டி.23 புலிக்கு பிராய்லர் கோழியா?


மைசூரு உயிரியல் பூங்காவில் கூடலூர் புலி

கூடலூரை கலக்கிய ஆட்கொல்லி புலியான டி.23 தற்போது மைசூரு உயிரியல் பூங்காவில் சிகிச்சை பெற்று வருகிறது. அங்கு உடல் நலிவுற்றிருக்கும் இந்தப் புலிக்கு பிராய்லர் கோழி வழங்கப்படுவது கானுயிர் ஆர்வலர் மத்தியில் கடும் அதிருப்தி தந்துள்ளது. இந்த விவகாரம் உட்பட புலியின் தேடுதல் வேட்டை முதல் சிகிச்சை வரை வட்டமடிக்கும் சர்ச்சைகளால் புலிவால் பிடித்த கிலியில் தவிக்கிறது வனத்துறை.

புலித் தாண்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில், நர மாமிசத்தில் ருசி கண்ட ஒரு புலியால் பகுதி மக்கள் உயிரச்சத்துக்கு ஆளானார்கள். டி.23 என பின்னாளில் பெயரிடப்பட்ட இந்த ஆட்கொல்லி புலி அடுத்தடுத்து 4 மனிதர்களை அடித்துக் கொன்றிருக்கிறது. கடந்தாண்டு மசினகுடியை சேர்ந்த கெளரி பலியானதில் புலியின் நரவேட்டை தொடங்கியது. இரை தேடலில் குறுக்கே சிக்கினால் தாக்கி வீழ்த்துவதற்கு அப்பால் மனிதர்களை தனியாக குறிவைத்து புலிகள் தேடுவதில்லை. ஆனால் ஒருமுறை நர மாமிசத்தை சுவைத்துவிட்டால் அவை ஆட்கொல்லியாக அவதாரமெடுத்து விடும்.

அந்த வகையில் தேவன் எஸ்டேட் பகுதியில் அடுத்தடுத்து குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் என இருவர் புலியால் கொல்லப்பட்டனர். அக்டோபர் தொடக்கத்தில் சிங்காரா வனப்பகுதியில் கால்நடை மேய்ப்பில் ஈடுபட்டிருந்த பசுவன் என்பவரை புலி அடித்துக் கொன்றதில் பொதுமக்கள் பொறுமை இழந்தனர். மனிதர்கள் வளர்ந்துவந்த கால்நடைகளில் 30க்கும் மேற்பட்டவையும் புலிக்கு இதுவரை பலியாகி இருக்கின்றன.

கூண்டில் அடைக்கப்பட்ட டி.23

புலிவால் பற்றிய வனத்துறை

ஆட்கொல்லி புலியால் அடுத்த நர பலி அரங்கேறுவதற்குள் அதனை சுட்டுக் கொல்ல வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இழுபறிக்குப் பின்னர் புலியை சுட்டுக்கொல்லும் முடிவுக்கு வனத்துறை வந்தது. அதில் தொடங்கி இன்று வரை தொடர் சர்ச்சகைகளில் அடிபட்டு வருகிறது வனத்துறை.

புலியை சுட்டுக் கொல்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் புலியை சுட்டுக்கொல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், மயக்க ஊசி செலுத்தி புலியை உயிருடன் பிடிக்கும் முடிவுக்கு வனத்துறை வந்தது. இதற்கு மசினகுடி மற்றும் கூடலூர் மக்கள் அதிருப்தி அடைந்தனர். 22 நாட்கள் தொடர் தேடுதல் வேட்டையின் முடிவில், கூட்டுப்பாறை எனும் இடத்தில் புதரில் பதுங்கியிருந்த புலி மயக்க ஊசியால் மடக்கப்பட்டது.

புலி பிடிபட்டாலும் வனத்துறைக்கு எதிரான சர்ச்சைகள் விட்டபாடில்லை. டி.23 தேடுதல் வேட்டை நெடுக ஊடகவியலாளர்களுக்கு உருப்படியான தகவல் தராது வனத்துறையினர் மவுனம் சாதித்தனர். சந்தேகமடைந்த செய்தியாளர்களின் அழுத்தத்தை அடுத்தே வாய்திறக்கவும் செய்தார்கள். மயக்க ஊசியால் வீழ்த்தப்பட்ட புலியை படம் எடுக்கவும் ஏனோ தடை விதித்தனர். கூண்டில் அடைக்கப்பட்ட புலி முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கேயும் ஊடகத் தடையை தொடர்ந்தனர்.

அலைகழிக்கப்பட்ட புலி

அதே சமயம், செல்வாக்கு மிக்க முக்கிய புள்ளி ஒருவரின் குடும்பத்தை மட்டும் திறந்த ஜீப்பில் வனத்துறையினர் அழைத்து சென்று களைத்திருந்த புலியை காட்சி பொருளாக்கினர். இதை கண்டித்து செய்தியாளர்கள் சாலை மறியலில் குதித்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பேட்டிக்கு இறங்கி வந்தார். அந்த பேட்டியில் டி.23 புலி வண்டலூருக்கு கொண்டு செல்லப்படுவதாக அமைச்சர் கூறினார். மாறாக மைசூரு உயிரியல் பூங்காவுக்கு புலி கொண்டு செல்லப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.

மைசூரு உயிரியல் பூங்காவின் வன விலங்குகள் மறு வாழ்வு மையத்தில் அடைக்கலமாகி இருக்கும் புலிக்கு அதன் உடல் காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயங்களால் புலியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றபோதும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் வெகுவாக குறைந்ததில் உடல் நலிவடைந்தது. போதாக்குறையாக 15 நாட்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ளாததும் புலியை மிகவும் சோர்வில் தள்ளியுள்ளது. உயிரியல் பூங்காவில் அந்த உணவையும் உருப்படியாய் வழங்காததில் அடுத்த சர்ச்சை முளைத்தது. வனத்தில் தட்டுப்படும் தனக்கான இரையை உண்டு பழகிய புலிக்கு, உயிரியல் பூங்காவில் பிராய்லர் கோழி இறைச்சியை வழங்கி இருக்கிறார்கள். இதற்கு சூழியல் மற்றும் கானுயிர் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சாதிக் அலி

புலியின் உணவிலும் அரசியல்?

வனஉயிரின மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனரான சாதிக் அலி, “ஊன் உண்ணியான புலிகளுக்கு உகந்த உணவான மாட்டிறைச்சியை வழங்க வேண்டும். டி.23 தற்போது அடைக்கப்பட்டிருப்பது பாஜக ஆளும் கர்நாடகத்தின் அரசு உயிரியல் பூங்கா என்பதால், காட்டுப் புலிக்கும் மாட்டிறைச்சி வழங்கத் தடைபோடுகிறார்கள். பிராய்லர் கோழியை மனிதர் உண்பது தொடர்பாகவே மாற்றுக் கருத்துக்கள் நிலவும்போது, உடல் நலிவடைந்திருக்கும் புலிக்கு அவற்றை தருவது தவறல்லவா?. புலி தொடர்பாக காணக்கிடைக்கும் வீடியோக்களும் இந்த அத்துமீறலை உறுதி செய்கின்றன. புலியின் உணவையும் தீர்மானிக்கும் இந்த போக்கு கண்டனத்துக்கு உரியது. உடனடியாக, ஊன் உண்ணிகளுக்கே உரிய உணவான ’ரெட் மீட்’ எனப்படும் மாடு மற்றும் எருமை இறைச்சியை புலிக்கு பரிமாறிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

x