நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக மக்களை அச்சுறுத்தி வரும் டி23 புலி அடிபட்ட புலிதானா அல்லது ஆட்கொல்லி புலியா என்ற சர்ச்சை தொடரும் நிலையில், புலியைச் சுட்டுப்பிடிக்கும் முடிவுக்கு உடனடியாக வரவேண்டாம். புலியின் நடவடிக்கையை கண்காணித்து அதைப் பிடித்த பிறகு, உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மயக்க ஊசி செலுத்தியோ அல்லது கூண்டு வைத்தோ பிடிக்கும் நடவடிக்கைகளை வேகப்படுத்தி இருக்கிறது வனத் துறை. இதனிடையே, “மனித மாமிசத்தைச் சாப்பிட்டு ருசி கண்டுவிட்ட அந்தப் புலி, மேற்கொண்டும் மனிதர்களை அடித்துத் தின்னும் ஆபத்து இருக்கிறது” என வனப் பகுதிகளை ஒட்டி இருக்கும் சிலர் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், “ஒட்டுமொத்தமாக அப்படியொரு முடிவுக்கு வரவேண்டியதில்லை” என்கிறார் ‘ஓசை’ அமைப்பின் தலைவரும் கானுயிர் ஆர்வலருமான ‘ஓசை’ காளிதாசன். இதுகுறித்து காமதேனு இணையதளச் செய்திகளுக்காகப் பேசினார் காளிதாசன்.
“மனிதர்களைத் தாக்கும் எல்லா புலிகளுமே ஆட்கொல்லி இல்லைங்கிறத நாம் முதலில் புரிஞ்சுக்கணுங்க. மனிதர்களை தாக்கும் புலிகள்ல ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு, அச்ச உணர்வில் தாக்குவது. அச்ச உணர்வில் எப்பெல்லாம் தாக்கும்னா, அது குட்டியை வெச்சிருக்கும்போது அல்லது தனக்கான இரை விலங்கை அடித்து வெச்சிருக்கும்போது நாம் அதை எடுத்துக்குவோமோன்னு நினைக்கும்போது, அல்லது நேருக்கு நேராய் சந்திக்கும்போது. இதுபோன்ற சமயங்கள்ல அச்ச உணர்வின் காரணமா புலிகள் நம்மைத் தாக்கும்.
ஆனா, இந்தத் தாக்குதல் எல்லாமே விபத்துதான். ஆட்கொல்லி என்ற வார்த்தையையே சூழலியளாளர்கள் பயன்படுத்த வேண்டாம்னுதான் சொல்வாங்க. ஏன்னா, புலியின் இரை விலங்கு பட்டியல்ல மனிதர்கள் இல்லைங்க. எப்படி, புலியைப் பற்றி மனிதர்களிடத்தில் அச்ச உணர்வு இருக்கோ அதைப்போல மனிதர்களைப் பற்றியும் புலிகளிடத்தில் அச்சம் இருக்குங்க. அதனால, பொதுவாக மனிதர்களை விட்டு விலகி வாழவே அது விரும்பும். ஆனா, அசந்தர்ப்பமான சில சூழ்நிலைகள்ல ஒருசில புலிகள் மனிதர்களைத் தாக்கிச் சாப்பிட ஆரம்பிக்கும்.
பிரபல புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் போன்றவங்க அது போன்ற சந்தர்ப்பங்கள் 2 நிலைகளில் ஏற்படும்னு சொல்றாங்க. ஒண்ணு, அது வேறு விலங்குகளுடனான மோதலில் காயமுற்று இரை தேடமுடியாமல் இருக்கலாம். அல்லது தனக்கென ஒரு எல்லைக்கோடு போட்டுக்கொண்டு வாழ்விடத்தை அமைச்சிக்கிற புலிகள் தன்னோட எல்லைக்குள் இன்னொரு புலி வந்தால் அதனுடன் சண்டை போடும். அந்த ஆளுமைச் சண்டையில காயம் ஏற்படலாம். அப்படிக் காயம் ஏற்படும்போது அது தன்னோட வேட்டைத் திறனை இழக்கும்.
இதுபோன்ற சூழ்நிலையில், அடிபட்ட புலி காட்டின் விளிம்புக்கு வந்துடும்ங்க. ஏன்னா, காட்டுக்குள் இன்னொரு புலியின் ஆளுமை இருக்கும். எனவே, காட்டுக்கும் குடியிருப்புக்கும் இடையிலான விளிம்புப் பகுதிக்கு வந்து, வேட்டையாடாமல் எளிய உணவு ஏதாவது கிடைக்குமான்னு தேடும். அதுபோன்ற சூழலில் மனிதர்களை அது அடிச்சுட்டா ரெண்டு விஷயத்தை அது புரிஞ்சுக்கும். ஒண்ணு, மனிதர்கள் எளிதில் வேட்டையாடக் கூடியவங்கன்னு புரிஞ்சுக்கும். இன்னொன்று, மனித மாமிசத்தின் சுவையை அறிஞ்சுக்கும். அப்படி அறிஞ்சுட்டா மறுபடியும் மனிதர்களை அடிச்சு உண்ண நினைக்கும். இப்படி, உணவுக்காக மனிதர்களை மறுபடியும் வேட்டையாடத் தொடங்கிட்டா அதைத்தான் ‘ஆட்கொல்லி புலி’ன்னு (Man Eater) சொல்றோம்ங்க.
ஆக, மனிதர்களைத் தாக்கும் எல்லா புலியும் ஆட்கொல்லின்னு சொல்லமுடியாது. அதேபோல், ஒருமுறை மனிதனைச் தாக்கிச் சாப்பிட்ட புலி மறுபடியும் மனிதனைத் தாக்கிச் சாப்பிடும்னு சொல்றதும் உறுதி கிடையாதுங்க. ஆனா, திரும்பத் திரும்ப மனிதர்களைத் தாக்குதுன்னா கட்டாயமா அது ஆட்கொல்லி புலிதான்.
மசினகுடியில் தேடப்படுற இந்தப் புலியைப் பொறுத்தவரை இதை ஆட்கொல்லி புலியா நாம் வரையறுக்கவே முடியாதுங்க. ஏன்னா, இது கால்நடைகளைத் தாக்கி இருக்கு. வயதான புலி. 2012-ம் ஆண்டே இது தானியங்கி கேமராவில் பதிவாகி இருக்கு. அப்ப இதுக்கு ரெண்டு வயசு இருக்கும். ஏன்னா, ரெண்டு வயசு ஆனாதான் ஒரு புலி தாயைவிட்டு தனியா பிரிஞ்சு இயங்கும். அப்ப, குறைஞ்சது அந்தப் புலிக்கு ரெண்டு வயது ஆகியிருக்கும். அப்படின்னா இப்ப சுமார் 12 வயசு இருக்கும் அந்தப் புலிக்கு.
பொதுவா, புலிகளோட அதிகபட்ச ஆயுட் காலமே 15 வருசம்தான். அதுக்குள்ள தளர்ந்துடும். அப்படி தளர்ந்துட்டா அது தனது வேட்டைத் திறனை இழந்துடும். அப்படி இழந்துட்டா அதுவாகவே இறந்துடும். அதுக்கு இடையில், காயம் பட்டாலோ வேட்டைத் திறன் இழந்தாலோ இப்ப நடப்பது போன்ற நிகழ்வுகள் நடக்கும். அப்படியான புலியாகவே இது கருதப்படுதுங்க. அதனாலதான் முதல்ல காட்டுக்கு வெளியே ஆடு, மாடுகளை அடிச்சிருக்கு. ஆடு, மாடுகளை அடிக்கிறபோது குறுக்கே கண்ணுல பட்ட மூணு மேய்ப்பர்களை அடிச்சிருக்கு. கடைசியா நாலாவது மேய்ப்பரை அடிக்கிறப்பத்தான் அவரை இழுத்துட்டுப் போயிட்டு உடல் பாகத்தை கொஞ்சம் சாப்பிட்டிருக்கு.
முதல் 3 சம்பவத்திலும் மேய்ப்பர்களை அடிச்சுப் போட்டதோடு போயிருச்சு. நாலாவது சம்பவத்தில் தான் மனித மாமிசத்தைச் சாப்பிட்டிருக்கு. இதைக்கூட எப்படிச் சொல்றாங்கன்னா... அந்தப் புலி தொடர்ந்து 10 நாட்களா கண்காணிக்கப்பட்டு வருது. கடைசியாக ஒருத்தரை அடிக்கிறதுக்கு முன்னதாக, தொடர்ந்து 4 நாட்களாக அது துரத்தப்படுது. அந்த 4 நாட்களும் அதுக்கு உணவு ஏதும் சிக்கி இருக்காது. எனவே, பசிக்காக மனித மாமிசத்தைச் சாப்பிட்டிருக்கலாம்னு சொல்றாங்க. ஆகவே, ஆட்கொல்லி என்று இதை உறுதியாகச் சொல்லமுடியாது.
என்றாலும், மக்களை அச்சுறுத்தக்கூடிய விலங்குதான் இது. மக்களோட உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுற பொழுதுதான் நாம அதை கவனத்தில் கொள்ளணும்ங்க. ஏன்னா... காட்டுயிர் மேலாண்மை விஷயத்தில், காட்டுயிர் பாதுகாப்பு விஷயத்தில் நாம நகரத்திலிருந்து கொடுக்கிற குரல் என்பது வேறு, காட்டை ஒட்டியிருக்கிற மக்களின் மனநிலையில் இருந்து பார்க்கிறதுங்கிறது வேறு.
நாம வந்து, காட்டுயிர் வாழணும், புலியைக் கொல்லக்கூடாது; காப்பாத்தணும்னெல்லாம் சொல்வோம். ஆனா, காட்டையும் காட்டுயிர்களையும் அந்தப் பகுதி சார்ந்த மக்களின் பங்களிப்போடுதான் காப்பாத்த முடியும். அந்த மக்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டு அவங்களோட மனநிலை காட்டுக்கு எதிரா திரும்பிட்டா நம்மால் எதுவுமே செய்யமுடியாது. இப்படி மனநிலை மாறுனதாலதான் பல இடங்கள்ல பல புலிகள் விஷம் வெச்சுக் கொல்லப்பட்டிருக்கு. அது ஏன்னா, தங்களின் உடமைக்கு ஆபத்துன்னு. உயிருக்கே ஆபத்துன்னா மக்கள் இன்னும் மோசமான மனநிலைக்குப் போகலாம். அந்த நிலைமை வந்தா அப்பாவி புலிகளும் கொல்லப்படும்.
ஆகவே, இதுமாதிரியான புலிகள் காட்டைவிட்டு உடனடியாக வெளியேற்றப்படணும். அது, இனி இந்தக் காட்டில் இருக்கக்கூடாதுங்க. அந்தப் புலியை இங்கிருந்து வெளியேத்துறது மூலமா பல புலிகள் காப்பாற்றப்படும். அதுதான் உண்மைங்க. இந்தப் புலியை வெளியேத்த ரெண்டு வழிதான் இருக்கு. ஒண்ணு, பிடிப்பது. அதுக்கான முயற்சிதான் இப்ப வரைக்கும் நடந்துட்டு இருக்குங்க. ஆனா, அவ்வளவு எளிதாக ஒரு புலியை பிடிச்சிட முடியாதுங்க. மயக்க ஊசி போட்டு பிடிக்கணும். அல்லது கூண்டுல வந்து அது மாட்டணும். இது ரெண்டுமே அவ்வளவு எளிதான விஷயமில்லை. கூண்டுக்குள்ள அவ்வளவு எளிதா புலி வந்துடாது. ஆப்பிரிக்கக் காடுகளைப் போல நமது காடுகள் திறந்தவெளி காடுகள் கிடையாது. நமது காடுகள் புதர் காடுகளாகவும் அடர் காடுகளாகவும் இருக்கிறதால புலிகள் அதுக்குள்ள எளிதா மறைஞ்சுடும். அதனால மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதும் லேசுப்பட்ட காரியமில்லை. அதனால்தான் இத்தனை நாளாகியும் நம்மால அந்தப் புலியை இன்னும் பிடிக்க முடியலை.
பிடிக்க முடியாத தருணத்தில், மக்களுக்கும் ஆபத்து வருதுன்னா தவிர்க்க முடியாத சூழலில்தான் அது சுடப்படணும். நம்மைப் பொறுத்தவரை ஒரு காட்டுயிர் ஆர்வலரா என்ன நினைக்கிறோம்னா... புலி வந்து காட்டுல இருக்கணும்; அவ்வளவுதான். காட்டுல இருந்து வெளியேற்றப்பட்டாலே அதோட எக்கலாஜிக்கல் (சூழலியல்) ரோல் போயிருச்சுங்க. நம்ம எப்பவுமே வளர்ப்புப் புலிகளுக்காக குரல் கொடுக்கிறதில்லை.
உலகம் முழுக்க சுமார் 4 ஆயிரம் புலிகள் இருக்கதா கணக்கு. இதுல இந்தியாவில் மட்டுமே 2,964 புலிகள் இருக்கு. ஆனா, அமெரிக்காவில் மட்டும் 7 ஆயிரம் வளர்ப்புப் புலி இருக்குங்க. சீனாவில் 5 ஆயிரம் வளர்ப்புப் புலி இருக்கு. அது அல்ல நமக்கு முக்கியம். ஒரு புலியைக் கொண்டுபோய் ஸூவில் அடைக்கிறதுங்கிறது காட்டுப் புலியைப் பொறுத்தவரை அதுக்கு அது ஒரு ஆயுள் தண்டனைதான்.
ஆக, ஒரு புலியை காட்டுலருந்து வெளியேத்துவோம்னு சொல்றதே கசப்பான முடிவுதாங்க. ஆனா, அது தவிர்க்க முடியாத முடிவு. இதுதான் காட்டுயிர் மேலாண்மை. இந்தப் புலியைச் சுடவேண்டாம்னு நீதிமன்றம் சொல்லி இருக்கு. அதுதான் எல்லாருடைய விருப்பமும். ஆனா, இன்னும் ரெண்டு மக்களை அடிச்சாக்க என்ன செய்றது? கொல்லாமைங்கிறது வேறு காட்டுயிர் மேலாண்மைங்கிறது வேறு. அந்த நுட்பத்தை அந்தப் பகுதி மக்களோடு சேர்ந்து நாம் புரிஞ்சுக்கணும்ங்க” என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார் ‘ஓசை’ காளிதாசன்.