ஜனநாயகத்தின் நம்பிக்கை வேர்கள்!


ஸாருகலா

உள்ளாட்சித் தேர்தல், அவரவர் வசிக்கும் பகுதிகளில் நடக்கும் ஜனநாயகத் திருவிழா. அதன் வெற்றியாளர்கள் குறித்து அந்தந்த வட்டாரப் பகுதிக்குள் மட்டுமே பேசிக்கொள்வதும், சிலாகிப்பதுமாகப் பொழுதுகள் நகரும். ஆனால், அந்த வட்டத்தையெல்லாம் தாண்டி பெருமாத்தாளும் ஸாருகலாவும் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார்கள். காரணம், அண்மையில் நடந்து முடிந்த, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி ஈட்டியிருக்கும் பெருமாத்தாளுக்கு 90 வயது. ஸாருகலாவோ கல்லூரியில் முதுகலைக் கல்வி பயில விண்ணப்பித்துக் காத்திருக்கும் 22 வயதே ஆன பொறியியல் பட்டதாரி. தேர்தல் முடிவுகள் வெளியான கணம் முதல் இருவரும் வாழ்த்து மழையில் நனைந்துவருகின்றனர்.

தென்காசி மாவட்டம், வெங்காடம்பட்டி கிராம ஊராட்சி இப்போது களை கட்டியிருக்கிறது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 4 வேட்பாளர்களை வீழ்த்தி ஸாருகலா ஊராட்சித் தலைவராக வெற்றிபெற்றிருக்கிறார். முதுகலை கல்விக்குச் சேர விண்ணப்பித்துவிட்டு காத்திருந்த நிலையில்தான், ஊராட்சித் தலைவர் பதவிக்கான அறிவிப்பு வந்தது. நம்பிக்கையோடு களம் கண்டவரை 796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்துள்ளனர் கிராம மக்கள். முகத்தில் அந்த மகிழ்ச்சி படர நம்மிடம் பேசத் தொடங்கினார் ஸாருகலா.

“என்னோட அப்பா ரவி சுப்பிரமணியம் ஒரு தொழிலதிபர். ஊரில் செங்கல் சூளையும் நடத்திவருகிறார். அம்மா, சாந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். என் தம்பி அழகு சந்துரு ப்ளஸ் டூ படிக்கிறார். என் அப்பாவுக்கு சமூகசேவையில் ஆர்வம் அதிகம். மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அப்பா உடனே களத்தில் நிற்பார். ஒருமுறை கோடைகாலத்தில் எங்கள் கிராமம் கடுமையான வறட்சியில் சிக்கிக்கொண்டது. உடனே அப்பா, தனது சொந்தப் பணத்தில் தண்ணீர் வாகனத்தை எடுத்துவந்து அனைத்து வீடுகளுக்கும் இலவசமாகவே குடிநீர் விநியோகித்தார். இப்படி அப்பாவின் சமூகசேவையைப் பார்த்தே வளர்ந்ததால் எனக்கும் சிறுவயதில் இருந்தே சமூக அக்கறை அதிகம். எங்கள் ஊராட்சி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டதும் அப்பாவும், குடும்பத்தினரும், ‘தேர்தலில் நிற்கிறாயா?’ எனக் கேட்டார்கள். அப்படித்தான் போட்டியிட வந்தேன். கடந்தமுறை இதே ஊராட்சியில் என் அப்பா போட்டியிட்டார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை. இந்தமுறை நான் களம் இறங்கியதும் முதலில் லேசான தயக்கம் இருந்தது. காரணம்... தேர்தல், அரசியல் இதெல்லாம் எனக்கு ரொம்பப் புதிது.

வெற்றிச் சான்றுடன் ஸாருகலா

ஆனால், பொறியியல் படித்த பெண், இளையோருக்கான அரசியல் களம் என என்னை மக்களில் பலரும் ஏற்றுக்கொண்டனர். இது எனது தேர்தல் பிரச்சாரத்தின்போதே எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஊட்டியது. மக்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நிறைய நல்ல விஷயங்களைச் செய்யும் திட்டம் இருக்கிறது. முதுகலை பொறியியல் படிப்பைத் தொடர்ந்துகொண்டே, ஊராட்சித் தலைவராகவும் திறம்படச் செயல்படுவேன். எனது ரோல் மாடலே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். அவர் ஓய்வறியாத சூரியன். அவரது பாணியிலேயே சமத்துவத்தை எங்கள் கிராமத்தில் நிலைநாட்டுவேன்” என நம்பிக்கைத் தெறிக்கச் சொல்கிறார் ஸாருகலா.

ஊராட்சித் தலைவர் ஆன கையோடு, தான் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த இருக்கும் திட்டங்களையும் மக்களை அழைத்து விளக்கியிருக்கிறார் ஸாருகலா. அதில், “நமது ஊராட்சி மொத்தம் 23 குக்கிராமங்களை உள்ளடக்கியிருக்கிறது. இந்த ஊராட்சியில் தண்ணீர் பஞ்சம்தான் முதல் பிரச்சினை. அதைப் போக்கும்வகையில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதுதான் முதல் வேலை” எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், ஊரில் பூட்டிக்கிடக்கும் நூலகங்களைத் திறப்பது, இளையோரை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பது தனது லட்சியங்களை மக்கள் முன் பட்டியலிட்டுள்ளார். ஊராட்சித் தலைவரானால் மக்களுக்கு அரசு மூலம் இன்னும் பல சேவைகளைச் செய்ய முடியும் என அவர் தந்தை சொன்னதுதான், ஸாருகலாவைத் தேர்தல் வெற்றியை நோக்கி நகர்த்தியிருக்கிறது.

வெற்றிச் சான்றுடன் பெருமாத்தாள்

இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நிகழ்த்தியிருக்கும் இன்னொரு அதிசயம், பெருமாத்தாள் பாட்டியின் வெற்றி. ஸாருகலாவை இளையவர் என்பதாலேயே உச்சிமுகர்ந்து கொண்டாடிய வெங்காடம்பட்டி கிராம மக்களைப் போலவே, மூத்தவர் என்பதாலும் விடா முயற்சி கொண்டவர் என்பதாலும் பெருமாத்தாளுக்குப் பெரும் வெற்றியைப் பரிசளித்துள்ளனர் சிவந்திப்பட்டி கிராம மக்கள்.

பாளையங்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திப்பட்டி கிராம ஊராட்சியில் வெற்றிபெற்றிருக்கும் பெருமாத்தாளுக்கு 90 வயதாகிறது. அவரது வெற்றியில் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயமும் இருக்கிறது. அவரை எதிர்த்து போட்டியிட்ட 2 வேட்பாளர்களும் வைப்புத்தொகையைப் பறிகொடுத்துள்ளனர். அதிலும் 2-வது இடத்துக்கு வந்தவரைவிட, ஆயிரம் வாக்குகள் அதிகம் வாக்கியிருக்கிறார் பெருமாத்தாள்.

வயதால் 90-ஐ தொட்டுவிட்டாலும் இளம்பெண்ணைப்போல சுறுசுறுப்பு காட்டுகிறார் பெருமாத்தாள். ‘பாட்டி தானே!’ என எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் மெத்தனமாக நினைத்துக்கொண்டிருக்க, இடைவிடாத பாட்டியின் தேர்தல் பயணமே தொடக்கநிலையில் கவனம் குவித்தது. இப்போது வெற்றியும்பெற்றுவிட, கூடுதல் உற்சாகத்தோடு பேசத் தொடங்குகிறார் பெருமாத்தாள்.

“எங்க குடும்பத்துக்கு அரசியல் புதுசு இல்லை. நாங்கள் பாரம்பரியமாகவே திமுக குடும்பம். இதே சிவந்திப்பட்டி ஊராட்சியில் எங்க குடும்பத்து உறுப்பினர்கள் ஏற்கெனவே 5 தடவை பஞ்சாயத்துத் தலைவரா இருந்திருக்காங்க. என்னோட மூத்த மகன் கோட்டியப்பன் ஒரு தடவையும், இளைய மகன் தங்கப்பாண்டியன் நாலு தடவையும் தலைவரா இருந்திருக்காங்க. இந்த தடவை எங்க குடும்பத்துக்கு டபுள் சந்தோஷம்” எனப் பூடகமாக பெருமாத்தாள் சொல்ல, “அதையும் சொல்லுங்க பாட்டி” எனக் கேட்டோம்.

“நான் பஞ்சாயத்துத் தலைவரா ஜெயிச்சுட்டேன். என் மகன் தங்கப்பாண்டியன் பாளையங்கோட்டை ஒன்றியக் கவுன்சிலருக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டிபோட்டான். அவனும் ஜெயிச்சுட்டான். ஒரு தாய்க்கு, தான் ஜெயிக்கிறதைவிட தன் பிள்ளை ஜெயிப்பதுதானே பெரிய சந்தோஷம்? தேர்தலில் நிற்கவும், மக்கள் பணிசெய்யவும் வயது ஒரு பிரச்சினையே இல்லை. மக்கள் எப்பவும் என்னைச் சந்திக்கலாம். நான் இன்னும் ஆரோக்கியமாத்தான் இருக்கேன். அதுக்கு ஒருவகையில் அந்தக் காலத்தில் நான் சாப்பிட்ட ஆரோக்கியமான உணவுகளும் காரணம். ஆனால், இன்று மக்கள் அவசர யுகத்தில் இருக்காங்க. என் கிராம ஊராட்சிக்குள் ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த இருக்கேன். மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் போன்ற பல தேவைகள் கிடப்பில் கிடந்தது. நீண்டகாலத்துக்குப் பின்பு உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்திலும் நல்லாட்சி மலர்ந்துள்ளது. அதை உள்ளாட்சியிலும் பயன்படுத்தி எங்க கிராமத்தை முன்னுக்கு கொண்டுவருவேன்” என ஆத்மார்த்தமாக முடித்தார் பெருமாத்தாள்.

‘இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்கள்‘ என்பார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களுக்குள் நிகழ்ந்திருக்கும் இந்த ஆச்சரிய வெற்றிகள், வாக்களித்த மக்களின் வாழ்விலும் ஒளியேற்ற வழிவகுக்கட்டும்!

x