அடாத மழையிலும் விடாது நடந்தேறிய திருமணம்!


அண்டா ஜானவாசம்

கேரளாவின் கனமழை இடையூறுகளுக்கு மத்தியில், நிச்சயிக்கப்பட்ட தங்கள் திருமணத்தை அண்டாவில் எதிர்நீச்சல் போட்டு சாதித்திருக்கிறது ஓர் இளஞ்சோடி.

மேக வெடிப்பு தந்த கனமழை, ஊரையே புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு, உயிர்களைப் பறித்த நிலச்சரிவு என கடவுளர் தேசமான கேரளா கடந்த சில தினங்களாகவே கலங்கி கிடக்கிறது. அவர்களின் மத்தியில் விடிந்தால் திருமணம் என்பதால், மணமக்களான ஆகாஷ் குஞ்சுமோன் - ஐஸ்வர்யா ஜோடி படபடப்பாக இருந்தனர். இது வேறு படபடப்பு. நல்லபடியாக தொடங்க வேண்டிய இல்லற வாழ்க்கையின் தொடக்கத்தை, எங்கே இந்த கனமழை கெடுத்துவிடுமோ என்று அவர்கள் கவலையில் ஆழ்ந்திருந்தனர்.

அடாத மழையின் மத்தியில் நடந்தேறிய மணவிழா

ஆலப்புழா பகுதியிலிருக்கும் தகழி அருகே, அம்மன் கோயில் ஒன்றில் வைத்து அக்.18 அன்று திருமணம் முடிக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பயந்தது போலவே விடிந்தபோது அம்மன் கோயிலை நெருங்க முடியாதபடி வெள்ளம் சூழ்ந்திருந்தது. அடாத மழையிலும் விடாது மணமுடிப்பது என மணமக்கள் தீர்மானமாக இருந்தனர். முகூர்த்த நேரம் வேறு நெருங்கிக்கொண்டிருந்தது. வேறுவழியின்றி, அருகிலுள்ள குட்டநாடு மண்டபம் ஒன்றில் வைத்து தாலி கட்டுவது என முடிவானது. ஆனால், அந்த மண்டபமும் அரை கிலோமீட்டருக்கு அப்பால் இருந்தது. அதை நோக்கி வாகனத்தில் செல்ல வேண்டிய சாலையில், வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது.

மண வாழ்க்கை என்றாலே எதிர்நீச்சல் தானே!. உடனடியாக, பிரியாணி சமைக்கும் பெரிய அண்டா ஒன்றை அருகிலிருந்து இரவல் வாங்கி வந்தவர்கள், அதில் மணமக்களை வைத்து வெள்ளத்தில் தள்ளிச் சென்றனர். ஆகாஷை விட ஐஸ்வர்யா சற்று வெயிட்டானவர் என்பதால், அடிக்கடி பேலன்ஸ் தவறியதில் அலைக்கழிந்த அந்தப் பயணம், கலகலப்பாகவும் மாறியது. கரோனா காரணமாக குறைந்த எண்ணிக்கையிலே உறவினர்கள் அழைக்கப்படிருந்தனர். அவர்களில் பலரும் கனமழை காரணமாக வராதுபோக, எஞ்சியவர்கள் சாலை வெள்ளத்தில் அண்டாவை கடத்திச் சென்றனர்.

மண்டபத்தை அடைந்தபோது, அங்கேயும் வெள்ளம் மிரட்டலாய் காத்திருந்தது. உயரமான மணமேடையில் அமர்ந்த ஆகாஷ் -ஐஸ்வர்யா ஜோடி, சுப முகூர்த்தத்தில் மாலை மாற்றி பெருமூச்சு விட்டனர். நடுங்கிக்கொண்டிருந்த சொச்ச உறவுக்கூட்டமும் மணமக்கள்மீது ஈர வாழ்த்துகளை தூவிச் சென்றது. அப்பகுதியின் அருகே, மழைச்சேதம் தொடர்பான செய்தியை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் ஆகஷ் - ஐஸ்வர்யாவின் அண்டா எதிர்நீச்சலை கேள்வியுற்றதும் ஓடோடிவந்து, வீடியோ கவரேஜ் குறையைப் போக்கினர். புதுமையான ‘ஜல ஜானவாச’ அனுபவம் புதுமணத் தம்பதிக்கு மட்டுமல்ல, கனமழை நெருக்கடியில் சோர்ந்திருந்த கேரள மக்களுக்கும் சுவாரசிய ஆறுதல் தந்தது.

x