சிவகங்கையும் சிதம்பரமும்... 9


நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 1984-ல் உள்ளாட்சி தேர்தலை நடத்தினார் எம்ஜிஆர். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் - அதிமுக கூட்டு. அப்போது, கிழக்கு முகவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி 17 ஒன்றியத் தலைவர் பதவிகளை வென்றது. காளையார்கோவில் ஒன்றிய தலைவர் பதவிக்கு, ஐயா உ.சுப்பிரமணியத்தின் மகன் அண்ணன் சுப.உடையப்பனை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த கட்சியினர் பலரும் வற்புறுத்தினார்கள். ஆனால், “நான் மாவட்ட தலைவராக இருக்கும் போது மகனுக்கு சீட் கொடுத்தால் தப்பான உதாரணமாகப் போய்விடும்” என்று நியாயம் சொல்லி, நயமாக தவிர்த்தார் ஐயா உ.சுப. இன்றைக்கு, தான் பதவியில் இருக்கும் போதே தனது பிள்ளையையும் தனது அரசியல் வாரிசாக உயர்ந்த பதவிகளில் உட்காரவைக்கத் துடிப்பதைப் பார்க்கும்போது, இப்படியும் சிலர் வாழ்ந்திருக்கிறார்களே என ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை.

1989 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், அதிமுக (ஜா), அதிமுக (ஜெ), திமுக என 4 முனைப் போட்டி. ஐயா உ.சுப. போட்டியிடவில்லை என முடிவாகிவிட்டது. அவருக்குப் பதிலாக, சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க ஐயாவின் மகன் சுப.உடையப்பன், அப்போதைய சிவகங்கை ஒன்றிய பெருந்தலைவர் அண்ணன் சுதர்சன நாச்சியப்பன், அண்ணன் எம்.ஏ.டி. அரசு ஆகிய மூவர் முக்கியமாக மோதுகிறார்கள்.

சுப.உடையப்பன்

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வுக் குழுவில் ஐயா உ.சுப இருக்கிறார். காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதால் மாநிலம் முழுவதும் வெற்றிபெறக் கூடிய தகுதிபடைத்த வேட்பாளர் பட்டியல் ஒன்றை தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தி தயார் செய்தார். தேர்வுக் குழுவை அண்ணன் சுப.உடையப்பன் சந்தித்தபோது, “என்னுடைய வெற்றி வேட்பாளர் பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்கள்; வாழ்த்துக்கள்” என்று சொன்னார் வாழப்பாடியார்.

அன்றைய தமிழக காங்கிரஸ் அரசியலில், மூப்பனாரும் வாழப்பாடியாரும் எதிர் எதிர் துருவங்களாக நின்றது ஊரறிந்த நாடறிந்த ரகசியம். ‘நமக்கு ஏற்கெனவே மூப்பனாரின் பரிபூரண ஆசியிருக்கிறது, இப்போது வாழப்பாடியாரும் சொல்லிவிட்டார். இனி உடையப்பனுக்கு சீட் பிரச்சினை இல்லை‘ என்று பாகனேரி குடும்பம் பரிபூரணமாய் நம்பியது.

மூப்பனாருடன் உ.சுப

தமிழக காங்கிரஸ் தேர்வுக் குழு அடிக்கடி கூடிப் பேசியது. சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி குறித்து பேச்சு வந்தபோது தலைவர் சிதம்பரம், “அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். ஐயா உ.சுப, “நான் போட்டியிடவில்லை; என் மகனுக்குத் தாருங்கள்” என்றார். தலைவர் சிதம்பரமோ ஐயா உ.சுப-வை போட்டியிட வலியுறுத்துகிறார். தனது ஆதரவாளர்கள் 2 பேரும் இப்படி மல்லுக்கட்டுவதை தலைவர் மூப்பனார் விரும்பவில்லை. அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிவைக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும், எல்லா தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அங்கீகாரக் கடிதம் வேட்பாளர் பெயருடன் வந்து விட்டது,7 தொகுதிகள் தவிர. அந்த 7-ல் சிவகங்கையும் ஒன்று.

இந்தக் களேபரத்திலும் சில அரசியல் மேதாவிகள், “உ.சுப ஐயாவுக்குதான் சீட் என்று சொல்லி அனுமதி வாங்குங்கள். ஐயாவும் அவரது மகனும் வேட்பு மனு தாக்கல் செய்யட்டும். அங்கீகாரக் கடிதம் தரும்போது பார்த்துக்கொள்ளலாம்” என்று கோணச் சால் ஓட்ட குறுக்குவழியில் யோசனை சொன்னார்கள். ஆனால், பெரியவர் உ.சுப அதை உறுதியாக மறுத்து விட்டார். "அப்படிக் கொள்ளைப்புற வழியாகச் செல்லவும் வேண்டாம்; கட்சியை ஏமாற்றவும் வேண்டாம்" என்று சொன்னார்.

ஒரு கட்டத்தில், தலைவர் சிதம்பரம் மூலம் அங்கீகாரக் கடிதம் அண்ணன் சுதர்சன நாச்சியப்பனுக்கு வருகிறது. அவர் அப்போது காங்கிரஸின் வேட்பாளர் ஆனார். நாச்சியப்பன்தான் வேட்பாளர் என்று உறுதியானதில், பல பேருக்கு அப்போது கொண்டாட்டம். “பாகனேரி அரசியல் முடிஞ்சுது சார்..." என்று, தன்னருகே நின்றவர்களிடம் அன்புத் தலைவர் சிதம்பரமே சொன்னதாகக்கூடச் சொல்வார்கள்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், பாகனேரி அரசியல் முடிந்ததாக தலைவர் சிதம்பரம் சொன்னது தொடர்பாக பிரச்சினை ஆனது. தான் சொல்லவே இல்லை என்று தலைவர் சிதம்பரம் உறுதியாக மறுத்தார். அந்தத் தேர்தலில் 330 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணன் சுதர்சன நாச்சியப்பன் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன் பிறகு, சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு இன்றுவரை எட்டாக் கனியாகவே இருக்கிறது.

இப்படியான சூழலில் சிவகங்கை மாவட்டத்தை தவிர்த்து, 1996 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தமாகா வேட்பாளராக நின்று வெற்றிபெற்றார் அண்ணன் சுப.உடையப்பன். 1998-லும் அதே தொகுதியில் அவருக்கு சீட் கொடுத்தார் மூப்பனார். ஆனால், ஜெயிக்க முடியவில்லை. ஆனாலும் மூப்பனாரும் அவரது மகன் வாசனும் பாகனேரி குடும்பத்தை மறக்கவில்லை. 2001 சட்டப்பேரவைத் தேர்தலில், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தமாகா வேட்பாளராக போட்டியிட உடையப்பனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட எச்.ராஜாவிடம், இரண்டாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் உடையப்பன். அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் காங்கிரஸும் தமாகாவும் கூட்டணி வைத்தன. தலைவர் சிதம்பரம், காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற புதிய இயக்கம் கண்டு அந்தத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக தமிழகம் எங்கும் தீவிரமாய் முழங்கினார். மற்றவர்களின் பிரச்சாரத்தை விட சிதம்பரத்தின் பிரச்சார உத்திதான் அந்தத் தேர்தலில் பிரதானமாகப் பேசப்பட்டது.

ப.சிதம்பரம்

சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸை வலுவாக வளர்த்தெடுத்த பாகனேரி உ.சுப குடும்பம் இப்போது தமாகாவில் இருக்கிறது.

காங்கிரஸையே மூச்சாகக் கொண்டிருந்த இந்தக் குடும்பத்துக்கு மூப்பனாரை பிடித்துப் போனதால், தமாகாவுக்குப் போய் அங்கேயே நிலைத்துப் போனதா? அல்லது சிதம்பரம் போன்ற தலைவர்கள் வந்துவிட்டதால் இனி நமக்கு இங்கே வேலை இருக்காது என்று நினைத்து, காங்கிரஸைவிட்டு விலகியதா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சிலருக்கு மட்டும்தான் பதில் தெரியும். ஆனால், அவர்கள் பேசமாட்டார்களே..!

(அடுத்து, தொண்டர் செல்வாக்குள்ள இன்னொரு தலைவரை நாங்கள் தொலைத்த கதை)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும்... 8

x