கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றது சரிதானா?


பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின். அருகில் ஊராட்சித் தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் லட்சுமி. இடதுபுறம் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர்.

தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றது பேசுபொருளாகியிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 'நாட்டின் ஜனாதிபதியாகக் கூட பட்டியலினத்தவர்கள் வரலாம். ஆனால், சில ஊர்களில் ஊராட்சித் தலைவராக மட்டும் வரவே முடியாது' என்ற வரலாறு, தன் தந்தையால் மாற்றி எழுதப்பட்ட பாப்பாபட்டி ஊராட்சியில் முதல்வர் பங்கேற்றது நாடு தழுவிய அளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

முதல்வரே நேரில் பங்கேற்றதால் அந்த ஊருக்கு 'ஜாக்பாட்' போல பல திட்டங்கள் கிடைத்திருக்கின்றன. முதலமைச்சர் வருவதற்கு முன்பே வெளிப்படையாகத் தெரிகிற சின்னச் சின்னப் பிரச்சினைகளை எல்லாம், மின்னல் வேகத்தில் அதிகாரிகள் சரி செய்தார்கள் என்பதும் ஊர்மக்களைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், தமிழக சட்டப்பேரவைக்கு குடியரசுத் தலைவரோ, பிரதமரோ வந்து, தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கைகள், தேவைகள் குறித்து அதிரடியாய் சில அறிவிப்புகளை தாங்களே வெளியிட்டால் 'மாநில சுயாட்சி' பேசுவோரால் எப்படி அதை ஏற்க முடியாதோ, அதைப்போலவே உள்ளாட்சி மன்ற கூட்டத்தில், முதலமைச்சரும், அதிகாரிகளும் மேலாதிக்க உணர்வோடு செயல்பட்டதும் ஏற்க முடியாதது என்பது போன்ற குரல்களும் எழத் தொடங்கியிருக்கின்றன.

போலீஸ் குவிப்புக்குக் காரணமான சமூக வலைதள பதிவு

உதாரணமாக, பாப்பாபட்டி கிராமத்துக்கு முதலமைச்சர் வருகிறார் என்று முன்கூட்டியே எந்தத் தகவலும் அந்த ஊர் மக்களுக்குச் சொல்லப்படவில்லை. 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பாப்பாபட்டியில் இடம்பார்க்கச் செல்கிறார்கள். என்ன திட்டத்துக்கு என்று தயங்கித் தயங்கி ஊராட்சித் தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் கேட்கிறார்கள். அதன் பிறகே, கிராமசபை கூட்டத்துக்கு முதல்வர் வரும் செய்தி சொல்லப்படுகிறது. கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் வாசித்த அஜெண்டாவும் கூட அதிகாரிகளால்தான் தயாரித்துக்கொடுக்கப்படுகிறது. கூட்டத்தில் யாரெல்லாம் பேசலாம், எதைப் பற்றி எல்லாம் பேசலாம் என்பதும் உயர் அதிகாரிகளாலேயே முடிவு செய்யப்படுகின்றன.

உசிலம்பட்டி பகுதிக்கு முதல்வர் வருகிறார் என்றதும், பிரமலைக்கள்ளர், சீர்மரபினர் (டிஎன்டி) போன்ற பல்வேறு சங்கத்தினர் வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் அவரைச் சந்திக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சிலர் 'கோ பேக் ஸ்டாலின்' என்று முகநூலில் பதிவிடுகிறார்கள். இன்னும் சிலர் தடையை மீறி முதல்வரைச் சந்திக்கத் திட்டமிடுகிறார்கள். விளைவாக, முதல்வரை சந்திக்க முயற்சித்த பலர் வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார்கள். இருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதும் செய்யப்படுகிறார்கள். முதல்வர் செல்லும் பாதையில் போலீஸ் குவிக்கப்படுகிறது. பாப்பாபட்டி கிராமத்துக்குள் வெளியூர் ஆட்கள் நுழையாத வகையில் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இவ்வளவு களேபரங்களுக்கும் நடுவில்தான் முதல்வரின் கிராமசபை கூட்டம் நடந்தேறியிருக்கிறது.

ச.ப.அண்ணாதுரை

முன்மாதிரியாக நடத்தியிருக்க வேண்டும்...

முதல்வரின் இந்தப் பயணம் குறித்து, மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் ச.ப.அண்ணாதுரை நம்மிடம் பேசுகையில், "கரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிராமசபை கூட்டத்தை நடத்த அனுமதி அளித்ததுடன், அதில் முதல்வரே கலந்துகொண்டது உண்மையிலேயே வரவேற்புக்குரியது. கிராமசபை கூட்டத்தில் முதல்வரே பங்கேற்றிருப்பதன் மூலம் அதன் முக்கியத்துவம் பற்றி தமிழகம் முழுவதும் வாழும் கிராம மக்களுக்கு ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். ஆனால், முதல்வரின் உயர்ந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை என்றே நான் கருதுகிறேன்.

காரணம், முதல்வரை மட்டுமே முன்னிறுத்துகிற மாதிரி இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துவிட்டார்கள் அதிகாரிகள். நியாயமாக கிராமசபை என்றால் என்ன, அந்தக் கூட்டத்தை எவ்வாறு சிறப்பாக நடத்த முடியும், அதன் தலைவர், உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி உள்ளூர் மக்களுக்கும் என்ன மாதிரியான அதிகாரங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை எல்லாம் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தெரியப்படுத்துகிற, விழிப்புணர்வை ஏற்படுத்துகிற மாதிரி கிராமசபை கூட்டமாக இதை நடத்தியிருக்க முடியும்.

அதாவது, கூட்டத்தின் தொடக்கத்தில் நிகழ்ச்சி நிரல் (அஜெண்டா) வாசித்தார் ஊராட்சி செயலாளர். நியாயமாக சட்டமன்றத்தில் ஒரு மசோதாவோ, பட்ஜெட்டோ தாக்கல் செய்யப்படும்போது எப்படி உறுப்பினர்கள் எல்லாம் அதன் சாதக பாதகம் குறித்த தங்கள் கருத்துக்களை எடுத்துரைப்பார்களோ, அதைப்போல அந்த ஒவ்வொரு அஜெண்டா மீதும் ஊர் மக்கள் விவாதிக்க அனுமதித்திருக்க வேண்டும். ஆதார் அட்டை எண் கொடுத்து பெயர் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி, என்ன பேசப் போகிறோம் என்பதை அதிகாரிகளிடம் சொல்லி அவர்கள் சொன்ன திருத்தத்தையும் ஏற்றுக்கொண்ட 3 ஆண்கள், 3 பெண்களுக்கு மட்டுமே பேச அனுமதி என்பதெல்லாம் ஏற்புடையதல்ல.

முதல்வருக்கு நிறைய வேலைகள் இருக்கும், அப்படி வேலை, நேர நெருக்கடிக்கு மத்தியில் ஒரு கிராம ஊராட்சிக்கு அவர் வந்ததும், உள்ளடங்கிய கிராமத்து மக்களின் கோரிக்கையையும் கேட்டு நிறைவேற்றியிருக்கிறார் என்பதும் உள்ளபடியே மகிழ்ச்சிதான். ஆனால், அந்தக் கூட்டத்தை காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை வரையில் ஒரு சட்டமன்றம் போல முழுமையாக நடத்தியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற ஆசையும் எங்களைப் போன்றோருக்கு இருக்கிறது.

எனவே, முதல்வரின் வருகை 55 சதவீதம் திருப்தியையும், 45 சதவீதம் ஏமாற்றத்தையுமே தருகிறது. இந்த ஊராட்சிக்கு முதல்வர் போனார், மக்களிடம் கரோனா நிவாரண நிதி கிடைத்ததா? பெண்களுக்கு இலவசப் பேருந்து ஒழுங்காக வருகிறதா? என்று கேட்டார். மக்கள் இல்லை, எங்களுக்கு மதுரைக்கு இலவசப் பேருந்து இல்லை என்று முறையிட்டார்கள். இரண்டே நாளில் இப்போது அந்த ஊருக்கு 3 இலவசப் பேருந்துகளை இயக்க அரசு ஆணையிட்டிருக்கிறது. தாழ்தளப் பேருந்து சாதாரணப் பேருந்தாக மாற்றப்பட்டிருப்பதால், ஆண்களுக்கான பேருந்து கட்டணமும் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஊராட்சிகள் இருக்கின்றன. இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பிரச்சினைகள் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் முதல்வரே போய் நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லை. எனவே, வேறு சில மாநிலங்களில் இருப்பதுபோல தமிழகத்திலும் உள்ளாட்சித் துறைக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட வேண்டும். இது மாநில அரசின் பணிச்சுமையை வெகுவாகக் குறைக்கும். ஒரு தெருவிளக்கு, குடிநீர் பிரச்சினைக்குக் கூட முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் போவது எவ்வளவு பணிச்சுமையைக் கொடுக்கும்? உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்து முதல்வரான மு.க.ஸ்டாலின் நினைத்தால் எல்லாம் சாத்தியமாகும்" என்றார்.

பேராசிரியர் க.பழனித்துரை

தவறு கிடையாது

உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள், கடமைகள் குறித்து எழுத்து மற்றும் செயல்பாட்டின் மூலம் தொடர்ந்து 15 ஆண்டுகளாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் காந்தி கிராம பல்கலைக்கழகப் பேராசிரியர் க.பழனித்துரை. அவரிடம் கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள், 3-வது அடுக்கு ஆட்சி முறையாக இருக்கிற உள்ளாட்சியில் முதல்வரின் தலையீடு நல்ல விளைவை ஏற்படுத்துமா? என்று கேட்டோம்.

அதற்கு அவர், "முதல்வர் பங்கேற்பது தவறு கிடையாது. முதலமைச்சர் ஒரு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கிறபோது, கிராமசபை என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு, அதில் எடுக்கிற முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிற விஷயம் பரவலாகப் போய்ச்சேருகிறது. அந்த கிராமசபைக்குத் தலைவர் அந்த ஊராட்சியின் தலைவர்தான். அவரும் அங்கேதான் இருக்கிறார். எப்போதுமே கிராமசபையில் அஜெண்டாவை வாசிக்க வேண்டியது ஊராட்சி செயலாளர்தான், அதுவும் மரபுப்படியே நடந்திருக்கிறது. முதல்வருக்கு ஒவ்வொரு ஊராட்சியையும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு, கடமை இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர் ஒரு ஊராட்சியின் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று அம்மக்களுடன் கலந்துரையாடுவது சரியானதுதான்.

கிராமசபை கூட்டத்துக்கு அந்த கிராமத்தின் மீது அக்கறையுள்ள யார் வேண்டுமானாலும் பார்வையாளராகச் செல்லலாம். நானே பல ஊர்களின் கிராமசபை கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன். ஊராட்சித் தலைவரும், 'காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இருந்து பேராசிரியர் வந்திருக்கிறார். அவரை வரவேற்கிறோம். ஊரின் வளர்ச்சி குறித்து அவர் கருத்து சொல்வதாக இருந்தால் சொல்லலாம்' என்று அனுமதி அளிப்பார். அதற்கு கிராமசபையின் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. அப்படித்தான் தமிழக முதல்வரையும் கிராமசபையின் தலைவர் வரவேற்றுப் பேசியிருக்கிறார்.

எனவே, அதில் எந்த விதிமீறலும் இல்லை. ஊராட்சித் தலைவரோ, துணைத் தலைவரோ, உறுப்பினர்களோ இல்லாமல் முதல்வரே தன்னிச்சையாக ஒரு கூட்டத்தை நடத்தினால்தான் அது விதிமீறல் என்று சொல்ல முடியும். முதல்வரின் வருகையால் கிராமசபைக்கு பலம் கூடுகிறதே தவிர குறையவில்லை. நமக்குப் புரிதல் வேண்டும்.

கிராமசபை என்பது அடிப்படை மாற்றத்துக்கான ஒரு ஜனநாயக அமைப்பு. அங்கே இருக்கிற பிரச்சினைகளுக்கு அந்த ஊர் மக்களே ஒன்றுகூடிப் பேசி தீர்வு காண்பதுடன், அரசாங்கத்தை நாம் எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிந்திக்கக் கூடிய, விவாதிக்கக்கூடிய ஒரு பெருமன்றம். அரசியல் அமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட மக்கள் பாராளுமன்றம். முதல்வர் ஒன்றும் ஒரு கட்டப்பஞ்சாயத்து கூட்டத்துக்கோ, நாட்டாமை நடத்துகிற கூட்டத்துக்கோ போகவில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பாராளுமன்றத்துக்கு ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் செல்வது, அந்த கிராமசபையின் அதிகாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமே தவிர, அது விதிமீறலாகக் கருதப்படாது" என்றார்.

கூடுதல் அதிகாரம்

'தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு குறைவான அதிகாரம் மட்டுமே இருக்கிறது. கூடுதல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கை குறித்தும் பழனித்துரையிடம் கேட்டபோது, "என்னைப் பொறுத்தவரையில், உள்ளாட்சிகளுக்கு இன்றுள்ள அதிகாரத்தை முழுமையாக செயல்படுத்தினாலே நிறைய சாதனைகளைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். இந்த கிராமசபைக்கு என்னென்ன அதிகாரம் இருக்கிறது பாருங்க... பட்ஜெட் தயாரிக்கும் அதிகாரம் அதற்கு இருக்கிறது. அந்த ஊருக்கான தேவைகளுக்காக பட்ஜெட் போடுவது, 'அப்ரூவ்' பண்ணுவது போன்ற அதிகாரமும் அதற்கு இருக்கிறது.

மத்திய - மாநில அரசுகளின் எந்தத் திட்டமாக இருந்தாலும், அதாவது சுமார் 300-க்கும் அதிகமான திட்டங்கள் இருக்கின்றன. அதற்கான பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து இறுதியில் அப்ரூவ் பண்ணுவதும் கூட கிராமசபைதான். கிராமத்தின் 5 ஆண்டுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதும் இந்த கிராமசபைதான். இதைவிட இன்னும் முக்கியமாக, இந்த கிராமப் பஞ்சாயத்தின் தணிக்கை அறிக்கையை கிராமசபை ஒப்புக்கொண்டால்தான் அது ஏற்கப்படும். இப்படி அத்தனை அதிகாரங்களையும் கிராமசபையிடம் கொடுத்துவிட்டு, பஞ்சாயத்து நிர்வாகத்தை ஒரு மந்திரி சபை மாதிரி ஆக்கியிருக்கிறது சட்டம்.

எப்படி சட்டமன்றமானது சட்டத்தையும், திட்டத்தையும் நிறைவேற்றிவிட்டு, அதைச் செயல்படுத்துகிற அதிகாரத்தை அமைச்சரவையிடம் கொடுக்கிறதோ அதைப்போலத்தான் முழு அதிகாரமும் இங்கே கிராமசபையிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை வெளிப்படையாக யாரும் சொல்வது கிடையாது. உண்மையிலேயே ஒருவர் கிராமசபையின் அதிகாரத்தைப் பற்றித் தெரிந்துகொண்டார் என்றால் தலைவர் பாடு திண்டாட்டம்தான். அவ்வளவு அதிகாரம் இருக்கிறது.

கிராமசபை கூட்டத்திற்கான அஜெண்டாவை தயாரிப்பதும் கூட மக்கள்தான். இவர்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியாததால்தான் அரசு அதிகாரிகளே அதைத் தயாரித்துக்கொடுக்கிறார்கள். சட்டப்படி எங்களுக்குத்தான் இதற்கான அதிகாரம் உண்டு என்று சொல்லும் அளவுக்கு கிராம மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். ஆழ்ந்து சிந்திப்பதற்கு அவர்களே முயற்சிக்க வேண்டும். கிராமசபை கூட்டத்தில் ஒருவர் வந்து இந்த ஊரில் தீண்டாமை இருக்கிறது என்று சொன்னால், அதைப்பற்றி விவாதிக்க வேண்டும். நம்மூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாக இருக்கிறது என்று ஒரு பெண் சொன்னால், அதைப்பற்றியும் விவாதிக்க வேண்டும். உள்ளாட்சி என்பது அடிப்படை மாற்றத்துக்கு வேலை செய்வது. அந்தப் புரிதல் வர வேண்டும். அதற்கு அரசும் துணை நிற்க வேண்டும்" என்றார்.

கடந்த ஆட்சிக்காலத்தில், உள்ளாட்சித் தேர்தலைக்கூட நடத்தாமல் ஒட்டுமொத்த உள்ளாட்சிகளை ஒரே ஒரு அமைச்சரே ஆட்டுவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கி கிராமங்களில் விளக்கு அமைத்தது வரையில் தன் உறவினர்களுக்கே கான்ட்ராக்ட்களைக் கொடுத்து பலனடைந்தார் என்ற புகார்கள் ஏற்படுத்திய அலைகள், இன்னமும் மக்கள் மனதில் இருந்து அகலவில்லை. 'உள்ளாட்சியில் நல்லாட்சி' கிடைக்க முதல் அடி எடுத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. அது, இன்னும் பல அடிகளை எடுத்துவைக்க வேண்டும். முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அது முடியும்.

x