மத்தியில் தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆண்டுகொண்டிருக்கிறது. பாஜகவுக்கு எதிரானவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் பெறவேண்டிய காங்கிரஸ் கட்சியோ, சொந்தக் கட்சியின் கபில் சிபல் போன்ற தலைவர்களாலேயே விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரியை 'காமதேனு' மின்னிதழ் பேட்டிக்காகத் தொடர்புகொண்டேன்.
காங்கிரஸில் கன்னையா குமார் இணைந்திருக்கிறார். ஜிக்னேஷ் மேவானி இப்போதைக்கு இணையாவிட்டாலும், அடுத்த குஜராத் தேர்தலில் காங்கிரஸ் சின்னத்தில் நிற்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இதுபோன்ற இளைஞர்களின் வரவு காங்கிரஸுக்கு எந்த அளவுக்குப் பயன்தரும்?
இருவருமே வடஇந்தியாவில் சிறந்த செயல்வீரர்கள் என்று பெயர் பெற்ற இளைஞர்கள். மக்கள் மத்தியில் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள். எனவே, அவர்கள் காங்கிரஸில் இணைவதும், ஆதரவு தருவதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நிச்சயமாக அவர்களது வருகை காங்கிரஸுக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கும்.
பாஜகவில் ஒரு ஐபிஎஸ் அதிகாரி சேர்ந்தால், உடனே அவர் வேட்பாளராக்கப்படுகிறார், பிறகு கட்சியின் மாநிலத் தலைவராகவே ஆகிறார். அதுவே காங்கிரஸில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி (சசிகாந்த் செந்தில்) சேர்ந்தால், அவர் கார்த்தி சிதம்பரம் போன்றோரால் இழிவு செய்யப்படுகிறார்... ஏன் இப்படி?
இது ஒரு பொருத்தமான கேள்வியே இல்லை. ஒரு கட்சியில் ஒன்று நடக்கிறது என்பதற்காக, இன்னொரு கட்சியிலும் அப்படியே நடக்க வேண்டும் என்று சட்டமா இருக்கிறது? நாங்கள் எங்களுக்கென ஒரு கட்சியை வைத்திருக்கிறோம். பாஜகவில் இப்படிச் செய்கிறார்கள். நீங்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை என்று கேள்வி கேட்டால் நான் என்ன பதில் சொல்வது? அவர்கள் ஒரு ஐபிஎஸ் அதிகாரியைப் பிடித்து தேர்தலில் நிறுத்தித் தோற்கடித்தார்கள். இதுவே காங்கிரஸ் கட்சி என்றால், அந்த ஐஏஎஸ் அதிகாரியை தேர்தலில் நிறுத்தினால் நிச்சயமாக வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நினைப்போம்.
"காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவர் என்றே தெரியவில்லை. பஞ்சாப் பிரச்சினையில் யார்தான் முடிவெடுக்கிறார்கள் என்றும் தெரியவில்லை" என்று மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கூறியிருக்கிறாரே?
சோனியா காந்திதான் தலைவர். அதுவும் தற்காலிகத் தலைவர் அல்ல, நிரந்தரத் தலைவர். ராஜீவ் காந்தி மறைவிற்குப் பிறகு அரசியலைவிட்டே விலகியிருந்த அவர், கட்சியினரின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர். வெறும் 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை 14 மாநிலங்களில் ஆளவைத்ததுடன், 2004, 2009 தேர்தல்களில் நாட்டையே ஆளுகின்ற கட்சியாகக் காங்கிரஸை உயர்த்தியவர் அவர். காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த கபில் சிபலுக்கு ஏதாவது மனதில் சந்தேகம் இருந்தால் நேரடியாக சோனியா காந்தி, ராகுல் காந்தியிடமே கேட்கலாம். ஆலோசனைகளையும்கூட நேரடியாகவே சொல்லலாம். அதை விட்டுவிட்டு, பொதுவெளியில் கட்சியை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. பாஜகவின் சுமையை அவர் குறைக்கிறாரா அல்லது அவர்களுக்காகவே வாயைத் திறக்கிறாரா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.
கபில் சிபலை விடுங்கள். பஞ்சாப் காங்கிரஸில் நடக்கிற குழப்பங்கள் உங்களுக்குக் கவலை தரவில்லையா?
ஒரு பெரிய அரசியல் கட்சியில், இந்தியா முழுவதிலும் பரவிக்கிடக்கிற ஒரு பேரியக்கத்தில் இந்த மாதிரி சின்னச் சின்ன மனமாச்சரியங்கள் ஏற்படத்தான் செய்யும். ஒரு கடலில் நான்கு மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன என்பதற்காக, கடலில் உள்ள அத்தனை மீன்களும் கடலைவிட்டு வெளியேறி கரை ஒதுங்கத் துடிக்கின்றன என்று சொல்வீர்களா? கவலைப்படுவீர்களா? பாஜகதான் இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்குகிறது. குஜராத்திலும்தான் முதல் அமைச்சரை மாற்றினார்கள். ஏன், அது பெரிய செய்தியாக வெளியே வரவில்லை? குஜராத்தில் முதல்வர் மாறினால் அது செய்தியல்ல, பஞ்சாப்பில் முதல்வர் மாறினால் அது மாதக்கணக்கில் விவாதிக்க வேண்டிய பிரச்சினையா? பாஜகவின் கை எந்தளவிற்கு ஊடகங்களுக்குள் ஊடுருவியிருக்கிறது என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.
எப்படியிருக்கிறது திமுக ஆட்சி?
மிகவும் நன்றாக இருக்கிறது. வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறது. கரோனாவைக் கட்டுப்படுத்தியதுடன், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி எடுக்கிறார்கள். மோடி கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும் எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஒரு பக்கம் மக்களுக்காகக் களமிறங்கி வேலை செய்வதுடன், மறுபுறம் கொள்கை ரீதியாகவும் பணியாற்றுகிறார்கள்.
நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதில் திமுகவுக்குத் தடுமாற்றம் இருப்பதுபோல் தெரிகிறதே?
அப்படியெல்லாம் இல்லை. நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்து, சமூகத்தின் பல தரப்பட்ட மக்களிடமும் கருத்து கேட்டு நீட் தேர்வை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும் என்று அறிக்கை பெற்றிருக்கிறார்கள். அந்த அறிக்கையை மையமாக வைத்து சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதிமுக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கும், திமுக நிறைவேற்றிய தீர்மானத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதிமுக நிறைவேற்றிய தீர்மானத்தை உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார்கள். உள் துறை அமைச்சகம் அந்தத் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கே அனுப்பாமல் இரண்டே நாளில் திருப்பியனுப்பிவிட்டது. ஆனால் அப்படித் திரும்பிவந்ததை, சட்டமன்றதுக்குக்கூட அதிமுக அரசு 2 ஆண்டு காலம் தெரியப்படுத்தவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டப்படிதான் அது வெளியே வந்ததே தவிர, கடைசி வரையில் அவர்களாகச் சொல்லவேயில்லை.
ஆனால், திமுக அரசின் அத்தனை நகர்வுகளும் வெளிப்படையாக இருக்கின்றன. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால், அதுதொடர்பான சட்டம் இயற்ற மத்திய அரசுக்கும் அதிகாரமுண்டு, மாநில அரசுக்கும் அதிகாரமுண்டு. மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் வேண்டாம் என்று மரபான முறையில் இந்தத் தீர்மானம் அனுப்பப்பட்டிருக்கிறது. மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், மாநில அரசாங்கம் தன்னுடைய பங்கை எப்படிச் செயல்படுத்த முடியுமோ அப்படிச் செயல்படுத்தும் என்று நம்புகிறேன். இந்த விஷயத்தில் திமுக அரசிடம் லேசான தடுமாற்றம்கூட இல்லை.
“கருணாநிதியைவிட ஆபத்தானவர் மு.க.ஸ்டாலின்” என்று பாஜகவின் எச்.ராஜா சொல்லியிருக்கிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கலைஞரும் ஆபத்தானவர் அல்ல, அவரது மகன் ஸ்டாலினும் ஆபத்தானவர் அல்ல. அவர்கள் தங்களது கொள்கையைச் சொல்கிறார்கள். அதில் ஆபத்து எங்கிருந்து வந்தது? அவர்கள் என்ன பயங்கரவாதிகளா? ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடையவர்கள், தேர்தல் முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். தங்களுடைய கருத்தை மக்கள் மன்றத்தில் எடுத்துவைத்து மக்கள் ஆதரவுடன் ஆட்சியமைத்து அந்தக் கொள்கைகளில் மக்கள் ஏற்றுக்கொண்டவற்றை சட்டமாகவும், திட்டமாகவும் நிறைவேற்றுகிறார்கள். எச்.ராஜாவுக்கு நாவடக்கம் தேவை. அது இல்லாததால்தான் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று நினைக்கிறேன்.
காங்கிரஸ் ஆட்சியின் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக 100 நாள் வேலைத்திட்டத்தைச் சொல்கிறீர்கள். ஆனால், “விவசாயத்தை வாழ வைக்கணும் என்றால், 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கணும். அது ஊருக்கு ஊர் நிறைய சோம்பேறிகளை உருவாக்கிவிட்டது” என்று சீமான் கூறியிருக்கிறாரே?
100 நாள் வேலைத்திட்டத்தின் அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல் அவர் அப்படிப் பேசியிருக்கிறார். கிராமப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்காகவும், அம்மக்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்வதற்காகவும் கொண்டுவரப்பட்ட திட்டம் அது. இந்தத் திட்டத்தின்கீழ் ஊதியம் பெறுபவர்கள் எல்லாம் பெரும்பாலும் வயதானவர்கள், கடின வேலை செய்ய இயலாதவர்கள், கர்ப்பிணிகள். இந்தத் திட்டத்தின்கீழ் வருடத்தில் 100 நாள்தான் வேலை தரப்படுகிறது. 365 நாளும் வேலை தராததன் நோக்கமே, இதனால் கொஞ்சம்கூட விவசாய வேலைகள் கெட்டுவிடக்கூடாது என்பதற்குத்தான்.
அணைகள் திறக்கப்பட்டு கால்வாய்களில் தண்ணீர் வரும் காலங்களில், பருவமழைக்காலங்களில், விவசாய வேலைகள் அதிகமிருக்கிற காலங்களில் 100 நாள் வேலைகள் செய்யக் கூடாது என்பது மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தரவு. எனவே, சீமான் இந்த விஷயத்தையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து 2 முறை பாஜக ஆட்சி செய்துவிட்டது. அதை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டிய காங்கிரஸ் சக எதிர்க்கட்சிகளான திரிணாமுல், ஆம் ஆத்மி போன்றவற்றுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறதே?
ஒரு பொதுநோக்கத்திற்காக எல்லோருடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் விருப்பம். எது எதில் உடன்பாடு காண முடியுமோ, அதில் மட்டும்தான் உடன்பாடு காண முடியும். கூட்டணி என்பதற்காக ஒரு கட்சியின் அனைத்து நிலைப்பாடுகளையும் இன்னொரு கட்சியும் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. தேர்தல் நிலைப்பாடு என்பது வேறு, ஒவ்வொரு பிரச்சினையிலும் எடுக்கிற நிலைப்பாடு என்பது வேறு. மக்கள் எங்களைத்தான் விரும்புகிறார்கள். எங்களைத்தான் ஏற்றுக்கொள்வார்கள்.
தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி நாங்கள்தான் என்று பாஜக சொல்லிக்கொள்கிறது. இங்கு காங்கிரஸின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?
எங்கள் கட்சிக்கு 8 எம்பி, 18 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். கடந்த காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், வளர்ச்சி எப்படியிருக்கிறது என்று தெரியும். ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் கணிசமான இடங்களில் வெற்றிபெற உழைத்துக்கொண்டிருக்கிறோம். பாஜகவின் பொய்யை எல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை!