராஜசேகரன். இன்னொரு சந்தர்ப்பத்தில், காங்கிரஸ் கட்சியில் சிவாஜிக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று சொல்லி, ராஜீவ் காந்தியின் காரையே மறித்தவர் என ராஜசேகரனைச் சொல்வார்கள்.
1969-ல் ‘நகர்நல முன்னணி’ என்ற பெயரில் தன் வயதையொத்த இளைஞர்களைத் திரட்டிக்கொண்டு, சிவகங்கையில் மக்கள் நல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ராஜசேகரன். சிவகங்கை ராஜாவான சுப்பிரமணிய ராஜாதான் இவருடைய துடிப்பான ஆற்றலைப் பார்த்து, இவரைக் காங்கிரஸில் இணைத்து தன்னுடைய தளபதியாக அமர்த்திக் கொண்டதாகச் சொல்வார்கள்.
1971-ல், தனது 19-வது வயதில் சிவகங்கை நகர்மன்ற உறுப்பினராக அடியெடுத்து வைத்தவர் ராஜசேகரன். 1975-ல், சிவகங்கை நகர்மன்றத்தில் ஏற்பட்ட குழப்பமான சூழலலானது இவரை நகர்மன்ற தலைவர் இருக்கையில் அமரவைத்தது. அந்த சமயத்தில் இவர் தந்த வரியில்லா பட்ஜெட் மிகவும் பிரசித்தம் என்பார்கள்.
வாழப்பாடியார் தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த காலங்களில், அவரின் தளபதியாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவர் ராஜசேகரன். 2001-ல், சிவகங்கை ஒன்றிய பெருந்தலைவராக கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2001-ல், தலைவர் சிதம்பரம் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியை நடத்தி வந்ததை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
2006-ல், சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி தனக்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்த்தார் ராஜசேகரன். ஆனால், தொகுதி கூட்டணிக் கட்சிக்குப் போய்விட்டது. அதனால் சுயேச்சையாகப் போட்டியிட்டார் ராஜசேகரன். சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட அவரை சிலர் சீப்பாக நினைத்தார்கள். அவர்கள் எல்லாம் மிரளும்விதமாக, அந்தத் தேர்தலில் சுமார் 35 ஆயிரம் வாக்குகளை வாங்கி தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் காட்டினார் ராஜசேகரன்.
கடைசியாக, 2011-ல் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் இவருக்கு வாய்ப்பளித்தது. ஆனால், அப்போது சுமார் 4 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார் ராஜசேகரன். அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜசேகரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால், நிச்சயமாக அவர் சிவகங்கை சேர்மன் ஆகியிருப்பார். ஏனென்றால், சட்டப்பேரவைத் தேர்தலில், நகராட்சி பகுதியில் தனக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கி வைத்திருந்ததால், மற்றவர்களை விட கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால், இவருக்கு சீட் கொடுக்காமல் இன்னொருவரை நிறுத்தியது மாவட்ட காங்கிரஸ். அப்படி நிறுத்தப்பட்ட வேட்பாளர் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இப்படித்தான், பல நேரங்களில் நாங்கள் வாய்ஸானவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் விட்டுவிட்டு வாங்குப்படுகிறோம்.
இன்றுவரை திருமணம் செய்துகொள்ளாமல், பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்து வரும் அண்ணன் ராஜசேகரனுக்குள்ளும் ஆயிரம் மன வருத்தங்கள் உண்டு. சொந்த மண்ணில் கட்சி தன்னை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டதே என ஆதங்கப்பட்டாலும் பொதுவாழ்க்கையை புறந்தள்ளாதவர். இன்றைக்கும் ஒரு காங்கிரஸ் தொண்டனாக, தன்னால் ஆன மக்கள் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார். நாங்கள்தான் அவரை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டோம்.
( ‘பாட்டம்’ லெவலில் இருந்து பார்ட்டி வளர்த்த இன்னொருவரையும் பரிதவிக்கவிட்டார்கள். அந்தக் கதையை அடுத்து பார்ப்போம்)
முந்தைய அத்தியாயத்தை படிக்க:
சிவகங்கையும் சிதம்பரமும்... 10