உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு நற்சான்றா?


நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை ஆளுங்கட்சியான திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே வாரிச்சுருட்டி இருக்கின்றன. 9 மாவட்டங்களைத் தவிர்த்து, ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் 40 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 106 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 630 ஊராட்சி வார்டு உறுப்பினர்களிலும் பெரும்பான்மையான இடங்களை திமுகவே கைப்பற்றியிருக்கிறது.

’’இந்த வெற்றி 5 மாத ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று. சாதனைச் சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்ல, செய்த சாதனைகளுக்கான மக்களின் அங்கீகாரமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது அரசு என்று வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி” எனக் கூறியுள்ளார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின்

இந்த வெற்றியை அப்படி நற்சான்றாகப் பார்க்க இயலுமா?

உள்ளாட்சித் தேர்தலில் எப்போதுமே ஆளும்கட்சி தன் பலத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி வெற்றிபெற்றுவிடும் என்பது பொதுவான கருத்து. அப்படி வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஆனால், அக்கருத்து எப்போதும் உண்மையாகிவிடுவதில்லை. எம்ஜிஆர் ஆட்சிக்காலம் தொடங்கி, நடந்து முடிந்த எடப்பாடி ஆட்சிவரையிலும் அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது அதிக இடங்களைத் திமுக பெற்ற முன்வரலாறு இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அப்போதைய காலகட்டத்தில் நிலவும் மக்களின் மனநிலையைப் பொறுத்தே முடிவுகள் அமையும்.

அந்த வகையில், இந்தத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு ஆதரவான மனநிலை மக்களிடம் தொடர்வதையே காட்டுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது இருந்த திமுக ஆதரவு மனநிலையே இன்னமும் தொடர்கிறது. கரூர், கல்லக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் ஆளுங்கட்சி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டுகள் எதுவும் எழவில்லை. அதேநேரத்தில், அதிமுகவின் தற்போதைய பலவீனமான நிலையே திமுகவின் பெருவெற்றிக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்ற கருத்தையும் புறந்தள்ளிவிட முடியாது.

எடப்பாடி பழனிசாமி

நிராயுதபாணியாக நிற்கும் அதிமுக

தன்னை ஒற்றைத் தலைமையாக நிலைநிறுத்திக்கொள்ள எடப்பாடி செய்துவரும் பிரயத்தனங்களால், அதிமுக கலகலத்துப் போயிருக்கிறது. கொங்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் அதிமுகவுக்கான பலத்தைப் பெருக்கும் அவரது வியூகமும் இந்தத் தேர்தலில் உடைந்து நொறுங்கிப் போயிற்று. அடுத்துவரும் தேர்தல்களைக் கவனத்தில் கொண்டு இத்தேர்தலில் பாமக கழன்றுகொள்ள, அதிமுக தற்போது கிட்டத்தட்ட நிராயுதபாணியாக நிற்கிறது. அதனால் பாமகவும் தங்கள் பகுதியான வட மாவட்டங்களில் பலமிழந்துள்ளது. அதிமுகவோ செங்கல்பட்டில் ஒன்று, விழுப்புரத்தில் ஒன்று என இரண்டே இரண்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களை மட்டும் பெற்றிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்தானே என்ற அலட்சியத்தால், அதிமுகவின் பொறுப்பாளர்கள் யாரும் பணத்தை இறக்கவில்லை. ‘தனிப்பட்ட ஆள்தானே ஜெயிக்கப்போகிறார், இதனால் ஆட்சியா வந்துவிடப் போகிறது’ என்ற அலட்சியமும் அதிமுகவினரிடம் காணப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நின்ற இடங்களில் ஈபிஎஸ் ஆதரவாளர்களும், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நின்ற இடங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தேர்தல் பணிகளில் அதிகம் ஈடுபடாமல் ஒதுங்கிக்கொண்டனர்.

அமைச்சர் சிவசங்கர்

ஆனால் எதிர்முகாமில் திமுகவினரோ, தேர்தலை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எதிர்கொண்டனர். தங்கள் தலைவர் சொன்னதுபோல 100 சதவீத வெற்றியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டனர். அதன் பயனையும் தற்போது அறுவடை செய்திருக்கின்றனர்.

‘’உள்ளுரில் செல்வாக்கு உள்ளவர்களே வெற்றி பெறுவார்கள் என்று சொல்லப்படும் ஊராட்சித் தேர்தலில், போட்டியிட்ட செல்வாக்குள்ள முக்கிய அதிமுக பிரமுகர்களே தோல்வியை சந்தித்திருக்கிறார்கள். பெரும்பாலான இடங்களிலும் திமுகவினரே வெற்றி பெற்றிருப்பதைப் பார்க்கும்போது, தமிழக மக்கள் திமுக மீது மிக நல்ல அபிமானத்துடன் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது” என்கிறார்கள் திமுகவினர்.

‘இந்த வெற்றி தொடரும்’

இதுகுறித்து தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் பேசினோம்.

‘’இது அரக்கோணம் முதல் தென்காசி வரையிலும் ஏறத்தாழ தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிபலித்த தேர்தல். இதில் திமுகவினரைப் பெருவாரியாக மக்கள் தேர்ந்தெடுத்திருப்பதற்குத் திமுகவையும், முதல்வரையும் மக்கள் நம்புகிறார்கள், நேசிக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம். ‘பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது’ என்ற அதிமுகவினரின் குற்றச்சாட்டுக்கு நெத்தியடியாகப் பதில் சொல்லியிருக்கிறார்கள் மக்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதைச் செய்துகொண்டிருக்கிறார், செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையை வாக்குகளாக அளித்திருக்கிறார்கள்.

தங்களை ஏமாளிகள் என்று பேசிய அதிமுகவினரைக் கிட்டத்தட்ட அப்புறப்படுத்திவிட்டார்கள். அதிகம் பேசாத, வீணான விமர்சனங்களைப் பொருட்படுத்தாத, மக்களுக்கான அடுத்தடுத்த திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டே போகிற முதல்வரை மக்கள் போற்றுகிறார்கள், ஆதரிக்கிறார்கள். இது அடுத்துவரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல, இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் பிரதிபலிக்கும்” என்றார் சிவசங்கர்.

எதிர்ப்பும் ஈர்ப்பும்

அதேவேளையில், மக்களில் ஒருசாராரின் மிகப் பெரிய எதிர்ப்பும் திமுக அரசுமீது இருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கோயிலில் இருக்கும் காணிக்கை நகைகளை உருக்கி தங்கமாக்கி அடகு வைக்கலாம், வார இறுதி நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்குத் தடை, கோயில் திருவிழாக்களுக்குத் தடை ஆகியவை ஒருசாராரிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதை பல்வேறு விதங்களில் உணர்ந்துகொள்ள முடிகிறது. இதை நன்றாக உணர்ந்திருந்ததால்தான், கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வரும்வரைக்கும் ஒத்தி வைத்திருந்தார் ஸ்டாலின்.

எல்லாவற்றையும் தாண்டி, முதல்வர் ஸ்டாலினின் அண்மைக்காலச் செயல்பாடுகள் வெகுஜனங்களை வெகுவாகக் கவர்ந்திருப்பதையும், ரசிக்க வைத்திருப்பதையும் கண்கூடாகக் காண முடிகிறது. பயணங்களின்போது இடைமறிக்கும் பொதுமக்களிடம் வாகனத்தை நிறுத்திப்பேசுவது, காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வது, எதிர்வீட்டாரிடம் சென்று பேசுவது, சைக்கிள் பயணம், நடைப் பயிற்சி ஆகியவற்றுக்கு சாமானியராக சென்றுவருவது உள்ளிட்டவை மக்களின் நல்ல அபிப்ராயத்தைப் பெற்றுத்தந்திருக்கின்றன.

எளிமையாகப் பழகும் ஸ்டாலின்

அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பல லட்சம் பேரால் பகிரப்படுவதையும், பார்க்கப்படுவதையும் அதற்கு சாட்சியாகக் கொள்ளலாம். முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் உங்கள் தொகுதியில் முதல்வர் ஆகியவற்றுக்கு வரும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்வது, தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்திருப்பது உள்ளிட்டவை படித்தவர்களுக்கும் ஸ்டாலின் மேல் பாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடரும் எதிர்பார்ப்புகள்

திமுகவின் நேரடியான எதிரிக்கட்சியும், தமிழகத்தின் பிரதான கட்சியுமான அதிமுக தோற்றிருக்கிறது என்பதில் திமுகவுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறதோ, அதே அளவுக்குக் கவலையும் கொள்ளத்தக்கதே இத்தேர்தல் முடிவுகள் என்பதை திமுக கவனத்தில் கொள்ள வேண்டும். இது திமுக மீதான மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது எனும்போது, அந்த நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் திமுகவுக்கு இருக்கிறது. இன்னும் கூடுதலான எதிர்பார்ப்புகள் அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டிருப்பதையும் அவற்றை உற்றுக்கவனித்து அதன்வழிச் செயல்பட வேண்டிய கட்டாயமும் இந்த ஆட்சிக்கு இருக்கிறது.

நன்றி தெரிவிக்கும் திமுகவினர்

நிறைவேற்றியவை போக மீதமிருக்கும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகை, ஐந்து பவுன் வரையிலான நகைகள் தள்ளுபடி என்பதான மக்களின் மனம்கவர்ந்த, மக்களுக்கு நேரடியான பயனைத்தரும் திட்டங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவை எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகிறதோ அந்த அளவுக்கு திமுகவின் பலம் மேலும் உயரும்.

நீடிக்கும் சவால்கள்

திமுகவுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள சட்டப்பேரவைத் தேர்தலும், இந்த உள்ளாட்சித் தேர்தலும் திமுகவின் எதிர்கால தேர்தல் உத்திகளை வகுத்துக்கொள்ளத்தக்க எச்சரிக்கையையும் தந்திருக்கிறது என்றும் சொல்லலாம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தாங்கள் தமிழக மக்களிடம் தவிர்க்க முடியாதவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டியது நாம் தமிழர் கட்சி. யார் நின்றாலும், எந்தக் கூட்டணி அமைந்தாலும், எந்த அலை வீசினாலும் தங்களுக்கான வாக்குகள் குறையாது, அதிகரிக்கவே செய்யும் என்பதைக் காட்டும்விதமாக 29,58,458 வாக்குகளை அக்கட்சி பெற்றது.

இந்தத் தேர்தலில் நாதகவுக்குச் சொல்லிக்கொள்ளும் விதத்தில் வெற்றி கிடைக்கவில்லை. என்றாலும், சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்குகள், கடுமையான போட்டிச்சூழலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கானவை என்பதால் திமுக அதை ஒருபோதும் எளிதாகக் கடந்துவிட முடியாது.

அதேபோல இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்குக் கவலை அளிக்கக்கூடிய இன்னொரு விஷயம், விஜய் மக்கள் இயக்கம் பெற்றிருக்கும் சிறுவெற்றிகள். 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் 115 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக அந்த இயக்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள், பெரும்பாலும் கட்சி சின்னம் இல்லாமல் பொதுவான சின்னங்கள் ஒதுக்கப்படும் ஊராட்சி உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் அவர்கள், அப்பகுதி மக்களிடம் நல்லவிதமாக அறிமுகமானவர்கள் என்பதை திமுக உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

தங்கள் நலனுக்காகப் பேசும், செயலாற்றும் நபர்கள் அல்லது கட்சிகளுக்கே தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணமே இந்த உள்ளாட்சி முடிவுகள். அதை திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே உணர்ந்து செயல்படவேண்டும்!

x