‘ஒரு ரூபாய் இட்லிப் பாட்டி‘ கோடீஸ்வரியாகி விட்டாரா?


‘இட்லிப் பாட்டி‘ கமலாத்தாள்

யூ ட்யூப், பிளாக்கர், ஃபேஸ் புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் யாரெல்லாம் பிரபல்யப்படுகிறார்களோ, அவர்களை எல்லாம் குறிப்பிட்டு ‘அவர்களுக்கென்ன கோடீஸ்வரர் ஆகி விட்டார்கள். ஆடி காரில் இறங்குகிறார்கள். பிஎம்டபிள்யூ காரில் செல்கிறார்கள். நாலு பங்களா கட்டி விட்டார்கள்’ என்று வெகுமக்கள் பேசுவது, சமீபகாலங்களில் இயல்பாகி வருகிறது. அந்த வரிசையில் ஜி.பி.முத்து, ரித்விக் மட்டுமல்ல, கோவை வடிவேலாம்பாளையம் கமலாத்தாள் என்ற 85 வயது ஒரு ரூபாய் இட்லிப் பாட்டியின் பெயரும் அடிப்படுகிறது.

‘‘பாட்டிக்கு என்ன குறைச்சல்? கரோனா காலத்தில் ஸ்டாலினே பாட்டியிடம் வீடியோ காலரில் பேசினார். கட்சிக்காரர்கள் மூலம் அரிசி, பருப்பு ஏற்பாடு செய்தார். திமுகவினர் கொடுப்பதைப் பார்த்து அதிமுகவினரும் போட்டி போட்டுக்கொண்டு பாட்டிக்கு உதவிகளை வழங்கினார்கள். கிரைண்டர், மிக்ஸி, எரிவாயு சிலிண்டர் மட்டுமல்ல, இலவசமாய் நிலமும் கொடுத்து, கடையும் கட்டித்தரும் வேலையில் தனியார் நிறுவனம் ஒன்றும் இறங்கியுள்ளது. பாட்டி பத்திரிகை, மீடியா, சமூக வலைதளங்களில் வைரலாகியே வசதியாகி விட்டார்!’’ என்று ஒரு டீக்கடை பெஞ்சில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.

நிலானி

அது மட்டுமா? தமிழ் பேசும் சீனப் பெண்ணான நிலானி, சீனாவில் இருந்தபடி பலருக்கும் யூ ட்யூப் வழியாக இட்லி அவித்துக் காட்டிக் கொண்டிருந்தார். ”நான் இட்லிப் பாட்டியைப் பார்த்துப் பூரித்துப் போனேன். அவர் அவித்த இட்லியை காட்டி சீன மக்களோடு பேசுவதோடு, இட்லி சமைப்பது எப்படி என எங்கள் மக்களுக்கு செய்து காட்டியும் வருகிறேன்!’ என்று சொன்னதைக் கேட்டு மேலும் ஆச்சரியம். இப்போது எப்படித்தான் இருக்கிறார் இட்லிப்பாட்டி என பார்க்கப் புறப்பட்டோம்.

ஆலாந்துறை வடிவேலம்பாளையம். அதே இட்லிப்பாட்டியின் பழைய வீடு. முகப்பின் முன்பு இட்லிப்பாட்டி படத்துடன் ‘1 ரூபாய் இட்லி கமலாத்தாள்’ என்ற அறிவிப்புடன் ஒரு விளம்பர போர்டு. அந்த போர்டின் மேற்புறம் வலதுபுறம் சின்னதாக அதை வழங்கிய தனியார் மருத்துவமனையின் விளம்பரம். உள்ளே நுழைந்தால் வழக்கம்போல் தரையிலும், திண்ணையிலும் உட்கார்ந்து சிலர் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். புகையில்லை. விறகு அடுப்பு இருந்த இடத்தில் கேஸ் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. அதன் முன்பு இட்லிப்பாட்டி. வியர்வையுடன்.. அதே பழைய வெள்ளைச் சேலை.

‘‘என்ன பாட்டி? நீங்க பெரிய கோடீஸ்வரி ஆகிட்டீங்கன்னு ஊரெல்லாம் பேச்சா இருக்கு. இங்கே பார்த்தா அப்படியேதான் இருக்கீங்க...புதுக்கடை கட்டி குடிபோகலையா?’’ என்று கேட்டேன்.

பாட்டிக்கு முணுக்கென்று கோபமா, ரோஷமா தெரியவில்லை. ‘அ..ஆ. நீயே பாரு. அப்படித்தான் ஊருக்குள்ளே எல்லாம் பேசறாங்க. இன்னும் அதே இட்லிதான். அதே ஆளுகதான். தினம் அஞ்சாறு படி அரிசி, முக்கால், இல்லை ஒரு படி உளுந்து. ஞாயிற்றுக்கிழமை மட்டும் வெளியூர்க்காரங்க என்னைப் பார்க்கணும்ன்னே வருவாங்க. அப்ப மட்டும் ஒரு இரண்டு படி அரிசி கூடப் போட்டு ஆட்டுவேன். அவ்வளவுதான்...!’’ என்றவர், தனக்கு என்னென்ன உதவிகள் வந்தது என்பதைப் பற்றி விவரித்தார்.

தனியார் கம்பெனி ஒன்று கிரைண்டர், மிக்ஸி, 4 எரிவாயு சிலிண்டர்கள் கொடுத்துள்ளது. அதனால் மாவு, சட்னி அரைப்பதற்கு ஆட்டுரலை ஆட்ட வேண்டியதில்லை. எரிவாயு எவ்வளவு செலவானாலும் தனியார் எரிவாயு நிறுவனமே அதை ஏற்றுக் கொள்கிறது. மற்றபடி போன தேர்தலுக்கு முன்பு கரோனா காலத்தில் ஸ்டாலின் வீடியோகாலரில் வந்து பேசியபோது திமுகவினர் கொஞ்சம் அரிசி, பருப்பு கொண்டு வந்து தந்தார்கள். பிறகு ஏதுமில்லை. அதிமுக ஆட்சியில் வேலுமணி ஆட்கள் ஏற்பாடு செய்து ஒன்றரை சென்ட் நிலமும், பிறகு தனியார் நிறுவனம் 2 சென்ட் நிலமும் தந்துள்ளதாம். அதில் அந்த தனியார் நிறுவனம் கடை கட்டித் தருவதாகச் சொல்லி 6 மாதத்துக்கு மேலாகிறது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

‘‘அதையெல்லாம் நம்பியா கண்ணு நான் இந்த இட்லி சுட்டுக் கொடுக்கிறேன். ஏதோ செஞ்சேன். செஞ்சுட்டு வர்றேன். அதைத் தெரிஞ்சு அவங்களா ஏதேதோ கொண்டுவந்து தந்தாங்க. ஏத்துக்கிட்டேன்’’ என்றார் இட்லிப் பாட்டி.

‘‘வெளியே ஒரு போர்டு மாட்டியிருக்கே பாட்டி. அது அந்தக் கம்பெனிக்காரங்க விளம்பரத்துக்கு மாட்டினதா?’’ என கேட்டேன்.

‘‘விளம்பரத்துக்கு இல்லை கண்ணு, எனக்கு உடம்புக்கு ஏதாச்சும் முடியலைன்னா அந்த ஆஸ்பத்திரிக்கு போய் இலவசமா சீக்கு பார்த்து மருந்து மாத்திரை வாங்கிக்கலாம். அதுக்குத்தான் அதை மாட்டி உட்ருக்காங்க!’’ என்றார் தன் வெள்ளந்திகுணம் மாறாமல். இங்கே சாப்பிட வந்திருந்த சில பேரிடம் பேசினோம்.

அருண்குமார் என்ற இளைஞர், ‘‘ சின்ன வயசிலிருந்தே இங்கேதான் சாப்பிடுறேன். காசு இருந்தாலும் இல்லாட்டியும் இட்லி கூப்பிட்டுக் கொடுக்கும் பாட்டி. வேலை கிடைச்சு, கூலி கிடைக்கும்போது காசு கொடுத்தா போதும் வாங்கிக்கும். இப்ப வரைக்கும் இதுல மாற்றமில்லை. இன்னெய்க்கு பாட்டி உலகம் பூரா ஃபேமஸ் ஆயிட்டாலும் அப்படியேதான் இருக்கு. கேஸ் சிலிண்டர், கிரைண்டர், நிலம் எல்லாம் இலவசமா வந்திருக்கே ஒழிய, பொருளாதார வசதியில் பாட்டி அப்படியேதான் இருக்கு. காணாத ஜனங்க ஊருதுன்னு சொன்னா அந்தப் பக்கம்போய் பறக்குதுன்னுதான் பேசுவாங்க. அதுதான் பாட்டி கோடீஸ்வரின்னு பேசற சங்கதியும்!’’ என்றார்.

x