"தமிழகத்தில் பாமக ஆட்சி மலர உறுதி ஏற்போம். கடந்த 54 ஆண்டுகளாக அனைத்துக் கட்சிகளும் ஆட்சி செய்துவிட்டன. ஸ்டாலினுடைய முதலமைச்சர் கனவு நிறைவேறிவிட்டது. அடுத்து நாம்தான் இருக்கிறோம். நம்முடைய ஆட்சி அமைவதுதான் நியாயம், நீதி" என்று, சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது பேசுபொருளாகியிருக்கிறது.
இந்தப் பேச்சை வெறும் பேச்சாகக் கடந்துவிடாமல், பாமகவின் அடுத்தகட்ட நகர்வுக்கான சமிக்ஞையாகப் பார்க்கலாம். சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து 4 மாதத்துக்குள் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிடும்போதே, மீண்டும் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸை பாமக முன்னிறுத்தி அரசியல் செய்யப்போகிறது என்ற ஊகங்கள் கிளம்பின. அதை உண்மையாக்கியிருக்கிறது அவரது பேச்சு.
பாமக கடந்து வந்த பாதை
வன்னியர் சங்கமாக இருந்து 1988-ல் அரசியல் கட்சியாக மாறிய பாமக, 1989 தேர்தலில் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தது. 1991 தேர்தலில் திராவிடக் கட்சிகள் இரண்டையும் கடுமையாக விமர்சித்து, தன்னை மாற்று சக்தியாக முன்னுறுத்திய பாமக, 1996-லேயே கூட்டணிக் கணக்கைத் தொடங்கிவிட்டது. வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு் சேர்ந்த பாமக, அதன் பிறகு திமுக, அதிமுக என்று மாறிமாறி கூட்டணி வைத்தது. 2001-ல் அதிமுக, 2006-ல் திமுக, 2009-ல் அதிமுக, 2011-ல் திமுக என்று அணி மாறுவதையே அரசியலாகச் செய்துவந்த பாமக, 2014 மக்களவைத் தேர்தலில் 2 கட்சிகளையும் விட்டுவிட்டு 3-வது அணியான பாஜக அணிக்குத் தாவியது.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரண்டையும் மிகமிக மோசமாக விமர்சித்த ராமதாஸ், மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று தன் மகனை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தார். அந்தத் தேர்தலில் அன்புமணியின் பிரச்சார முறையும், பாமகவின் செயல் திட்டங்களும் ஓரளவுக்கு மக்களைக் கவர்ந்தன என்பதை மறுக்க முடியாது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பே, அன்புமணியை பாமகவின் இளைஞரணிச் செயலாளராகவும், மத்திய அமைச்சராகவும் அமர வைத்து அழகு பார்த்தார் ராமதாஸ்.
எனவே, "என்னுடைய குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். அப்படி வந்தால் என்னைச் சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்" என்ற ராமதாஸின் பழைய வீரவசனம் எல்லாம் அதற்கு முன்பே போதுமான அளவு விமர்சிக்கப்பட்டு, அந்த விமர்சனமும் வலுவிழக்கத் தொடங்கியிருந்தது. ‘இனி, இரு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி கிடையவே கிடையாது’ என்று அடித்துச் சொன்ன ராமதாஸ், அதற்கேற்ப 2 கட்சிகளையும் மிகக் கடுமையாக விமர்சித்தார்.
தேர்தலுக்கு முன்பாவது பாமகவுக்கு 3 எம்எல்ஏ-க்கள் இருந்தார்கள். அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திய 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதையும் இழந்தது பாமக. பென்னாகரம் தொகுதியில் திமுக வேட்பாளர் இன்பசேகரனைவிட 18,446 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தார் அன்புமணி. அந்தத் தேர்தலில் மீண்டும் அதிமுகவே ஆட்சியைப் பிடித்தாலும் விரைவிலேயே நிகழ்ந்த ஜெயலலிதாவின் எதிர்பாராத மரணம், பாமகவினரின் வீரத்தைத் தட்டி எழுப்பியது . ‘கழகத்தின் கதை’ என்ற பெயரில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராமதாஸ் ஒரு தொடர் எழுத, ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுக தலைவர்களை இன்னும் தரம்தாழ்த்தி விமர்சித்தார் அன்புமணி.
அணுகுமுறை மாற்றமும் அரசியல் முன்னேற்றமும்
இப்படியான சூழலில் தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலுடன், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் சேர்ந்து வந்தது. ஆட்சியைத் தக்கவைப்பதற்காக பகீரதப் பிரயத்தனம் செய்த எடப்பாடி பழனிசாமி, பாமகவைத் தன்னுடைய அணியில் இழுத்துப் போட்டார். வாய் நிறைய சிரிப்புடன் ராமதாஸும் அன்புமணியும், ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸுடன் கை குலுக்கிய காட்சிகளும், தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக தலைவர்களுக்கு விருந்து வைத்த காட்சிகளும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகின. கூடவே, அந்தத் தேர்தலில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியைக்கூட பாமக கேட்டுப் பெறாமல்விட்டதும் விமர்சிக்கப்பட்டது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதே அணியில் பாமக இடம்பெற்றதும் விமர்சிக்கப்பட்டது என்றாலும்கூட, கடைசி நேரத்தில் பெற்ற வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அக்கட்சி அதிமுகவை ஆதரிப்பதை ஓரளவுக்கு நியாயப்படுத்த முடிந்தது. 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது என்றாலும், 2011-க்குப் பிறகு மீண்டும் தங்கள் கட்சி சார்பில் சில பிரதிநிதிகளை சட்டப்பேரவைக்குள் அனுப்பியதே அக்கட்சியைப் பொறுத்தவரையில் நல்ல முன்னேற்றம்தான்.
நடக்கிற காரியமா?
இந்த நிலையில்தான், "அடுத்து பாமக ஆட்சி மலர உழைப்போம்" என்று தொண்டர்கள் மத்தியில் உறுதியெடுத்திருக்கிறார் அன்புமணி. பாமக மீது சாதிக்கட்சி என்ற விமர்சனம் இருந்தாலும், பொதுப் பிரச்சினைகள் பலவற்றைக் கையில் எடுத்து தீரமாகப் போராடிய கட்சி பாமக என்பதையும் மறுக்க முடியாது. குறிப்பாக, மதுக்கடைகளுக்கு எதிராக அக்கட்சி நடத்திய போராட்டத்தைச் சொல்லலாம். அதேபோல கூட்டணி எனும் அங்குசத்தைப் பயன்படுத்தி மத்தியிலும், மாநிலத்திலும் பாமகவின் தலையீட்டால் நல்ல திட்டங்கள் தமிழ்நாட்டுக்குக் கிடைத்தன. கட்சியின் வளர்ச்சிக்கும், வன்னியர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கும் அதைச் செவ்வனே பயன்படுத்திக்கொண்டது பாமக.
ஆனால், அன்புமணியை கட்சியின் அடுத்த தலைமையாக, முதல்வர் வேட்பாளராக ராமதாஸ் முன்னிறுத்திய பிறகு பாமகவின் செயல்பாடு படிப்படியாகக் குறைந்துபோனது. அடையாள அரசியலும், அறிக்கை அரசியலுமே பாமகவின் செயல்பாடு என்றாகிவிட்டது. எடப்பாடி ஆட்சிக்காலத்தில் நடந்த தவறுகளுக்கு வாய்மூடி மவுனியாக இருக்க வேண்டிய கட்டாயத்துக்கும் பாமக ஆளானது. இவை எல்லாம் சேர்ந்து பாமகவை சாதிக்கட்சி என்ற நிலையில் இருந்து, குடும்பக் கட்சியாக சுருக்கிவிட்டதாகவே சொல்லலாம்.
நம்பகத்தன்மையற்ற தலைவர்
தனிப்பட்ட முறையில் அன்புமணியின் செயல்பாடும் நம்பிக்கை தருவதாக இல்லை. இருமுறை மாநிலங்களவை உறுப்பினர், ஒருமுறை மக்களவை உறுப்பினராக இருந்த அன்புமணியின் நாடாளுமன்றச் செயல்பாடுகள் மெச்சும்படியாக இல்லை. தமிழகத்திலேயே குறைந்த வருகைப்பதிவு கொண்ட எம்பி-யாகிப் போனார் அவர். இரு மக்களவை, ஒரு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அவர் ஒரே ஒருமுறை தான் வெற்றிக்கனியைச் சுவைத்திருக்கிறார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக்கொண்டதும், அவரது தன்னம்பிக்கை இன்மையையே காட்டியது.
இதுவரை 7 சட்டப்பேரவைத் தேர்தல்களையும், 8 மக்களவைத் தேர்தல்களையும் எதிர்கொண்டுள்ளது பாமக. அதில் அக்கட்சி பெற்ற அதிகபட்ச பிரதிநிதித்துவம் என்பது 5 எம்பி-க்கள் (1999, 2004), 20 எம்எல்ஏ-க்கள் (2001) தான். அதுவும் திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் தலைமையில் அமைந்த வலுவான கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டுப் பெற்ற பிரதிநிதித்துவம். அப்படிப் பார்த்தால், இன்றைய நலிவடைந்த காங்கிரஸ் கட்சிகூட, பாமக வலுவாக இருந்த கால கட்டத்தைவிட அதிக மக்கள் பிரதிநிதிகளைக் (18 எம்எல்ஏ, 8 எம்பி-க்கள்) கொண்ட கட்சியாக இருக்கிறது. பாமக போல ஒரே ஒரு மண்டலத்தில், ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அபிமானத்தை மட்டுமே பெற்ற கட்சியாக காங்கிரஸ் இல்லை. ஆனால், அக்கட்சியே இப்போது 'காமராஜர் ஆட்சி' முழக்கத்தை முற்றாகக் கைவிட்டுவிட்டது.
மண்டல, சாதி எல்லைகளைக் கடந்து எல்லாச் சமூகத்தினருக்குமான இயக்கமாகப் பாமகவை வளர்த்தெடுக்காமல் அக்கட்சியை ஆளுங்கட்சியாகக் கொண்டுவருவது என்பது, வெறும் கனவாகவே முடியும். எனவே, கட்சியை வளர்த்தெடுப்பதற்கான செயல்திட்டத்தை அறிவித்து, அதற்கேற்ப கட்சியும், தானும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதை அன்புமணி உறுதிசெய்ய வேண்டும். அதன் பிறகே, அவர் சொல்வதைக் கேட்பார்கள் தொண்டர்கள்!