குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் 


தென்காசி: குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் கோடை மழை தீவிரம் அடைந்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கோடை மழையைத் தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இருப்பினும் தென்மேற்கு மழை தீவிரம் அடையாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. கடந்த ஒரு வாரமாக போதிய மழை பெய்யாததால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. விடுமுறை தினமான இன்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அதிக நீர்வரத்து காரணமாக ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அருவிகளில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து, சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை வரை அடவிநயினார் அணைப் பகுதியில் 3 மி.மீ., குண்டாறு அணைப் பகுதியில் 2 மி.மீ., தென்காசியில் 1 மி.மீ. மழை பதிவானது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது.