சீமானை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்


தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ பிரிவுத் தலைவர் கனகராஜ்

பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள சீமானுக்குத் தடைவிதித்து அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று, தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ பிரிவு சார்பில் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ பிரிவுத் தலைவர் கனகராஜ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் குறித்தும் அவதூறுக் கருத்துகளைப் பரப்பி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பேசி வருவதால், அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனகராஜ், ‘நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது தமிழக காங்கிரஸார் குறித்தும், காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ்காந்தி, சோனியா காந்தி மற்றும் வருங்கால தலைவர் ராகுல் காந்தி குறித்தும் மிகவும் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியுள்ளார். மேலும் அவர் தொடர்ச்சியாகக் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஒட்டுமொத்த காங்கிரஸார் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வருவது கண்டனத்திற்குரியது எனவும், இது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலாக அமைந்து விடும்‘ எனக் கூறினார்.

மக்களிடையே வேறுபாட்டை விதைத்து, ஒற்றுமையைக் குலைக்கும் சீமானின் இந்தச் செயலைத் தடுக்கும் விதமாக ஏற்கனவே காங்கிரஸ் கட்சியினர் சார்பில் தேர்தல் ஆணையத்திலும், டி.ஜி.பி அலுவலகத்திலும் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்த அவர் பொதுக்கூட்டங்களில் சீமான் கலந்துகொள்ளத் தடைவிதித்து, அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, உடனே அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

x