சிவகங்கையும் சிதம்பரமும்... 10


“நாங்க மூப்பனார் கோஷ்டியும் இல்லை... வாழப்பாடியார் கோஷ்டியும் இல்லை. அன்புத் தலைவர் சிதம்பரம் கோஷ்டின்னு போடுங்க” 25 வருடங்களுக்கு முன்பு, இப்படி பேட்டியளித்த காங்கிரஸின் ஒரு களப்புலியைக் காணாதடித்த கதையை இன்றைக்குப் படிக்கலாம்.

காரைக்குடியில் காங்கிரஸ் அலுவலகத்தை யார் கைகொள்வது என்ற சர்ச்சை வெடித்தபோது, மூப்பனார் அணியும் வாழப்பாடியார் அணியும் வரிந்துகட்டி நின்றன. அப்போது ப.சிதம்பரம் மூப்பனார் பக்கம் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி, “நாங்க ப.சிதம்பரம் கோஷ்டி” என்று சொன்னவர் அண்ணன் சொ.துரைசிங்கம். அப்படி சிதம்பரத்தின் அதிதீவிர விசுவாசியாக இருந்தவர், இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். ஒரு காலத்தில் தலைவர் சிதம்பரத்துக்கும் அதன் பிறகு கார்த்தி சிதம்பரத்துக்கும் தீவிர விசுவாசியாக இருந்ததைத் தவிர, அந்த சிங்கம் வேறெந்த பங்கமும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.

சொ.துரைசிங்கம்

கானாடுகாத்தானைச் சேர்ந்த துரைசிங்கத்தின் குடும்பத்துக்கென ஒரு நெடிய பாரம்பரியம் இருக்கிறது. இவரது தாத்தா சோலைமலை அம்பலம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அழைத்துவந்து கானாடுகாத்தானில் காங்கிரஸ் கொடியை ஏற்றியவர். பெயருக்கேற்றார் போல் உருவத்தில் மட்டுமல்ல... செயலிலும் அண்ணன் துரைசிங்கம் சிங்கம்தான். 53 ஆண்டுகளாக காங்கிரஸைத் தவிர வேறெந்தச் சிந்தனையும் இல்லாமல் இருப்பவர். நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசி. கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் காங்கிரஸில் இருந்த இவர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லெவலுக்கு படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர்.

1978-ல் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கும் அன்னை இந்திரா காந்திக்கும் கருத்து மோதல்கள் வலுத்திருந்த நேரம். மொரார்ஜி அரசு முறை பயணமாக சென்னை வருகிறார். அப்போது சென்னையில் இருந்த துரைசிங்கம், துணிச்சலுடன் சென்று பிரதமரின் காருக்குள் கறுப்புக் கொடியை வீசி கைதானார்.

அன்னை இந்திரா காந்தியை விடுதலை செய்யக் கோரி, 1978-ல் காங்கிரஸார் நாடெங்கும் போராட்டம் நடத்தியபோது, துறைமுகம் பகுதி தபால் அலுவலகத்துக்குள் தனது ஆதரவாளர்கள் 10 பேருடன் சென்று துரைசிங்கம் நடத்திய போராட்டத்தைப் பார்த்து காவல் துறையே கதிகலங்கிப் போனது வரலாறு.

சிதம்பரத்துடன் துரைசிங்கம்

போராட்டமே வாழ்க்கையாக வடிவமைத்துக் கொண்ட துரைசிங்கம், இப்போதும் தனது ஊர் மக்களுக்குச் சொந்தமான 338 ஏக்கர் நிலத்தை அரசிடம் இருந்து மீட்பதற்காக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர். ஒன்றல்ல இரண்டல்ல... 4 முறை காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ்காரராக வேட்பு மனுவை தாக்கல் செய்தவர் துரைசிங்கம். ஆனால், ஒருமுறைகூட அவருக்கு அந்த வாய்ப்புக் கிட்டாமல் போனது ஆகப் பெரும் சோகம்.

1996-ல் மூப்பனார் காங்கிரஸை உடைத்து தமாகாவை கட்டியெழுப்பிய போது, துரைசிங்கம் காங்கிரஸை விட்டுச்செல்ல சற்றே யோசித்தார். ஆனால், தலைவர் சிதம்பரம் மூப்பனாரின் வலதுகரமாக நின்றதால், அவரை நம்பி இருக்க வேண்டிய இக்கட்டான நிலை துரைசிங்கத்துக்கு. அந்தத் தேர்தலில் இவரையும் பெரியவர் நாட்டுச்சேரி வீரப்பனையும் காரைக்குடி தொகுதிக்காக வேட்பு மனு தாக்கல் செய்யச் சொன்னார் தலைவர் சிதம்பரம். இருவரி்ல் யாருக்குக் கிடைத்தாலும் மற்றவர் விட்டுக்கொடுப்பது என்ற ஒப்பந்தத்துடன், இருவருமே வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள்.

அண்ணன் துரைசிங்கம் 20 வாகனங்களில் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்காக ஆள் பலத்துடன் இவர் கிளம்பும்போது, காரைக்குடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக வாசலில் நின்றிருந்த தொண்டர்கள், “அண்ணன் துரைசிங்கம் வாழ்க” என்று விண்ணதிர எழுப்பிய கோஷம்தான், தலைவரை மாற்றி யோசிக்க வைத்துவிட்டதோ என்று பலரையும் அப்போது பேச வைத்தது. ஆம், ஒன்றுக்கு 2 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், இருவரையும் விட்டுவிட்டு தனது உதவியாளரான ந.சுந்தரத்தை தமாகா வேட்பாளராக பரிந்துரைத்தார் சிதம்பரம். துரைசிங்கத்தின் மைத்துனரான சுந்தரம், துரைசிங்கத்துக்காக சீட் கேட்டு சென்னைக்குப் போனவர் என்பது அடிக்கோடிட்டு ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய விஷயம்.

மூப்பனாருடன் துரை சிங்கம்

அதற்குமேல் அங்கென்ன வேலை துரைசிங்கத்துக்கு? அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜுவுக்கு தீவிர களப்பணி செய்தார் துரைசிங்கம். அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் துரைசிங்கத்துக்கு நெருக்கடி கொடுத்தார்கள். இவரது மனைவி நாகஜோதி கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் பதவிக்கு அப்போது போட்டியிட்டார். கானாடுகாத்தான் மக்கள் ஏகமனதாக தேர்வுசெய்த வேட்பாளர் இவர். ஆனால், அருகிலுள்ள நேமத்தான்பட்டியும் கானாடுகாத்தான் பேரூராட்சிக்குள் வருவதால், நாகஜோதியை வீழ்த்த போட்டி வேட்பாளரை நிறுத்தினார்கள். அதில் கதர்சட்டைகளின் கையும் இருந்தது. அப்படி இருந்தும் போட்டி வேட்பாளரை டெபாசிட் இழக்கவைத்து வாகை சூடினார் திருமதி நாகஜோதி துரைசிங்கம்.

துரைசிங்கம் - நாகஜோதி

அதன்பிறகு, துரைசிங்கமோ அவரது குடும்பத்தினரோ மக்கள் பிரதிநிதிகளாக களத்தில் இல்லாவிட்டாலும் தனக்கென உள்ள மக்கள் செல்வாக்கை இன்றுவரை தக்கவைத்திருப்பவர் துரைசிங்கம்.

ஒரு காலத்தில், “நாங்க சிதம்பரம் கோஷ்டி” என்று உரக்கச் சொன்ன துரைசிங்கம், 1998, 1999 தேர்தல்களில் தமாகா வேட்பாளராகப் போட்டியிட்ட தலைவர் சிதம்பரத்தைத் தோற்கடிக்க, கை சின்னத்து வேட்பாளருக்காக உறக்கம் தொலைத்து உழைத்தார்.

மீண்டும் வரலாறு திரும்புகிறது. கட்சியைவிட்டுப் போனவர்கள் எல்லாம் நேரடியாகவும் புறவாசல் வழியாகவும் காங்கிரஸூக்குள் மீண்டும் வருகிறார்கள். 2004, 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் ப.சிதம்பரத்தை ஜெயிக்கவைக்க கை சின்னத்துக்கு வாக்குக் கேட்டார் துரைசிங்கம். அந்தத் தேர்தல்களில் கார்த்தி சிதம்பரத்துடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டார் துரைசிங்கம். 2014, 2019 தேர்தல்களில் கார்த்திக்காக களப்பணி செய்தவர், கார்த்தியை ஒரு டைனமிக் பவராகவே நினைத்தார். ஆனால், இருவரது குணாதிசயங்களுக்கும் ஒத்துப்போகாததால், அரசியலைவிட்டே மெல்ல ஒதுங்க ஆரம்பித்துவிட்டார் அண்ணன் துரைசிங்கம். இப்போது அரசியல் தவிர்த்து நிம்மதியாக ஆன்மிகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

இருந்தாலும் ஓவர் போனில் ஒரு நூறு பேரை திரட்டிவிடும் திராணி அண்ணன் துரைசிங்கத்திடம் இன்றும் இருக்கிறது. இவரைப்போன்ற வீரியமிக்க போராளிகளை, தொண்டர் செல்வாக்குபெற்ற தலைவர்களை உதாசீனப்படுத்திவிட்டு, ஏதோ... இன்பச் சுற்றுலாபோல் இடையிடையே கட்சிக்குள் வந்து போகிறவர்களுக்கு பட்டமும் பதவியும் கொடுத்து அழகுபார்ப்பது யாருடைய குற்றம்? சிவகங்கையின் உண்மையான காங்கிரஸ் தொண்டன் ஒவ்வொருவரும் இதைத்தான் கேட்கிறார்கள்.

நியாயமான கேள்விதானே!

(இவரைப் போலவே, நரைத்தாலும் களைக்காத சிறுத்தை ஒருவர் சிவகங்கையில் இருக்கிறார். அடுத்துப் பார்ப்போம்)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும்... 9

x