தனது தலைமையிலான அரசின் சமீபத்திய பயணங்களின் வழியாக, தான் பயணிக்கும் பாதை எத்தகையது என்பதைத் தெள்ளத்தெளிவாக உணர்த்திவருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவரது பயணங்களையும், அரசின் நிகழ்வுகளையும் பார்க்கும்போது நடந்த எதையும், எப்போதும் தான் மறந்துவிடவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுவது தெளிவாகத் தெரிகிறது.
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான சுனில் குமாருக்குப் புதிய பதவி, பாப்பாபட்டி கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டது என தனது எல்லா நகர்வுகளின் மூலமும் அழுத்தமான சில செய்திகளை அவர் சூசகமாக உணர்த்தியிருக்கிறார். அதில் பழைய நிகழ்வுகளின் நிழலும் அழுத்தமாகப் படிந்திருக்கிறது!
நெஞ்சைத் தொட்ட சுனில்குமார்!
ஓய்வுபெற்ற காவல் துறைக் கூடுதல் இயக்குநர் சுனில்குமார் ஐபிஎஸ், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்றவருக்கு ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது எனும் கேள்விக்குப் பின்னே, ஒரு பழைய சம்பவம் இருக்கிறது.
அதிமுக ஆட்சியில், 2005-ம் ஆண்டு சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற சாலைமறியலில் கலந்துகொண்டவர்கள் கைது செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களைப் பார்ப்பதற்காக, அப்போதைய திமுக இளைஞரணிச் செயலாளர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியான சுனில்குமார், ஸ்டாலினை உள்ளே அனுமதிக்கவில்லை. அவரை மீறிக்கொண்டு மண்டபத்துக்குள் நுழைய முயன்றார் ஸ்டாலின். தள்ளுமுள்ளானது. அதில் ஸ்டாலினை நெஞ்சில் கை வைத்துத் தடுத்தார் சுனில்குமார். அவரின்மேல் ஸ்டாலின் கையும் இருந்தது.
மறுநாள் இந்த விவகாரம் சட்டப்பேரவையில் எதிரொலித்தது. போலீஸ் அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்த, ஸ்டாலினைக் கைது செய்ய வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஒருவர் (பின்னர் திமுகவில் சேர்ந்து, இப்போது அமைச்சராகவும் இருக்கிறார்) கொந்தளித்தார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சுனில்குமாரிடம் இதுதொடர்பாகப் புகார் பெற்று, வழக்குப்பதிவு செய்து ஸ்டாலினைக் கைது செய்யும்படி காவல் துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆனால், அப்படியொரு நிகழ்வே நடக்கவில்லை என்று அதிகாரிகளிடம் உறுதியாகக் கூறி ஆச்சரியப்படுத்திய சுனில்குமார், ஸ்டாலினுக்கு எதிராகப் புகார் தரவும் மறுத்துவிட்டார். அதனாலேயே, அதிமுக ஆட்சி முடியும்வரை சுனில்குமார் செல்வாக்கு இல்லாத துறையிலேயே காலத்தைக் கழிக்க நேர்ந்தது. திமுக ஆட்சி வந்த பிறகு, அவருக்கு உயரிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. திரும்பவும் அதிமுக ஆட்சி வந்தபோது, சுனில்குமார் ஓரங்கட்டப்பட்டார்.
தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்திருக்கிறது. பழைய பாசத்தை மனதில் வைத்து, சுனில்குமாருக்கு மரியாதைக்குரிய பதவியை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்.
காவல் துறையினருக்கும் எச்சரிக்கை
அண்மையில் சேலம், தருமபுரி மற்றும் மதுரை ஆகிய ஊர்களுக்குச் சென்றுவந்ததன் மூலம் கடந்த காலங்களில் நடந்த எதையும் தான் மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை என்பதையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தியிருக்கிறார் ஸ்டாலின்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள அதியமான்கோட்டை காவல் நிலையத்துக்குத் திடீரென ஆய்வுக்குச் சென்ற முதல்வர், அங்கு காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தது ஆச்சரியமல்ல. அதற்கு அந்தக் காவல் நிலையத்தைத் தேர்ந்தெடுத்ததுதான் விசேஷம்!
2008-ம் ஆண்டு. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. பிப்ரவரி 8 இரவு அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் இருந்த 6 துப்பாக்கிகளும், ஒரு வாக்கிடாக்கியும் திடீரென காணாமல் போயின. மறுநாள் காலை இந்தச் செய்தி தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கியது. காவல் நிலையத்தில் இருந்த ஆயுதங்கள் எப்படிக் காணாமல்போயின என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. அங்கு பணியிலிருந்த காவலர்களுக்கும்கூட அது எப்படி தெரியாமல் போகும் என்ற கேள்வியும் அழுத்தமாக எழுந்தது. அந்தக் கேள்வியின் பின்னணியில் உண்மை இருப்பதை விசாரணை மூலம் உணர்ந்துகொண்ட காவல் துறை உயர் அதிகாரிகள், அக்காவல் நிலைய உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் இருவர் உட்பட 6 பேரைப் பணியிடை நீக்கம் செய்ததுடன், அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தினர்.
அவர்களோடு அப்பகுதியில் வலுவாக உள்ள ஒரு சாதி கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர், மாவட்டப் பொருளாளர் ஆகியோரும் குற்றஞ்சாட்டப்பட்டனர். காவலர்களிடையே நிலவிய சாதிய உணர்வு காரணமாகவே துப்பாக்கிகளும், வாக்கிடாக்கியும் திருடப்பட்டுள்ளன என்பது கண்டறியப்பட்டது. அவை பின்புறமுள்ள ஒரு தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து, அவற்றைத் தோண்டி எடுத்தனர். 5 துப்பாக்கிகள் மட்டுமே கிடைத்தன. சில நாட்களுக்கு அந்தக் காவல் நிலையம் இரவில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அவலமும் நடந்தது.
மாநிலத்தில் சாதியப் பிரச்சினைகளை வளரவிடாமல் வேரறுக்கும் பணியில் தீவிரம் காட்ட வேண்டிய காவல் துறையினரே, தங்களுக்குள் சாதிப் பாகுபாடு பார்த்த அந்த நிலையும், அதற்கு சக காவலர்கள் துணைபோனதையும் தான் இன்னமும் மறக்கவில்லை என்பதை நினைவுபடுத்தவே அங்கு திடீர் ஆய்வுக்குச் சென்றிருக்கிறார் ஸ்டாலின். தவறு செய்தால் தண்டனை கொடுப்போம், நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம், எப்போது வேண்டுமானாலும் ஆய்வு நடக்கும் என்று அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் விடுத்திருக்கும் எச்சரிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.
‘தடங்கல்கள் தகர்க்கப்படும்’
பாப்பாபட்டி கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டதற்கான காரணத்தை, ஸ்டாலினே விளக்கிச் சொல்லிவிட்டார். 2006-ல் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த தானும் உள்ளாட்சித் துறைச் செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டியும், அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உதயசந்திரனும் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சிகளை விவரித்திருந்தார் முதல்வர்.
“அந்த ஊராட்சிகள் பட்டியலின சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்றுக்கொள்ளாத ஆதிக்க சாதியினர் தேர்தலை நடத்தவிடவில்லை. மீறி நடத்தினாலும் தங்கள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெற வைத்து, பதவியேற்றதும் அவரை ராஜினாமா செய்ய வைத்து விளையாட்டு காட்டினார்கள். அதையெல்லாம் மீறித்தான் அப்போது தேர்தல் நடத்தப்பட்டது.
அதை மீண்டும் நினைவுபடுத்தும் விதமாகத்தான், பாப்பாபட்டியில் நடந்த கிராம சபைக் கூட்டத்துக்குச் சென்றிருக்கிறார் ஸ்டாலின். இதுபோன்று வேறு எங்கும் ஆதிக்க சாதியினர் நடந்துகொண்டு விடக்கூடாது, நடக்கவும் விட மாட்டோம் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்” என்கிறார்கள், இதுகுறித்து விவரங்களை நன்கு அறிந்தவர்கள்.
தனது அரசின் பயணம் சாதாரண மக்களை நோக்கியது, அதற்கு இடையூறாக எதிர்ப்படும் இடர்கள் தகர்த்தெறியப்படும். அது அதிகாரியாக இருந்தாலும், ஆதிக்க மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினராக இருந்தாலும் சரி என்பதுதான், இதன் மூலம் ஸ்டாலின் சொல்லியிருக்கும் செய்தி!
கோவை, சேலத்துக்கு முக்கியத்துவம்
திமுக முழுதாக வெற்றிபெற்ற மற்ற மாவட்டங்களைவிட பெரும் தோல்வியடைந்த கோவை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவருகிறார் முதல்வர் ஸ்டாலின். கரோனா தடுப்புப் பணிகளில்கூட கோவைக்கே முன்னுரிமை அளித்ததுடன், தானே சென்று நேரடியாகக் கள ஆய்வுகளையும் செய்தார். புதிய தொழில் பூங்கா, பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தைச் செயல்படுத்த கேரள அரசுடன் பேச்சுவார்த்தை, மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவது குறித்து ஒன்றிய அரசுடன் ஆலோசனை, கோவை, திருப்பூரில் புதிய பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள் ஏற்படுத்த திட்டம், கோவையில் 500 ஏக்கர் பரப்பளவில் ரூ.225 கோடி மதிப்பில் பாதுகாப்புக் கருவிகள் உற்பத்திப் பூங்கா அமைக்க நடவடிக்கை என்று எக்கச்சக்க அறிவிப்புகள் கோவைக்குக் கிடைத்திருக்கின்றன.
செப்டம்பர் 29, 30 தேதிகளில் சேலம் சென்ற முதல்வர், ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ என்ற திட்டத்தை அந்த மாவட்டத்தில் வைத்துத்தான் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் மொத்தம் ரூ.24 கோடியே 74 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் வழங்கினார். சேலம் மாவட்டம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார். இதற்குமுன்பு, கடந்த ஜூன் மாதத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தையும்கூட மற்ற மாவட்டங்களுக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தவர், சேலம் மாவட்டத்துக்கு மட்டும் நேரில் வந்து தொடங்கிவைத்து அன்றைய தினம் 1,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இப்படி, சேலத்துக்கும் கோவைக்கும் முதல்வர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். பெரும்பாலான முக்கியத் திட்டங்களை சேலத்திலோ, கோவையிலோ வைத்து தொடங்கிவைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ‘நீங்கள் எங்களைப் புறக்கணித்தாலும்கூட நான் உங்களை மறக்கவில்லை பாருங்கள்’ என்ற குறியீடும் அதில் அடங்கியிருக்கிறது.
’’கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்’’ என்று சட்டப்பேரவையில் சொன்ன முதல்வர், ”நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை” என்று, அங்கே அழுத்தம்திருத்தமாகத் தெரிவித்தார். அந்த வார்த்தைகளின் பின்னே ’எதையும் நாங்கள் மறக்கவில்லை’ என்ற வார்த்தைகளும் தொக்கி நிற்கின்றன!