சிவகங்கையும் சிதம்பரமும்... 4


1977 தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தலைவர் ப.சிதம்பரத்தை அழைக்க ஐயா ஏஎல்எஸ்ஸுடன் சென்ற இன்னொரு காங்கிரஸ் தியாகி இராம.சிதம்பரம்.

காரைக்குடியின் புகழ்பெற்ற குடும்பங்களில் ஒன்றான மாயவரம் சித. குடும்பத்தைச் சேர்ந்தவர் இராம.சிதம்பரம். இவரின் சித்தப்பா சித.சிதம்பரம் திமுக-வின் சார்பில் இரண்டு முறை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை காரைக்குடி நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றி ‘நகர தந்தை’ என காரைக்குடி நல்மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராம.சிதம்பரம்

அண்ணன் இராம.சிதம்பரம் நல்ல உயரம். செக்கச் சிவந்த நிறம். பளிச்சென்ற கதராடை. நெற்றியில் எப்போதும் விபூதியும் குங்குமமும் பக்தி பேசும். தமிழிலும் ஆங்கிலத்திலும் அழுத்தம் திருத்தமாக மேடையில் பேசவல்லவர். விஷயங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கத் தெரிந்தவர். 1971-ம் ஆண்டு அன்னை இந்திரா காந்தி அவர்களால் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1973 வரை அந்தப் பதவியில் திறம்படச் செயலாற்றினார்.

இவர் தான் தலைவர் ப.சிதம்பரத்தை இளைஞர் காங்கிரஸின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமித்தவர் என்பது இங்கே சொல்லியாக வேண்டிய விஷயம். பிறகு, வடசென்னை தென் சென்னையை உள்ளடக்கிய ஒன்றுபட்ட சென்னை மாநகர இளைஞர் காங்கிரஸ் செயலாளராக தன்னை ப.சிதம்பரம் முன்னிலைப்படுத்திக் கொண்டார். கே.வி.தங்கபாலு, இரா.அன்பரசு, வாழப்பாடி கூ.இராமமூர்த்தி போன்ற பல முக்கிய தலைவர்களை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்களாக நியமித்த பெருமையும் அண்ணன் இராம.சிதம்பரத்துக்கு உண்டு.

மூப்பனாருடன் ப.சிதம்பரம்...

1972-ல் இவர் காரைக்குடியில் மூன்று நாட்கள் நடத்திய இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள் பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் உயர்பொறுப்புகளில் சிறப்படைந்தார்கள். இந்த முகாமில் தான் சேலம் ரங்கராஜன் குமாரமங்கலம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த முகாமில் எ.பி.சி.வி.வீரபாகு, முன்னாள் அமைச்சர் இராமையா, ஈ.வெ.கி.சம்பத், அன்றைய மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம், பேராசிரியர் செல்லப்பா, தஞ்சை ராமமூர்த்தி உள்ளிட்ட பல ஆளுமைகள் உரையாற்றினர்.

அனைத்தையும் சொல்லும் போது இதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். இந்த நிகழ்ச்சிக்கான செலவுகளை தம் நகைகளை அடகு வைத்துச் செலவழித்தார் இராம.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.

1973-ல் இவருக்கு அடுத்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது சி.சுப்பிரமணியன் மத்திய அமைச்சராகவும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு நெருக்கமான தொடர்பிலும் இருந்ததால் அவர் மூலம் அந்தப் பதவிக்கு முயற்சி செய்தார் ப.சிதம்பரம்.

அப்போது சி.சுப்பிரமணியத்திடம் தனக்காக சிபாரிசு செய்ய இராம.சிதம்பரத்தையும் சிராவயல் க.திருநாவுக்கரசுவையும் சென்னைக்கு வரச் செய்கிறார் ப.சிதம்பரம். சென்னையில் எக்மோர் லெட்சுமி லாட்ஜில் தங்கியிருந்த இவர்கள் இருவரையும் தன்னுடைய ஃபியட் காரை தானே ஓட்டி வந்து அழைத்துச்சென்று சி.எஸ்.ஸை சந்திக்க வைக்கிறார் தலைவர். இருவரும் சிபாரிசு செய்ததால் தான் தலைவர் சிதம்பரத்துக்கு அப்போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தது. ஓராண்டு காலம் அந்தப் பதவியில் அவர் இருந்தார்.

1977 தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் தலைவர் ப.சிதம்பரம் போட்டியிட்ட போது இராம.சிதம்பரத்தின் சித்தப்பா சித.சிதம்பரமும் திமுக வேட்பாளராக களத்தில் இருந்தார். பொதுவாக நகரத்தார் பெருமக்கள் மாளிகை போன்ற தங்களது பூர்விக வீட்டில் ஆளுக்கொரு போர்ஷனில் குடித்தனம் நடத்துவது இன்றைக்கும் இருக்கும் நல் வழக்கம். அப்படித்தான் காரைக்குடி முத்துப்பட்டணத்தில் உள்ள வீட்டில் அண்ணன் இராம.சிதம்பரமும், அவரது சித்தப்பா சித.சிதம்பரமும் ஒரே வீட்டில் வசித்தார்கள். வீட்டின் இடதுபுற திண்ணையிலிருந்து திமுக வேட்பாளர் சித.சிதம்பரம் சூரியனுக்கு வாக்குக் கேட்டு கிளம்புவார். வலது புற திண்ணையிலிருந்து ப.சிதம்பரத்துக்காக கை சின்னத்துக்கு வாக்குக் கேட்டு இராம.சிதம்பரம் புறப்படுவார். குடும்பமா... கட்சியா என்றபோது கட்சி தான் முக்கியம் என்று இருவருமே கொள்கையில் திடமாக நின்றவர்கள்.

1984, 1989 தேர்தல்களில் தலைவர் ப.சிதம்பரத்திற்கு சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் பம்பரமாய் சுற்றி பணியாற்றினார் இராம.சிதம்பரம். 1989 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனைப் போட்டி. காங்கிரஸ் சார்பில் காரைக்குடியில் போட்டியிட அண்ணன் இராம.சிதம்பரம் பெயரை ஒரே பெயராக மாவட்ட காங்கிரஸ் தலைவர் உ.சுப்பிரமணியன் பரிந்துரைத்தார். ஆனால், தொகுதி எம்பி-யான ப.சிதம்பரம் காரைக்குடி தொகுதியைக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கச் செய்தார்.

ப.சிதம்பரம்

அந்தத் தேர்தலுக்குப் பிறகு, இனிமேல் சிவகங்கை மாவட்டம் சரிவராது என்று முடிவுசெய்த அண்ணன் இராம.சிதம்பரம், தான் தொழில் செய்யும் இடமான மயிலாடுதுறைக்கு அரசியல் களத்தையும் மாற்றிக்கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டம் பிரிக்கப்பட்டவுடன் அதன் முதல் மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார் அண்ணன்.

இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியுடன் அண்ணனுக்கு நல்ல அறிமுகம் உண்டு. மூப்பனார், வாழப்பாடி இராமமூர்த்தி, தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களுடனும் நல்ல நட்பில் இருந்தார். மணிசங்கர் அய்யரோடு இவருக்கு இருந்த நெருக்கமான நட்பு 1996-ல் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பினை பெற்றுத் தந்தது. அந்த தேர்தலில் தமாகா சார்பில் மயிலாடுதுறையில் இவரை நிறுத்த மூப்பனார் விரும்பினார். ஆனால், காங்கிரஸ் கட்சி தான் எனக்கு முக்கியம் என்று சொல்லி இராம.சிதம்பரம் அந்த வாய்ப்பைத் தவிர்த்து, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இப்போது மயிலாடுதுறையில் மனநிறைவோடு ஆன்மிக தொண்டும், தேடி வருவோருக்கு ஆலோசனைகள் தருவது உதவிகள் செய்வது என்றும் நிம்மதியாக இருக்கிறார் இராம.சிதம்பரம்.

இன்றைக்கு தான் தேர்தல் திட்டமிடல் பணிக்கு ‘ஐ பேக்’ போன்ற வியூக வகுப்பு நிறுவனங்களை நாடுகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலிலிருந்து காங்கிரஸ் இறங்கி திமுக வந்ததற்கு காரணம் என்ன? அதனை எப்படி எதிர்கொள்வது? பிரச்சார உத்திகளை வகுப்பது எப்படி என்றெல்லாம் ஆக்கபூர்வமான அரசியலை தன் பயிலரங்கிலும் தான் பேசுகிற கூட்டங்களிலும் அண்ணன் எடுத்துரைத்து வந்ததாக இராம.சிதம்பரத்துடன் இளைஞர் காங்கிரஸில் பணியாற்றிய நண்பர்கள் நினைவு கூருகிறார்கள். அப்படிப்பட்ட மிகப்பக்குவமான அரசியல் தலைவரை காங்கிரஸ் பயன்படுத்தாமல் போனது. சிவகங்கை அரசியல் சதுரங்கத்தில் அடிபட்டவர்களில் இவரும் ஒருவர்.

கடந்த மாதம் காரைக்குடியில் இவரின் பேத்திக்கு திருமணம். தொகுதி எம்பி என்ற முறையில் கார்த்தி சிதம்பரத்திற்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. நாகை, தஞ்சை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் திரளாக வருவதால் தொகுதி எம்பியும் கலந்துகொள்வது சிறப்பு என நினைத்தார் அண்ணன் இராம.சிதம்பரம்.

திருமணத்துக்கு முதல் நாள் காரைக்குடியிலுள்ள கார்த்தி சிதம்பரம் எம்பி ஆபிஸிலிருந்து அண்ணனுக்கு போன். “நீங்கள் எத்தனை வருடங்கள் காங்கிரஸில் இருக்கீங்க.... எந்தப் பதவியில இருந்தீங்க... இப்ப என்ன பதவியில இருக்கீங்க?” என்றெல்லாம் அண்ணனிடம் ஏகப்பட்ட கேள்விகள்.

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்

சபாஷ்.

வாழ்க்கையையே காங்கிரஸ் கட்சிக்காக அர்ப்பணித்தவர்களிடம் கட்சியைவிட்டு வெளியே போய் வந்தவர்கள் கேட்க வேண்டியது தானே?

இப்படித்தானய்யா தியாகமும் அர்ப்பணிப்பும் படாதபாடு படுகிறது சிவகங்கையில்!

(அடுத்தது, பெயருக்கு முன்னால் ஊரைச் சேர்த்து வைத்திருக்கும் இன்னொரு காங்கிரஸ் குடும்பத்தைப் பற்றி பேசுவோம்)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும் ... 3

x