லக்கிம்பூர் விவசாயிகள் பேரணியில் வாகனத்தை ஏற்றி விவசாயிகளைக் கொலைசெய்த வழக்கில், உத்தர பிரதேசத்தை ஆளும் யோகிஆதித்யநாத் அரசுக்கு ’ஒரு கொலை வழக்கை இப்படித்தான் கையாள்வதா?’ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்யாமல், ‘தயவு செய்து வாருங்கள்; தயவு செய்து கூறுங்கள்’ என்று போலீஸ் கெஞ்சிக்கொண்டிருப்பது ஏன்?மாநில அரசும், போலீஸும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டித்திருந்தார்.
அப்படி ஒரு கேள்வியை கீழமை நீதிமன்றங்களோ அல்லது உயர் நீதிமன்றமோ கேட்பதற்குள், நீதிமன்றத்தில் சரணடைந்து தமிழக அரசையும், திமுகவையும் இக்கட்டிலிருந்து காப்பாற்றியிருக்கிறார் கடலூர் தொகுதியின் திமுக எம்பி ரமேஷ். இவர்மீது இருப்பதும் கொலை வழக்குதான். அங்கே விவசாயி என்றால், இங்கே இவரது முந்திரி ஆலையில் வேலைபார்த்த தொழிலாளி.
என்ன நடந்தது? கொலைவழக்கில் எப்படி சிக்கினார் எம்.பி?
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள பனிக்கன்குப்பத்தில் ரமேஷுக்கு சொந்தமான டி.ஆர்.வி முந்திரி ஆலை உள்ளது. இங்கிருந்து உயர்தரமான முந்திரி பருப்புக்கள் தமிழகம் தாண்டி, இந்தியா முழுமைக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். ரமேஷ் ஊரிலிருக்கும் நாட்களில் இந்த ஆலையில்தான் இருப்பார். தினம்தோறும் மாலையில் மது அருந்தும் பழக்கமும் இவருக்கு இருப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி இரவு ஆலைக்கு வந்த ரமேஷ், தனது ஆட்கள் சிலருடன் சேர்ந்துகொண்டு ஆலையில் பணிபுரிந்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை விசாரணை செய்திருக்கிறார். ரமேஷின் சில அந்தரங்கமான காரியங்களுக்கு கோவிந்தராஜ் உடந்தையாக இருந்திருக்கிறார் என்றும், அதில் ஏதோ விவகாரமாகி அதுகுறித்துதான் கோவிந்தராஜிடம் விசாரனை நடந்ததாகவும் ஆலை ஊழியர்கள் கூறுகிறார்கள். அதில் கோவிந்தராஜுக்கும் ரமேஷுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அது அடிதடியாகியிருக்கிறது.
ரமேஷுடன் இருந்தவர்கள் கோவிந்தராஜை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜை காரில் தூக்கிப்போட்டுக் கொண்டுபோய், காடாம்புலியூர் காவல் நிலையத்தில் இறக்கி அவர் முந்திரி ஆலையில் பல லட்சம் ரூபாய் கையாடல் செய்துவிட்டதாகவும், எம்பி ரமேஷ் புகார் கொடுக்கச் சொன்னதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், கோவிந்தராஜ் இருந்த நிலையைப் பார்த்த காவலர்கள் காலையில் கொண்டுவந்து புகார் கொடுங்கள் என்று திருப்பியனுப்பி விட்டார்கள். அதனால் என்ன செய்வது என்று குழம்பிப்போனார்கள் ரமேஷும் அவரது ஆட்களும். பண்ருட்டி அரசு மருத்துவனையில் அவரைச் சேர்த்துவிட்டு, கோவிந்தராஜின் மகன் செந்தில்வேலுவுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சென்னையில் இருந்த அவர், உடனடியாக இதுகுறித்து ஊரிலுள்ள தங்கள் உறவினர்களுக்கும், பாமக நிர்வாகிகளுக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்.
அவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் கோவிந்தராஜ் மரணமடைந்துவிட்டார். கடுமையான் காயங்களுடன் காணப்பட்ட அவரது உடலில் விஷமும் இருந்திருக்கிறது. அதனால் ரமேஷ் மற்றும் அவரது ஆட்களால் கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டதாக கோவிந்தராஜின் உறவினர்களும் பாமகவினரும் பகிங்கிரமாக குற்றம்சாட்டி, காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, போராட்டத்திலும் இறங்கினர். கோவிந்தராஜின் உடலையும் வாங்க மறுத்தனர். இதற்கிடையே செந்தில்வேல் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் கோவிந்தராஜின் உடலை ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ய, செப்.23 அன்று உத்தரவிட்டது. அதன்படி, அங்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு மேல்மாம்பட்டு கிராமத்தில் காவல் துறை பாதுகாப்போடு கோவிந்தராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி வழக்கு செப்.27 அன்று சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார், முதலில் கோவிந்தராஜ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமும், பின்னர் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரமேஷ்மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதை உறுதிசெய்தனர்.
அதையடுத்து சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு அக்.8-ல், கொலை வழக்காக மாற்றப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜ் , முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லாபிச்சை, சுந்தர் (எ) சுந்தரராஜ் மற்றும் வினோத் உள்ளிட்டோர் கோவிந்தராஜை அடித்துக் கொலை செய்ததாக, சிபிசிஐடி வழக்கு பதிவு செய்தது. இதில், ரமேஷ் தவிர மற்ற ஐவரையும் கடந்த 9-ம் தேதி கைது செய்தது போலீஸ். நடராஜ் உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தன்மீதான பிடி இறுகியதைக் கண்ட ரமேஷ், தன்னை இதிலிருந்து காப்பாற்றுமாறு கட்சி மேலிடத்தை தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால், அவர்மீதான குற்றச்சாட்டு உண்மை என்பதை தெரிந்துகொண்ட முதல்வர் வட்டாரம், ரமேஷை கடுமையாக கண்டித்திருக்கிறது. எம்பி பதவியை ராஜினாமா செய்யும்படியும் வலியுறுத்தியதாகச் சொல்கிறார்கள். அவர்மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், கொலைக்குற்றவாளி ரமேஷை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். கடலூர் மாவட்ட பாமகவினரும் ரமேஷை கைதுசெய்யாவிட்டால், அக்.13 அன்று கடலூரில் மிகப்பெரிய ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இதனால், இந்த விவகாரம் பெரிதாகிக் கொண்டிருப்பதை அறிந்த ஸ்டாலின் இதை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர, சட்ட வல்லுநர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் கடந்த 9-ம் தேதி மாலை ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது, முன்ஜாமீன் பெறுவது உட்பட பலவித யோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது அதில் ஆஜராகும் அரசு வழக்கறிஞரின் நிலை தர்மசங்கடமாகி விடும், அது எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவலாகிவிடும் என்பதால் அவற்றையெல்லாம் ஏற்காத ஸ்டாலின், நீதிமன்றத்தில் சரணடையச் செய்வது என்ற யோசனையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
உடனடியாக, மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மூலமாக ரமேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால், திங்களன்று காலையில் திமுக வழக்கறிஞர்களுடன் வந்து பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார் ரமேஷ். அவருக்கு அக்.13-ம் தேதிவரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
சரணடைவதற்கு முன்னால் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ’சிபிசிஐடி என்மீது பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து, திமுகமீது அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பது என் மனதிற்கு நெருடலாகவும், இந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
ஆகவே, நான் உயிரினும் மேலாகப் போற்றும் என் தலைவர் அவர்களின் நல்லாட்சியின்மீது வீண்பழி பேசுகிறவர்களுக்கு மேலும் இடம் கொடுத்துவிட வேண்டாம் எனக்கருதி சிபிசிஐடி பதிந்துள்ள வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைகிறேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியில் வருவேன்’ என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
தங்கள் கட்சி எம்பி மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பது தெரியவந்ததும் தாமதிக்காமல், அவரைக் காப்பாற்றவும் முயற்சிக்காமல், அவர்மீது வழக்குப்பதிவு செய்யவும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், தற்போது அவரை நீதிமன்றத்தில் சரணடையவும் செய்திருப்பது திமுக மீதான சிலரின் எதிர்மறை விமர்சனத்தை குறைக்க உதவியிருக்கிறது.
இதற்கிடையே இந்த வழக்கில் வேகம் காட்டும் உள்ளூர் பாமகவினரையும், கோவிந்தராஜின் குடும்பத்தினரையும் சரிக்கட்டும் வேலைகளும், ஆதாரங்களை அழிக்கும் வேலைகளும் சுறுசுறுப்பாக நடைபெறுவதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று ரமேஷ் தைரியமாக கூறியிருக்கிறார் என்கிறார்கள்.
என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.