அமுதாவுக்கு காத்திருக்கும் அஸைன்மென்ட் என்ன?


அமுதா ஐஏஎஸ்

தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து மத்திய அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புகிறார் அமுதா ஐஏஎஸ். நேர்மையான நடவடிக்கைகளுக்கும், எடுத்த கடமையை முடிப்பதிலும் சிரத்தைக்குப் பேர் போன அமுதா ஐஏஎஸ்., தமிழகம் திரும்புவதன் பின்னணி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் அமுதா ஐஏஎஸ்

பிறந்து முதல் கல்லூரி படிப்பு வரை மதுரை பின்னணி கொண்ட அமுதா, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு கேடரில் 1994 பேட்ச் அதிகாரியாக சொந்த மாநிலத்தில் அரசு சேவையை ஆரம்பித்தவர். சப் கலெக்டர், கலெக்டர் என அமுதா பணியாற்றிய இடங்களில் எல்லாம் தனி முத்திரை பதித்தவர். ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றியபோது சந்தன வீரப்பன் செல்வாக்கிலிருந்த சத்தியமங்கலம் காடுகளில் துணிச்சலாக பிரவேசித்து கிராம மக்களின் அபிமானத்தைப் பெற்றார். தர்மபுரியில் பெண் குழந்தைகள் கல்விக்காகவும் மகளிரின் சுய சார்புக்காகவும் அவர் எடுத்த நடவடிக்கைகள் இன்றும் நினைவு கூரப்படுபவை. தொடர்ந்து காஞ்சிபுரம் ஆட்சியராக செங்கல்பட்டு மணல் கொள்ளையர்களுக்கு எதிராக களத்தில் துணிந்து நின்றார். சிறப்பு அதிகாரியாக, சென்னை பெருவெள்ளப் பேரிடரின்போது தத்தளித்த மக்களுக்காக நீரில் இறங்கி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

அமுதா ஐஏஎஸ்

ஆட்சிகள் மாறியபோதும் அடுத்தடுத்து அமுதா வகித்த சுமார் 15 துறைகளிலும் நற்பெயரையே சம்பாதித்தார். சிக்கலான சூழல்களில் விரைந்து சமயோசிதமாய் செயல்படுவது அமுதாவின் தனி அடையாளம். ஜெயலலிதா, கருணாநிதி என தமிழகத்தின் பெரும் ஆளுமைகள் மறைந்தபோது அவர்களுக்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகளில் தனது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தினார். அதிலும் கருணாநிதி மறைந்தபோது அப்போதைய அரசியல் இழுபறியில் இறுதி சடங்கு நிகழ்வை சுமுகமாக ஒருங்கிணைக்கும் பணி கடைசி நேரத்திலே அமுதாவிடம் கையளிக்கப்பட்டது. சில மணி நேர அவகாசமே இருந்தபோதும் தனது சுறுசுறுப்பாலும் சாதுர்யத்தாலும் எவர் தரப்பிலும் கிலேசம் எழாது பணியாற்றினார் அமுதா. அப்போதே மு.க.ஸ்டாலினின் ’குட் புக்’ அபிமானத்துக்கு ஆளானவரை, ஸ்டாலின் முதல்வரானதும் உருவான செயல்புலி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவில் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டார். ஏனெனில் அப்போது அமுதாவுடன் இணைந்து திறம்பட செயல்பட்ட அனுஜார்ஜ் ஐஏஎஸ், பிற்பாடு முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர்களில் ஒருவராக மாறினார்.

கருணாநிதி இறுதிச்சடங்கு நிகழ்வில் மு.க.ஸ்டாலினுடன் அமுதா ஐஏஎஸ்

தொடர்ந்து மத்திய அரசுப் பணியாக உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் செயல்படும் ஆட்சித்துறை பயிற்சி மையத்தில் பேராசிரியராக இருந்த அமுதா, பிரதமரின் அலுவலத்தில் கூடுதல் செயலாளராக பின்னர் நியமிக்கப்பட்டார். அங்கு அவரது பணிக்காலம் நிறைவடையும் முன்னரே தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து தமிழகப் பணிக்காக அமுதா விடுவிக்கப்பட்டிருக்கிறார். தமிழகப் பணிக்கு திரும்பும் அமுதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்படைக்கும் பணி என்னவாக இருக்கும் என்ற ஊகங்கள் உயரதிகாரிகள் வட்டத்தில் இப்போதே றெக்கையடிக்கின்றன. அமுதாவிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பு எதாயினும் செயலர் பொறுப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதை அவர் ஓரளவேனும் நேர் செய்ய உதவுவார். இறையன்பு, உதயசந்திரன் என செயல்புலி அதிகாரிகள் அடங்கிய படையில் அமுதா சேர்வது மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனுகூலம் சேர்க்கட்டும்.

தமிழகப் பணியில் அரசின் முதன்மைச் செயலாளர்களில் ஒருவராக தற்போது பணியாற்றும் ஷம்பு கல்லோலிகர் அமுதாவின் கணவர் ஆவார். கபடியில் தேசிய வீராங்கனையான அமுதா, தற்காப்புக் கலையான கராத்தேவிலும் அத்துபடியானவர். 51 வயதாகும் அமுதாவின் சுறுசுறுப்பில் இந்த விளையாட்டுகளுக்கும் பங்குண்டு.

x