சிவகங்கையும் சிதம்பரமும் ... 3


மதுரை இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் (1972) இந்திரா காந்தியுடன் ப.சிதம்பரம்...

1977-ல் சிதம்பரத்தை எப்படியாவது சிவகங்கை அரசியலுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற அவாவுடன் சிவங்கையிலிருந்து காங்கிரஸ் பேரியக்க முன்னோடிகள் இரண்டு பேர் சென்னைக்கு ரயிலேறினார்கள் அல்லவா...

அவர்களில் முதலாமவர், ஐயா.ஏ.எல்.சுப்பையா அம்பலம். அடுத்தவர் இராம.சிதம்பரம்.

அப்போது தலைவர் ப.சிதம்பரம் சென்னை செனாய் நகரில் மாநகராட்சி கவுன்சிலர் நல்லதம்பி வீட்டு மாடியில் குடியிருந்தார். ஐயா ஏஎல்எஸ்ஸும் முன்னாள் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் இராம.சிதம்பரமும் அங்கே பண்பாளர் ப.சிதம்பரத்தைச் சந்தித்துப் பேசி, 1977 சட்ட மன்றத் தேர்தலில் காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட வலியுறுத்துகிறார்கள்.

ஏ.எல்.சுப்பையா அம்பலம்

அப்போது ஏஎல்எஸ் ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர். 1962-ல் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் சுதந்திரா கட்சியின் சா.கணேசனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தவர். அன்றைய சூழலில் கடும் போட்டிக்கு ஈடுகொடுத்து வெற்றியின் விளிம்பு வரை தொட முடிந்தது என்றால் அதற்கு ஏஎல்எஸ்ஸின் தனிப்பட்ட செல்வாக்கே காரணம். மாவட்ட தலைவராக இருந்த அவர், மறுபடியும் எம்எல்ஏ சீட்டைக் கேட்டிருந்தால் கட்சி அவருக்கே வாய்ப்பளித்திருக்கும்.

ஆனால், இருவரும் தலைவர் சிதம்பரத்தை வற்புறுத்தி காரைக்குடிக்கு அழைத்து வந்தார்கள். தலைவர் சிதம்பரத்தை தம் வீட்டிற்கு அழைத்து வந்த ஏஎல்எஸ், அன்றைய காரைக்குடியின் பிரபல ஜோதிடரை வைத்து சிதம்பரத்தின் ஜாதகத்தை கணிக்கிறார். அதன் பிறகு தேர்தலில் போட்டி என முடிவு செய்யப்படுகிறது. தலைவர் சிதம்பரம் தனது மனைவி, மகனுடன் காரைக்குடியில் ஏஎல்எஸ் வீட்டு மாடியில் தான் அப்போது தங்குகிறார்கள்.

அனல் பறக்கும் தேர்தல். நான்கு முனைப் போட்டி. காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம், திமுக வேட்பாளர் சித.சிதம்பரம், அதிமுக வேட்பாளர் பொ.காளியப்பன், ஜனதா கட்சி வேட்பாளர் பழ.கருப்பையா என காரைக்குடி தேர்தல் களத்தில் தீப்பொறி பறக்காத குறை.

காங்கிரஸ் களத்தின் மிகப்பெரிய பலம் ஏஎல்எஸ். அரசியல் களத்தை, மக்கள் மனதை நன்கறிந்தவர். மிக பெரிய ஜனக்கட்டு உடையவர். வீரம் மிகுந்தவர். நியாயவான். தனது முழு பலத்தையும் வசதிகளையும் தொடர்புகளையும் தலைவர் சிதம்பரத்திற்காகவும் காங்கிரஸ் கட்சிக்காகவும் பயன்படுத்தினார்.

ஆனாலும் அந்த தேர்தலில் 230 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் காளியப்பன் வெற்றி பெற்றார்.

ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தபோது தினமும் மதிய உணவுக்குப் பிறகு ஏதாவது ஒரு ஊரில் காங்கிரஸ் கூட்டம் என்று சொல்லி காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார் ஐயா ஏஎல்எஸ். கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, விருதுநகர், சிவகங்கை என்று பரந்து விரிந்த பகுதி அப்போதைய ராமநாதபுரம் ஜில்லா. ஆதலால் மதியம் கிளம்பினால் தான் மாலை நேர கூட்டங்களுக்குச் செல்ல முடியும். காங்கிரஸ் பேரியக்கத்துக்காக தன்னிடமிருந்த சொத்துக்களை விற்று செலவழித்த ஏஎல்எஸ், தன் வாழ்நாளில் பெரும் பகுதி நேரம் கட்சிக்காகவே உழைத்தார். சில நேரங்களில் தங்களது வாழைத் தோப்பிலிருந்து சந்தைக்கு செல்லும் வாழை இலைக்கான பணம் வர காத்திருந்து அதையும் கட்சிக்கே செலவழித்த கதையை அன்றைய காங்கிரஸ்காரர்களைக் கேட்டால் சொல்வார்கள்.

அப்படி செலவழித்த காரணத்தால் தான் பல உட்கட்சி ஜாம்பவான்களையும் மாற்றுக் கட்சிப் போட்டியாளர்களையும் அவரால் சமாளிக்க முடிந்தது. அன்னை இந்திரா காந்தியை அழைத்து வந்து காரைக்குடியில் மிக பிரம்மாண்டமான ஒரு மாநாடு, அன்றைய மத்திய அமைச்சர் ஸ்டீபனை வைத்து திருப்பத்தூரில் காங்கிரஸ் கூட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு விழா என்றெல்லாம் அசத்திய பெருமை ஐயாவுக்கு உண்டு.

காரைக்குடி காங்கிரஸ் மாநாட்டில் இந்திராவுடன் ஏ எல் எஸ். (உடன் அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இராமையா )

காமராஜர், இராமையா, கக்கன், எம்.பி.சுப்பிரமணியம், மூப்பனார், வாழப்பாடியார் என பல முன்னணி தலைவர்களுடன் பழகியவர்; அரசியல் பணி ஆற்றியவர் ஏஎல்எஸ். பல அரசியல் தலைவர்களை, மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கியவர் அவர். அதில் ராமநாதபுரம் எம்பி-யான ராஜேஸ்வரன், திருவாடானை எம்எல்ஏ சொர்ணலிங்கம், திருப்பத்தூர் எம்எல்ஏ அருணகிரி போன்றவர்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள்.

1981-ல் திருப்பத்தூர் இடைத் தேர்தலில் அதிமுக வும் திமுகவும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தன. ஏஎல்எஸ் அப்போதும் மாவட்ட காங்கிரஸ் தலைவர். இவரையே திருப்பத்தூரில் போட்டியிடும்படி அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம் சொல்கிறார். ஆனால் அதை அன்பால் மறுத்த ஏஎல்எஸ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை கூட்டி இராம.அருணகிரியை காங்கிரஸ் வேட்பாளராக பரிந்துரை செய்கிறார். தலைமையும் வேறு வழியில்லாமல் அருணகிரியையே நிறுத்துகிறது. அப்போது அருணகிரிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதலமைச்சர் எம்ஜிஆர், ஏஎல்எஸ்ஸுக்கு தித்திப்பு நோய் (சுகர்) என அறிந்து அவரை கரிச்சான் கீரை சாப்பிடச் சொல்லிச் சென்றது ‘இனிப்பான’ இன்னொரு கிளைக் கதை.

1980 பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.வி.சுவாமிநாதன். அப்போதிருந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் உ.சுப்பிரமணியன், தலைவர் ப.சிதம்பரத்தைத்தான் வேட்பாளராக்க முயற்சித்தார். ஆனால், சீனியரான ஆர்விஎஸ்ஸுக்கு வாய்ப்பளித்தார் அன்னை இந்திரா. இதனால் ஆர்விஎஸ்ஸுக்கும் உ.சுபவுக்கும் கொஞ்சம் முரண்பாடு. இரண்டு பேரும் பாகனேரியைச் சேர்ந்தவர்கள். மிக நெருங்கிய உறவினர்கள். இரண்டு பெருந்தலைகளையும் சமாதானம் செய்து காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த காரைக்குடியிலிருந்த ஆர்விஎஸ் மகள் வீட்டிற்கு உ.சுப-வை அழைத்து வந்தார் ஏஎல்எஸ். நேரில் பார்த்ததும் ஆர்விஎஸ்ஸும் உ.சுபவும் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் அமோகமாய் வென்றது. அப்படி சமாதான சூட்சுமம் அறிந்தவர் ஏஎல்எஸ்.

காலங்கள் கடந்தபோது, நிலத்தடி நீரை காரைக்குடியிலிருந்து உறிஞ்சி தனது தொகுதியான திருப்பத்தூருக்கு கொண்டு செல்ல திட்டம் வகுக்கிறார் ஜெயலலலிதா ஆட்சியில் அதிகாரமிக்க அமைச்சராக இருந்த (ராஜ) கண்ணப்பன். இதை எதிர்த்து காரைக்குடியில் ‘குடிநீர் போராட்டக் கூட்டுக் குழு’ உதயமாகிறது. அதன் தலைவர் ஐயா ஏஎல்எஸ்.

போராட்டக் குழு உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி காவல்துறையிடம் மனு கொடுத்தது. பொது இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதற்காக கலங்கவில்லை ஏஎல் எஸ். தான் நடத்தி வந்த காளீஸ்வரா பால் பண்ணை வளாகத்திலேயே உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடு செய்தார். அந்தக் குழுவின் செயலர் பழ.கருப்பையா உள்ளிட்ட சிலர் பங்கெடுத்த காலவரையற்ற உண்ணாவிரதம் 19 நாட்கள் நீடித்தது. இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவின் அரசை எதிர்த்து அப்படி ஒரு போராட்டம் ஏஎல்எஸ் இல்லாதிருந்தால் சாத்தியமாகி இருக்குமா என்பது சந்தேகமே. சுதந்திரத்திற்கு பிறகு காரைக்குடி சந்தித்த மிகப்பெரிய மக்கள் போராட்டம். ஊரே பற்றி எரிந்தது. மந்திரிமார்கள் கைபிசைந்து செய்வதறியாது நின்றார்கள். மக்களின் எழுச்சியை பார்த்து காவல்துறை பின்வாங்கியது. அது தான் ஏஎல்எஸ்ஸின் பலம். சம்பை ஊற்றை காரைக்குடிக்கு மட்டுமே தக்க வைத்ததில் பெரும்பங்கு பெருந்தகை ஏஎல்எஸ்ஸுக்கு உண்டு.

ப.சிதம்பரம்

"பெரியவீட்டுப் பிள்ளை " என்று தலைவர் சிதம்பரம் மீது பெரும் பாசம் காட்டினார் ஏஎல்எஸ். தனக்கான எல்லா வாய்ப்புகளும் அமைந்தும் எந்த அரசுப் பதவிக்கும் வராமலே மறைந்தார். மக்கள் செல்வாக்கு, ஆள் பலம் உள்ளவர்கள் சாதுர்யமாக வைக்கப்படும் அரசியல் 'செக்' கில் தப்ப முடியவில்லை என்பதே பெரும் வேதனை. அவரது மறைவு காங்கிரஸுக்கான மிகப் பெரிய இழப்பு.

1995 வருடம்.

ஏஎல்எஸ் மறைந்த போது காரைக்குடி மக்கள் கடையடைப்பு நடத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு சென்னை வீட்டில் ஓய்விலிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாழப்பாடியார் தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாது ஐயாவுக்கு அஞ்சலி செலுத்த காரைக்குடிக்கு கிளம்பி வந்தார். இறுதி ஊர்வலத்தில் ஏஎல்எஸ் வீட்டிலிருந்து காரைக்குடி பொது மருத்துவமனை எதிரே உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்த இடம் வரை நடந்தே வந்தார். உடல் நலமில்லாத நிலையிலும் வியர்க்க விறுவிறுக்க நடந்த வாழப்பாடியார், காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தி ஐயாவுக்கு இறுதி மரியாதை செய்தார்.

ஆனால், ஒரு மாதம் கழித்து தலைவர் சிதம்பரம் தமது சுற்றுப்பயணத்துக்கு நடுவே ஏஎல்எஸ் வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றார். அவரைப் பார்த்ததும் பெற்ற பிள்ளையிடம் கதறுவதைப் போல ஏஎல்எஸ் ஐயாவின் மனைவி கல்யாணி அம்மாள் கதறி அழுதார். சிதம்பரத்துக்கு பல நாட்கள் அன்னம் பரிமாறி பாசம் காட்டிய கல்யாணி அம்மாள் அந்த நேரத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மூன்று மாவட்டங்கள் அறிந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவராக இருந்த ஏஎல்எஸ், தனக்குப் பின்னால் ஆளட்டும் என தனது குடும்பத்திலிருந்து தனக்கான அரசியல் வாரிசை அடயாளம் காட்டாமல் போனது காங்கிரஸ் முரண்!

1977-ல் சிதம்பரத்தை சிவகங்கை அரசியலுக்கு இழுத்துவர ஐயாவுடன் சென்னைக்குச் சென்ற இராம.சிதம்பரம் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

(அவர் தான் அடுத்த டாபிக்)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும்... 2

x