குறுவை நெல் கொள்முதல்; இன்னமும் தீராத நடைமுறைச் சிக்கல்கள்!


கொள்முதல் நிலைய வாசலில் நெல்லைக் கொட்டி வைத்திருக்கும் விவசாயிகள்

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுதான் விவசாயிகளின் நிலையாக இருக்கிறது. விளைந்த நெல்லை விற்பதற்கு விவசாயிகள் வேதனைக்குள்ளாவது இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. பொதுவாக, சாக்கு இல்லை, சணல் இல்லை, பணம் இல்லை என்று நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை அலைக்கழிப்பது தொடர்கதைதான். அதிலும் இந்த ஆண்டு, அரசு அறிவித்த ஆன்லைன் மூலம் பதிவு என்ற முறை விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

கக்கரை சுகுமாறன்

‘இந்தமுறை வேண்டாம், ரத்து செய்யவேண்டும்’ என்று பலரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். நெல்கொள்முதல் நிலைய வாயிலில் படுத்துப் புரண்டு ஆர்ப்பாட்டம் செய்தார், தமிழக விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தின் மாநில துணைத்தலைவர் கக்கரை சுகுமாறன்.

ஆன்லைன் பதிவு முறை ஏன் வேண்டாம்... அதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று அவரிடம் கேட்டோம்.

”அறுவடை செய்ய எப்போது மிஷின் கிடைக்கும், நமக்கு முன் வயலில் அறுவடை எப்போது முடியும் என்றே தெரியாதபோது எப்படி நமது நெல்லை விற்கும் நாளை முடிவு செய்து பதிவு செய்ய முடியும்? அறுவடை செய்தவர்கள் பதிவு செய்வதற்கு முன்பே இன்னும் அறுவடை செய்யாதவர்கள் பதிவு செய்து விடுகிறார்கள். இப்படிப் பல சிக்கல்கள் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ஒரு ஏக்கருக்கு 2,400 கிலோ மட்டுமே விற்க முடியும். நல்ல விளைச்சல் உள்ளவர்கள் மீதமுள்ள நெல்லை எங்கே கொண்டுபோய் விற்க முடியும்? இதையெல்லாம் தெளிவுபடுத்தாமல் திடீரென ஆன்லைன் முறையை கொண்டுவந்தது எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனால் விவசாயிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இப்போது பழைய முறையிலும் நெல் கொள்முதல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது” என்றார் சுகுமாறன்.

அறுவடையான நெல்லை உலர்த்தும் விவசாயிகள்...

நெல் கொள்முதலில் விவசாயிகளுக்கு இருக்கும் சிக்கல்கள் என்ன, விவசாயிகள் உணர்வுகள் என்ன என்பதையெல்லாம் புரிந்துகொள்ளும் வகையில் கடந்த காலங்களில் அரசின் கொள்முதல் கொள்கையை வரையறுப்பதற்காக ஆண்டுதோறும் விவசாயிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும். அதில் விவசாயிகள் தெரிவிக்கும் ஆலோசனைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் நெல் கொள்முதல் கொள்கை வெளியிடப்படும். ஆனால், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் அப்படிப்பட்ட கூட்டங்கள் நடத்தப்படாததுதான் இத்தகைய சிக்கலான அறிவிப்புக்குக் காரணம்.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தற்போது குறுவை அறுவடை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மழை பெய்திருப்பதால் நெல் அதிக ஈரப்பதமாக உள்ளது. அதனால் தனியார் வியாபாரிகள் வாங்காத நிலையில், விவசாயிகள் அனைத்து நெல்லையுமே அரசின் கொள்முதல் நிலையங்களுக்கே கொண்டு வருகிறார்கள். அதனால், கொள்முதல் நிலையம் அமைந்திருக்கும் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் நெல் மலைபோல் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

கொள்முதல் நிலையத்தில் கொள்முதலுக்காக காத்திருக்கும் நெல்

செப்டம்பர் இறுதியில் கணக்கு முடிப்பது, அக்டோபர் முதல் புதிய விலை நிர்ணயிப்பது ஆகியவைகளால், கடந்தவாரம் முழுவதும் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் அதிகம் நடைபெறவில்லை. அதனால், ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்தன. பல ஊர்களில் கொள்முதல் நிலையங்கள் அருகே நெல்லைக் கொண்டுவந்து கொட்டி வைத்துவிட்டு காவல் இருந்தனர். தற்போது பெய்துவரும் மழையால் நெல் நனைந்து முளைத்தும் போய்விட்டன. அதையெல்லாம் சுட்டிக்காட்டி ஆங்காங்கே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரப்பதம் அதிகமுள்ள நெல்லை சாலை, மைதானங்கள், கோயில் வளாகங்களில் உலர்த்தி பிறகு கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வருகின்றனர். இதற்கு கூடுதலாக செலவு பிடிக்கிறது.

கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல்லை, இயந்திரத்தில் கொட்டி சுத்தமாக தூற்றி எடுத்து கொள்முதல் செய்வதால், ஒரு நாளைக்கு 600 சிப்பங்கள் (ஒரு சிப்பம் - 40 கிலோ) முதல் 700 சிப்பங்கள் வரையே கொள்முதல் செய்ய முடிகிறது. அதனால், கொள்முதல் நிலையங்களில் நெல் அதிகம் தேக்கமாகி இருக்கிறது.

கொள்முதல் செய்யப்படும் சிப்பங்கள் முன்பெல்லாம் 15 நாட்களுக்கும் மேலாக அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டு, மழையில் நனைந்து வீணாகப்போய்க் கொண்டிருந்தன. அதை மாற்றி தற்போது 5 நாட்களுக்குள் மூட்டைகளை எடுத்துச் சென்று விடுகிறார்கள். அது பாராட்டத்தக்கதுதான். ஆனால், மற்ற நடவடிக்கைகள் எதுவுமே மாறவில்லை என்கிறார்கள் விவசாயிகள். வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது, ஒரு சிப்பத்துக்கு ரூ.40 முதல் 50 வரை கையூட்டு பெறுவது ஆகியவை கொஞ்சம்கூட மாறவில்லை என்கிறார்கள்.

சாமி நடராஜன்

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தஞ்சை சாமி.நடராஜன், ‘’கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் என்பது சாதாரணமான விஷயமாகிவிட்டது. எங்களைப் போன்றவர்கள் நேரடியாகப் போய் போராடினால் அதை 25 அல்லது 30 ரூபாயாக குறைக்க முடிகிறதே தவிர முற்றிலுமாக தவிர்க்க முடியவில்லை. அதற்கு அங்குள்ள தொழிலாளர்களுக்கான கூலி மிகவும் குறைவு என்பதுதான் காரணம். அங்கு கொள்முதல் செய்யப்படும் ஒரு சிப்பத்துக்கு எடைபோட்டு தைத்து அடுக்குவதற்கு தற்போது 2 ருபாய் கூலியாக கொடுக்கப்படுகிறது. அதை லாரியில் ஏற்றுவதற்கு ஒரு ரூபாய் மூன்று காசுகள்தான் கூலி.

ஒரு கொள்முதல் நிலையத்தில் குறைந்தது 10 தொழிலாளர்களாவது உள்ளனர். நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஆயிரம் சிப்பங்கள் கொள்முதல் செய்யப்பட்டால் மூவாயிரம் ரூபாய் அவர்களுக்கு கிடைக்கும். அதை பத்துப்பேருக்கும் உணவு, டீ, லாரி மாமூல் ஆகிய செலவுகள் போக பங்கிட்டால் வெறும் 100 ரூபாய் கூட கிடைப்பதில்லை. அவர்கள் இதைச்சொல்லி பணம் கேட்கிறார்கள். அதனால் விவசாயிகளால் கொடுக்காமல் வரமுடியவில்லை.

இதனை தடுக்க சிப்பம் ஒன்றுக்கு 10 ரூபாய் கூலியாக கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு முன்மொழிந்தோம். அதை இதுவரை செயல்படுத்தவில்லை. அப்படிச் செயல்படுத்தப்பட்டால் தொழிலாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க தேவையிருக்காது. அதற்கும் மேல் அங்குள்ள நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்கள் பணம் தருமாறு கட்டாயப்படுத்தினால் அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்றார்.

சாலையில் நெல்

விவசாயிகள் எதிர்கொள்ளும் இத்தகைய சிக்கல்கள் குறித்து தஞ்சை மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரியிடம் கேட்டதற்கு, ’’விவசாயிகளிடம் லஞ்சம் பெறக்கூடாது என்பதற்காகத்தான் கையில் பணம் தராமல் அவர்களுடைய வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. அதையும் மீறி பணம் வாங்குவது தெரியவந்தால் அவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அதேபோல கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டாம் என்பதற்காகத்தான், ஆன்லைன் பதிவு முறையும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. நாளடைவில் இதை விவசாயிகள் புரிந்துகொண்டு இந்த முறையை நிச்சயம் வரவேற்பார்கள்.

நாளொன்றுக்கு கட்டாயமாக குறைந்தபட்சம் ஆயிரம் சிப்பங்கள் வரை கொள்முதல் செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் அதிக அளவில் நெல் வைத்திருக்கும் பகுதிகளிலேயே அதனை கொள்முதல் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தேவையான இடங்களில் திறக்கப்பட்டுள்ள நிலையான கொள்முதல் நிலையங்கள் தவிர, 3 நடமாடும் கொள்முதல் நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இனி விடுமுறை இல்லாமல் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறோம்.

இப்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அக் 4-ம் தேதி ஒருநாளில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 4,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குறுவைபட்டத்தில் மொத்தம் 3,60,000 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது” என்றார்.

ஊருக்குச் சோறுபோடும் உழவனின் உணர்வுகளை மதித்து, அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்தால் சரிதான்.

x