தமிழ்நாட்டிலேயே பலசாலி ஒருவர், பல போட்டிகளில் எதிரிகளைப் பந்தாடி சாம்பியனாக நீண்டகாலம் நீடித்தவர், 50-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தனது பொன்விழாவைக் கொண்டாடுவதா, கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துக் கொண்டிருக்கிற நோய்க்கு வைத்தியம் பார்ப்பதா என்கிற குழப்பம் அவருக்கு. அந்த பலசாலி வேறு யாருமல்ல... அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்!
பொன்விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில்கூட அதிமுகவினரிடம் ஒன்றுமையில்லை. சிறப்பாகக் கொண்டாடுவது யார் என்பதில் போட்டியிருந்தால்கூட வரவேற்கலாம், யார் முன்னின்று நடத்துவது என்பதில்தான் போட்டி. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா போன்றோருடன் புதிதாக மல்லுக்கட்டுபவர்கள் பாரம்பரியமான எம்ஜிஆர் தொண்டர்கள்.
எம்ஜிஆர்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த பொன்விழா ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ-வான ஜே.சி.டி.பிரபாகர் பேசியது விவாதத்தைக் கிளப்பியது.
"கட்சி அலுவலகத்துக்குப் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயரைச் சூட்ட வேண்டும். இதுவரையில் எம்ஜிஆரைப் புறக்கணித்தது போதும். இனியாவது எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரது படத்தையும் ஒரே அளவில் நாம் பயன்படுத்த வேண்டும். எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்தபோது வெறுமனே ஏழரை லட்சம் முதல் 10 லட்சம் தொண்டர்கள்தான் இருந்தார்கள். ஆனாலும் தொடர்ந்து 3 முறை அதிமுகவை அரியணை ஏற்றியதுடன், திமுகவை ஆட்சிக்கே வரவிடாமல் வனவாசம் அனுப்பிவிட்டார். ஆனால், ஒன்றரைக் கோடி தொண்டர்களுடன் கட்சியை வழிநடத்தியவர் என்று சொல்லப்பட்ட ஜெயலலிதா காலத்தில், 3 முறை திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. எம்ஜிஆரால் முடிந்தது ஏன் ஜெயலலிதாவால் முடியவில்லை என்று நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இப்போதும் கட்சி சுருங்கிக்கொண்டே வருவது பற்றியும் பேச வேண்டும்" என்றார் அவர். இதற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி எதிர்ப்பு தெரிவிக்க, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் போன்றோர் இக்கருத்தை வரவேற்றார்கள்.
இதுகுறித்து அதிமுகவிலிருந்து எடப்பாடியால் ஒதுக்கப்பட்டிருக்கும் முன்னாள் எம்பி-யான கே.சி.பழனிசாமியிடம் பேசினோம்.
”இன்றைக்கும் தமிழக மக்களின் மனங்களில் எம்ஜிஆர் மிகப்பெரிய சக்தியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். இன்றும் அதிமுகவில் எம்ஜிஆர் தொண்டர்கள் வலிமையோடுதான் இருக்கிறார்கள். எம்ஜிஆர் பெயரை முன்னிறுத்தினால் மட்டும்தான் மக்களிடம் ஓட்டு வாங்க முடியும், திரும்ப ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை இருப்பதையே இந்த விவாதம் காட்டுகிறது.
ஜெயலலிதா காலத்தை விடுங்கள், ஈபிஎஸ், ஓபிஎஸ் காலத்திலும் எம்ஜிஆருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாததற்குக் காரணம், அவர்கள் எம்ஜிஆரை நேரில் பார்த்ததோ, பழகியதோ கிடையாது. சினிமாவில் மட்டும்தான் எம்ஜிஆரைப் பார்த்திருப்பார்கள். அதிலும் ஓபிஎஸ், கலைஞர் வசனத்தைப் படித்து வளர்ந்தவன் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார். பிழைப்புவாதிகளால் கட்சியைக் கட்டிக்காக்க முடியாது. இவர்களைத் தலைமைப் பதவிக்கு பாஜக ஏன் கொண்டுவந்தது என்பதை இப்போதுதான் அதிமுக தொண்டன் உணர ஆரம்பித்திருக்கிறான்” என்றார் கே.சி.பழனிசாமி.
சசிகலா
எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தப் புறப்பட்ட சசிகலா, அதற்குமுன் வெளியிட்ட அறிக்கையில், ”கட்சி வீணாவதை, வளர்த்த எங்களால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு தாய்போல இருந்து கட்சியைக் காப்பாற்ற வேண்டும். இப்போது அப்படியில்லை” என்று கூறியிருந்தார். இந்த அறிக்கை அப்படியொன்றும் பெரிய எழுச்சியைத் தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்திவிடவில்லை. டஜன் கணக்கில் அவர் வெளியிட்ட ஆடியோக்களைக் கேட்டு அலுத்துப்போயிருக்கிறார்கள் சசிகலா அனுதாபிகள்.
”அந்தம்மா ஜெயலலிதா காலத்து அரசியலையே செய்ய நினைக்கிறார். ஒரு அறிக்கை, ஒரு ஆர்ப்பாட்டம், ஒரு கூட்டம் மட்டும் போட்டுவிட்டால் எல்லாமே மாறிவிடும் என்ற நிலையெல்லாம் ஜெயலலிதா காலத்துடன் முடிந்துவிட்டது. களத்திற்கு வரவேண்டும். இவர் ’ஒர்க் ஃப்ரம் ஹோம்’ அரசியல் செய்ய நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமி தன்னை நம்பிவந்த கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏ-க்கள், எம்பி-க்களுக்கு எல்லாம் செல்வத்தை வாரி வழங்கியதோடு நிறுத்தவில்லை, ஆட்சி போன பிறகும் அவர்களுக்கு மாதம் குறைந்தது 5 லட்சமாவது நிரந்தர வருமானம் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்துவிட்டார். சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் நம்பி வந்த நாங்கள் எல்லாம் கைக்காசை இழந்து, தேர்தலுக்காகச் சொத்து பத்துக்களை விற்று நடுத்தெருவில் நிற்கிறோம்.
இனியும் இவர்களை நம்பி யாரும் முழுவீச்சுடன் அரசியலில் ஈடுபட மாட்டார்கள். அரசு முடக்கிய சொத்துக்கள் போல இன்னும் நூறு மடங்கு சொத்து சசிகலா குடும்பத்தினரிடம் இருக்கிறது, அதை இறக்கி அரசியல் செய்தால் ஒழிய அதிமுகவை அவரால் மீட்க முடியாது” என்கிறார் தஞ்சையைச் சேர்ந்த சசிகலாவின் தீவிர ஆதரவாளர் ஒருவர்.
”உங்களைப் போலவே அதிமுகவை மீட்க வேண்டும் என்றுதானே சசிகலா பேசுகிறார். அவரை ஏன் உங்களைப் போன்றோர் ஆதரிக்கவில்லை?” என்று கே.சி.பழனிசாமியிடம் கேட்டபோது, ”அதிமுகவை மீட்க வேண்டும் என்பதைவிட, அது தன் தலைமையில் செயல்பட வேண்டும் என்பதுதான் சசிகலாவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 1962-ல் இருந்து 1989 வரையில் எம்ஜிஆர் மன்றங்களை ஒருங்கிணைத்தது, கட்சியை நிர்வகிப்பதில் எம்ஜிஆருக்கு உதவியாக இருந்தது எல்லாமே ஆர்.எம்.வீரப்பன்தான். ஜெயலலிதாவுக்கு தான் என்னவெல்லாம் செய்ததாக சசிகலா இன்று சொல்கிறாரோ அதை எல்லாம் எம்ஜிஆருக்குச் செய்தது மட்டுமின்றி, கள அரசியலிலும் நேரடியாக ஈடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன்.
ஆனால், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அவர் இடத்திற்கு ஆர்.எம்.வீ-யால் வர முடியவில்லை. எனவே, சசிகலா இந்த மாதிரியான வீண் ஆசைகளை விட்டுவிட்டு, அதிமுகவை வழிநடத்தியவர் என்கிற முறையில் அக்கட்சியை மீட்கவும், பலப்படுத்தவும் ஆக்கபூர்வமான யோசனைகளை திறந்த மனதுடன் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் நிச்சயம் தொண்டர்கள் ஏற்பார்கள். நிர்வாகிகளும் காது கொடுத்துக் கேட்பார்கள். இன்றைய அதிமுகவில் அவரால் பயன்பெற்றவர்களைவிட பாதிக்கப்பட்டோர்தான் அதிகம். எனவே, அவர் நேரடி அரசியல் என்கிற கனவை மூட்டைகட்டி வைத்துவிடுவதே நல்லது.
மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சி என்று தொடர்ந்து அதிமுக தோற்றுக்கொண்டிருப்பதும், இன்னொரு பக்கம் பாஜக படிப்படியாக வளர்ந்துகொண்டிருப்பதும் என்னைப் போன்ற தொண்டர்களுக்கு ரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது. அதிமுக உருப்பட வேண்டும் என்றால் முதலில் நியமன முறையை ரத்துசெய்ய வேண்டும். நிர்வாகிகள் அனைவரும் நேரடியாகத் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். நியமன அரசியல் என்று வருகிறபோது சாதி, பணபலம் உள்ளவர் களுக்கும், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கும்தான் பொறுப்பு கிடைக்கும். தொண்டர்கள் இயக்கத்திலிருந்து மேலும் அந்நியப்பட்டுவிடுவார்கள்” என்றார்.
மு.க.ஸ்டாலின்
”எல்லாக் கட்சியிலும் கொள்கைவாதிகள் இருப்பார்கள். திமுகவில் இருக்கிற அவர்கள் பெரியார், அண்ணா புகழ் பாடுவார்கள். அதிமுகவில் இருக்கும் கொள்கைவாதிகள் அண்ணா, எம்ஜிஆர் புகழ்பாடுவார்கள். ஆனால், அவர்களின் எண்ணிக்கை சொற்பமாகத்தான் இருக்கும். வளரும் கட்சிகளைப் பொறுத்தவரையில் இன்றைய தலைவர்களையும், நாளைக்குத் தலைவராக வாய்ப்புள்ள வாரிசுகளையும்தான் தூக்கிக் கொண்டாடுவார்கள். தேயும் கட்சியில்தான் பழைய தலைவர்கள், ஆரம்ப காலக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் பேசுவார்கள்.
அதிமுகவில் இன்றுள்ள தலைவர்கள் பலமற்றவர்களாக இருப்பதால்தான் இப்படியான பேச்சு வருகிறது. திமுகவில் பாருங்கள், உதயநிதி வாழ்க என்று சட்டமன்றத்திலும், வெளியிலும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதிமுக பொன்விழா ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக மதச்சார்பற்ற கட்சியாக இருக்க வேண்டும் என்ற பேச்சும் எழுந்தது. அங்கு பேசப்பட்டதைத்தான் செல்லூர் கே.ராஜூ போன்றோரும் வெளியே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். எனவே அதிமுக இப்போது செய்ய வேண்டியது பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்வதும், தன்னை மதச்சார்பற்ற சக்தியாக வெளிப்படுத்துவதும்தான்” என்கிறார் மதுரையைச் சேர்ந்த அதிமுகவின் சீனியர் தொண்டர் ஒருவர்.
அதிமுக ஆட்சியில் திமுக எம்எல்ஏ-க்களுக்கும் படியளந்தார்கள் ஆட்சியாளர்கள். அந்தப் பாசத்தில்தான் கொள்ளையடித்த அதிமுக அமைச்சர்களை எல்லாம் உள்ளே அனுப்பாமல் பாசம் காட்டுகிறது திமுக. ஆட்சியில் இருந்தபோது அமைச்சர்களாகவும், மாவட்டச் செயலாளர்களுமாக இருந்து திமுகவினருக்கு பங்குகொடுத்தவர்கள் இன்று அதிமுக எம்எல்ஏ-க்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் இருக்கிறார்கள். அதே பங்கை திரும்ப திமுகவிடம் இருந்து பெறவேண்டும் என்பதால், திமுகவை விமர்சிக்காமல் அரசியல் செய்கிறார்கள். இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, பாஜக முழு எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. அதிமுகவினரோ அஞ்சு, பத்து பெர்சென்ட் கமிஷனுக்காக தலையாட்டுபவர்களாகிவிட்டார்கள். தங்கள் மீது ரெய்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாதவரையில் இவர்கள் திமுகவை எதிர்த்து அரசியல் செய்யவே மாட்டார்கள்.
இந்தப் போக்கை திமுகவினரும் ரசிப்பதுபோல் தெரிகிறது. ஆனால், அதிமுக என்ற கட்சி இருந்தால்தான், இங்கே திராவிட அரசியல் இருக்கும். அதிமுக அழிந்து அந்த இடத்திற்கு பாஜக வந்தால், பாஜகவின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டிய நிலைக்குத் திமுகவும் போய்விடும். அவர்களுக்குப் பயந்தே ஆட்சி செய்ய வேண்டிய நிலையும் வரலாம். எனவே, திராவிட சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்க நினைக்கும் ஸ்டாலின், அதிமுகவைக் காப்பாற்ற முன்வர வேண்டும். அதுதான் அவருக்கும் நல்லது. அதற்கு அதிமுகவில் உள்ள பிழைப்புவாதிகள், கொள்ளைக்காரர்களை எல்லாம் பிடித்து உள்ளே போட வேண்டும். கட்சி உண்மையான கொள்கைவாதிகள் கைக்குப்போக மறைமுக உதவி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் இருக்கிறது.
மொத்தத்தில் தமிழக அரசியலில் மாபெரும் சக்தியாக இருந்த ஒரு கட்சி, மீண்டும் உயிர்த்தெழுவதற்கு எதிர்க்கட்சியையும் நம்பியிருப்பதுதான் காலத்தின் கோலம்!