"எதிர்பார்த்த ரெய்டு நடந்திருக்கிறது, ஆனால், எதிர்பார்த்த எதுவும் அங்கே கிடைக்காது” முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் நடக்கும் ரெய்டுகள் குறித்து, புதுக்கோட்டை பக்கம் இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள் மக்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மேல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திவரும் தொடர் ரெய்டுகளின் வரிசையில், இன்று (திங்கட்கிழமை) முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடக்கின்றன. அவரது உறவினர்கள், நண்பர்கள், கட்சிக்காரர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் என சென்னை தொடங்கி, கோவை, திருச்சி, புதுக்கோட்டை உட்பட மொத்தம் 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மற்றும் மகள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆட்சியில், அதிமுகவின் கஜானாவாக இருந்த ஒருசிலர்களில் விஜயபாஸ்கர் மிகமுக்கியமானவர். அதுவும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போதும், சென்னையில் குட்கா வியாபாரிகள் சிக்கியபோதும் விஜயபாஸ்கரின் வீரியத்தை அனைவரும் அறிந்தார்கள். அப்போது வருமானவரித் துறை இவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி பல்வேறு சொத்துக்களை முடக்கியும் வைத்தது. ஆனால், அவற்றையெல்லாம் மிகச் சாதாரணமாக கடந்து அதிமுகவின் ஆட்சிக்காலம் முழுவதும் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்து கரோனாவையும் ஒரு கை பார்த்துவிட்டுத்தான் பதவியை விட்டுப்போனார்.
அவரது பதவிக்காலத்தில் டிப்பர் லாரிகள், ஜேசிபி, சிமென்ட் கலவை எந்திரங்கள், பி.எம்.டபிள்யூ கார், 85 பவுன் நகைகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாய நிலங்கள், சென்னை தி.நகரில் வீடு, 28 கோடி மதிப்பிலான பல்வேறு நிறுவன பங்குகள் என அவர் குவித்துள்ள சொத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கரோனா விவகாரத்தில் கவச உடை, மருந்துகள் உள்ளிட்ட முக்கியப் பொருட்கள் அதிகவிலைக்கு வாங்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்களுடன் குற்றம் சாட்டியிருந்தது. வேலை வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தவறுகள், முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடர்ந்து சொல்லிவந்தது திமுக அரசு. தேர்தல் பிரச்சாரத்தின்போது, “குட்கா புகழ் விஜயபாஸ்கர்” என்றே வீதிக்கு வீதி விமர்சனம் செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அதனால், திமுக ஆட்சியில் முதல் ஆளாக சி.விஜயபாஸ்கர்தான் வழக்கில் சிக்குவார் என்ற பேச்சு நிலவிவந்தது.
ஆனால், முதல் ஆளாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதுதான் நடவடிக்கைகள் பாய்ந்தன. அவரையடுத்து எஸ்.பி.வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோர்கள் மீது சோதனை நடவடிக்கை தொடர்ந்தது. தற்போது 4-தாக சி.விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.
ஆனால், எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மூவரது வீட்டிலும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில்கூட சொத்துகள், ஆவணங்கள் உள்ளிட்டவை அதிகம் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், “இவரிடம் பெரிதாக எதுவும் கிடைக்கவே கிடைக்காது. ஏனெனில், இப்படி சோதனை நடக்கும் என்பது விஜயபாஸ்கருக்கு முன்பே தெரியும். இப்போது நடக்கும் ரெய்டு குறித்துகூட முன்கூட்டியே அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திட்டமிட்டபடிதான் நடக்கிறது. ரெய்டு நடந்தால், அதை சமாளிக்கும் விதத்திலான திரைமறைவு வேலைகளை அழகாக செய்து முடித்துவிட்டார் விஜயபாஸ்கர். இதற்காக மட்டுமே, பெருந்தொகை பேரம்பேசி முடிக்கப்பட்டதாக ஒரு பேச்சு இருக்கு. இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. ஆனால், ரெய்டு வந்தால் வரட்டும் என தெம்பாகத்தான் இருந்தார் விஜயபாஸ்கர்” என்கிறார்கள் புதுக்கோட்டை அரசியல் புள்ளிகள்.
”உங்களுக்கு பெரிதாக எந்தச் சிக்கலும் வராது. கொஞ்ச காலத்துக்கு அரசுக்கு எதிராக ஏதும் பேசாமல் அடக்கி வாசியுங்கள்” என்றெல்லாம் ஆலோசனைகள் வழங்கப்பட் டிருந்ததால்தான், நீட் தேர்வு விவகாரத்தில்கூட மவுனம் காத்தாராம் விஜயபாஸ்கர். எனினும் கடந்த ஆட்சியில் வளமான துறையை கையில் வைத்திருந்த சி.விஜயபாஸ்கரை தொடாமல் விட்டால், அரசுக்கு எதிரான விமர்சனங்கள் வெடிக்கும் என்பதாலேயே, சம்பிரதாய சடங்காக இந்த ரெய்டு நடவடிக்கைகள் நடப்பதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
ஆனாலும் அதிமுக தரப்பில், விஜயபாஸ்கர் மீதான ரெய்டு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது பெரிய மகள் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நடத்தப்படும் இந்த சோதனை மனித உரிமை மீறல் என்றும், திமுக ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை திசைதிருப்பவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள்மீது இப்படி சோதனைகள் நடத்தப்படுவதாகவும் அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.