தேர்தல் வரையில்தான் கூட்டணி. பிறகு ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகப் போராடுவதுதான் கம்யூனிஸ்ட்களின் பொதுவான குணம். திமுக ஆட்சி குறித்து கம்யூனிஸ்ட்களின் பார்வை எப்படியிருக்கிறது? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுடன் 'காமதேனு' இணையத்திற்காகப் பேசினோம்.
எப்படியிருக்கிறது திமுக ஆட்சி?
தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்ற நிலைமையே தொடரும் என்று பொதுவான கருத்துண்டு. இப்போது அப்படியில்லை. திமுக ஆட்சிக்கு வந்து இன்னும் 6 மாதம்கூட ஆகவில்லை. முதல்வரின் செயல்பாடும், அரசின் நடவடிக்கைகளும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. சாதாரண மக்கள் கூட பரவாயில்ல நல்லா ஆட்சி பண்றாங்க என்றுதான் சொல்கிறார்கள். குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு நகர்ப்பேருந்துகளில் இலவச பயணம், வேளாண்மைக்கு தனி பட்ஜெட், விவசாய கடன் ரத்து, ஊழல், முறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள், கரோனாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போன்றவை மக்களுக்குத் திருப்தி தந்திருக்கிறது. இதேபோல மீதியுள்ள காலமும் இருக்கணும் என்கிற எதிர்பார்ப்பும் பொதுமக்களுக்கு இருக்கிறது.
பொதுவாக அரசு ஊழியர்களின் நண்பன் என்று சொல்லப்படும் திமுகவின் செயல்பாடு, இம்முறை அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதே?
பஞ்சப்படியை ஏப்ரல் 2022-ல் இருந்துதான் அமலாக்குவோம் என்று இந்த நிதி நிலை அறிக்கையில் சொன்னது கடுமையான அதிருப்தியை அரசு ஊழியர்கள் மத்தியில் உருவாக்கியது உண்மை. நாங்கள் கூட இதனை மறுபரிசீலனை செய்யணும் என்று முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும்போது, மாநில அரசு ஊழியர்களுக்கும் அது கிடைப்பதுதான் நியாயம்.
ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகள் தள்ளிப்போய்விட்ட நிலையில், மேற்கொண்டு 8 மாதங்கள் தள்ளிப்போடுவது என்பது சரியானதல்ல என்று சொன்னோம். அதனை ஏற்று ஜனவரி முதலே அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். அரசு நிர்வாகத்தில் ஏராளமான ஊழியர்களை தொகுப்பூதியம், மதிப்பூதியத்தின் கீழ் வைத்திருக்கிறார்கள். கோவிட் காலத்தில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிய நர்சுகளும், மருத்துவர்களும் கூட சம்பளம் கேட்டுப் போராடுகிறார்கள். டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளும் நிலுவையில் இருக்கிறது. பள்ளிக்கூடங்களிலேயே ஆசிரியர்களுக்கு தொகுதிப்பூதியம் என்ற பெயரிலும், கல்லூரிகளில் கவுரவ விரிவரையாளர்கள் என்ற பெயரிலும் மிகக்குறைந்த ஊதியம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சம வேலைக்கு சம ஊதியம் என்பதுதானே சட்டம்? வறுமை மற்றும் மன உளைச்சலால் சில கவுரவ விரிவுரையாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூட செய்திகள் வருகின்றன. தனியார் துறைகளில் ஒப்பந்தப் பணியாளர் முறையையே ஒழிக்கக் கோருகிற காலத்தில், அவர்களுக்கு முன்னோடியாக, வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசே தன்னுடைய துறைகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்களை இப்படி வைத்திருப்பது ஏற்புடையதல்ல.
தூய்மைப்பணியாளர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில்தான் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை. காண்ட்ராக்ட் முறையை கைவிட்டுவிட்டு, அந்தப் பணத்தை நேரடியாக ஏன் அரசே ஊழியர்களுக்குச் சம்பளமாகத் தரக்கூடாது? இதுமாதிரி விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது என்பது உண்மைதான். தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால் கேரள அரசின் வருமானம் ரொம்பவும் குறைவு. ஆனாலும், தொழிலாளர்கள் விஷயத்தில் இன்னும் கொஞ்சம் சிறப்பாகவே அந்த அரசு செயல்படுகிறது. அதுபோல் செயல்பட வேண்டும் தமிழக அரசு என்று விரும்புகிறோம்.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் உள்ளாட்சிகளுக்கு மிகக்குறைவான அதிகாரமே தரப்பட்டிருக்கிறது. மத்திய அரசு கூடுதல் அதிகாரங்களை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிற திமுக அரசு, அதேபோல உள்ளாட்சிகளுக்கும் தனது அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவீர்களா?
73, 74-வது அரசியல் சட்டத் திருத்தமானது, பாராளுமன்றம், சட்டமன்றம் போல உள்ளாட்சிகளும் அதிகாரமிக்க மூன்றாவது அடுக்கு ஆட்சி முறை என்ற அடிப்படையில்தான் கொண்டுவரப்பட்டது. மக்களை அதிகாரப்படுத்துவதுதான் அதன் நோக்கமே. என்னதான் பாராளுமன்ற, சட்டமன்ற ஆட்சி முறை இங்கே இருந்தாலும், மக்களையும் அதிகாரப்படுத்த வேண்டும், அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்பதற்கே இந்த ஏற்பாடு. ஆனால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் பொதுவாக தமிழ்நாட்டில் உள்ளாட்சிகளுக்கு போதிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ, அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு செயல்படுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். உள்ளூர் மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வதற்கான ஏற்பாடு இங்கே முழுமை பெறவில்லை.
ஒவ்வொரு கிராமமும் தனக்கு வேண்டிய திட்டங்களை தானே தீட்டிக்கொள்வதற்குத்தான் கிராம சபை கூட்டம். ஆனால், அங்கேயும் அதிகாரிகள் ராஜ்யம்தான் நடக்கிறது. தமிழ்நாட்டில் எந்த ஆட்சி வந்தாலும் எந்த ஆட்சி போனாலும் அதிகாரிகளுடைய ஆதிக்கம்தான் அதிகமிருக்கிறதே தவிர, உள்ளாட்சிகளுக்கு அதிகாரமில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ஆட்சி முறையும்கூட அதிகாரிகளை மையப்படுத்தித்தான் இருக்கிறது. நீண்ட நெடுங்காலமாக நாம் அதிகாரத்தில் இருந்து மக்களை ரொம்பவே அந்நியப்படுத்தி வைத்துவிட்டோம். அதனால்தான் எது நடந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் அதுபற்றி கவலையேபடாமல் இருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக்கொன்றபோது கூட தமிழ்நாடு அமைதியாகத்தானே இருந்தது? இதுவே கேரளாவில் ஒரு சின்ன சம்பவம் என்றால் ஒட்டுமொத்த ஜனங்களும் திரண்டு விடுவார்கள். அங்கே அந்தளவிற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்தளவிற்கு அதிகாரத்தை பரவலாக்கி (டி சென்ட்ரலைஸ் செய்து) வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிகாரப்பரவல் என்பது கேள்விக்குரிய பிரச்சினையாகவே தொடர்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 எம்பி-க்கள், 2 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடு எப்படியிருக்கிறது?
எம்பி-க்களின் செயல்பாட்டை 6 மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் ஆய்வு செய்துகொண்டுதான் இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுப் பிரச்சினைகளை மட்டுமின்றி அகில இந்தியப் பிரச்சினைகளையும் எழுப்புவதில் எங்கள் உறுப்பினர்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவுக்கு இருக்கிறது. இப்போதுகூட வடகிழக்கு ரயில்வேயின் கோரக்பூர் தேர்வாணையத்தால், அங்குள்ள பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வேயில் கொண்டுவந்து பணியமர்த்தும் முயற்சி நடந்தது. எங்கள் எம்பி-யான சு.வெங்கடேசன் தான் அந்தப் பிரச்சினையை முதலில் எழுப்பினார். கட்சி சார்பில் நாங்களும் குரல் கொடுத்தோம். வேறு எந்தக் கட்சியுமே அதைப் பேசவில்லை. ஆனாலும், நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது.
இதேபோல, தமிழ்நாட்டு எம்பி ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்துக்கு மொழி பெயர்ப்பு இல்லாமல் இந்தியில் பதில் தருவது விதி மீறல் என்று வழக்குத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாதகமாக தீர்ப்பும் பெற்றிருக்கிறார் அவர். ஆக, எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளில் முழு வலுவுடன் பணியாற்றுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு 4 மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. 2 எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருப்பதால், சட்டமன்றத்தில் பேச அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆயினும், அவர்களும் இயன்றளவு சிறப்பாகவே பணியாற்றுகிறார்கள். தமிழகத்தில் இருக்கிற எம்பி, எம்எல்ஏ-க்களில் ஆக்கபூர்வமான முறையில் அதிகம் பணியாற்றுவது எங்கள் கட்சி எம்எல்ஏ-க்கள் தான் என்று பெருமிதத்துடன் சொல்ல முடியும்.
ஆர்எஸ்எஸ், இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுமே 1925-ல் தொடங்கப்பட்டதுதான். ஆனால், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவான பாஜக இன்று நாட்டையே ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியோ நலிந்து, சரிந்து கிடக்கிறதே... என்ன காரணம்?
ஆர்எஸ்எஸ்-ஐயும், கம்யூனிஸ்ட்டையும் ஒப்பிடக் கூடாது, ஒப்பிடவும் முடியாது. இந்திய மக்கள் மத்தியில் மத உணர்வை உசுப்பிவிட்டு, மத மோதலை ஏற்படுத்தி அதன் மூலம் செல்வாக்குத் தேடுகிற ஒரு அமைப்பாக ஆர்எஸ்எஸ் இருக்கிறது. இப்படி சாதி, மத, மொழி அடிப்படையில் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் செய்வது ரொம்பவே எளிது. ஒரு பிரிவினரை தூண்டிவிட்டால், இவர்களைக் காட்டி அவர்களும், அவர்களைக் காட்டி இவர்களும் அணி திரள்வார்கள். சமூகப் பதற்றம் உருவாகும். அதில் பெரும்பான்மையினர் பக்கம் நின்று வாக்குகளை அறுவடை செய்யலாம். இந்த முரண்பாடு மேலும் மேலும் கூர்மையடைந்து கொண்டே போகும். வாக்கு அறுவடையும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஆர்எஸ்எஸ்ஸும், பாஜகவும் இன்று பெற்றிருக்கிற செல்வாக்கு அப்படி வந்ததுதான்.
இந்த மாதிரியான குறுகிய, சாதி, மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் நடத்துகிற கட்சியல்ல கம்யூனிஸ்ட் கட்சிகள். எல்லாச் சாதிகளிலும், எல்லா மதங்களிலும் இருக்கிற உழைப்பாளி வர்க்கத்தை ஒன்றிணைக்கிற பெரும்பணியை நாங்கள் செய்கிறோம். இந்த நாட்டில் கார்ப்பரேட்கள், பெரும் முதலாளிகள், நிலப்பிரபுக்கள் சுரண்டிச் சேர்த்தச் சொத்துக்களை பறிமுதல் செய்து படிப்படியாக நாம் சோசலிஸத்தை நோக்கிப் போக வேண்டும் என்பது எங்கள் இலக்கு. எனவே, கார்ப்பரேட்களும், பெரும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் தங்களது பரம வைரியாக எங்களைப் பார்க்கிறார்கள்.
ஆனால், ஆர்எஸ்எஸ், பாஜக கூட்டம், பெரிய முதலாளிகள், கார்ப்பரேட்களைத் தூக்கிப்பிடிப்பதையே தங்கள் முதன்மை இலக்காக வைத்திருப்பதால், அவர்கள் இவர்களையும், இவர்கள் அவர்களையும் தாங்கிப் பிடிக்கிறார்கள். தங்களை எதிர்த்து ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் நடைபெறாமல், அவர்களைப் பிரித்தாளுகிற பாஜகவை கார்ப்பரேட்களுக்குப் பிடித்திருக்கிறது. நாங்கள் இப்படியான ஆளும் வர்க்கத்தை, முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டுத்தான் முன்னேற வேண்டியதிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதும், ஆர்எஸ்எஸ் வளர்வதும் ஒன்றல்ல. எனவே, இந்த ஒப்பீடும் சரியல்ல.
கண்ணகி - முருகேசன் வழக்கில் தொடக்க காலத்தில் இருந்தே குரல் கொடுத்தது கம்யூனிஸ்ட்கள்தான். ஆணவ கொலைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வருவோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துவீர்களா?
இந்தக் கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிற கட்சி என்ற அடிப்படையில், நிச்சயமாக தமிழக அரசை வலியுறுத்துவோம். இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கவும் ஆணவக் கொலைக்கெதிரான சட்டம் அவசியம். கண்ணகி முருகேசன் வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்திருக்கிறது. இவ்வளவு வருடங்கள் வழக்கு நடந்தால் எப்படி சம்பந்தப்பட்டவர்கள் சாட்சி சொல்ல வருவார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும். எனவே, இதுபோன்ற வழக்குகளை துரிதமாக விசாரித்து தீர்ப்புச் சொல்வதும் அவசியம்.
அதேநேரத்தில் நம் மக்கள் மத்தியில் இருக்கிற சாதிய மனோபாவம் ஒழியாதவரையில், எத்தனை சட்டங்கள் கொண்டுவந்தாலும் இதுபோன்ற குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும் என்ற யதார்த்தத்துக்கும் முகம் கொடுக்க வேண்டும். இதபோன்ற குற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கிற சாதிய மனோபாவம், சாதிய உணர்வு, சாதிய அணிச் சேர்க்கை போன்றவற்றை எதிர்த்து ஒரு பெரிய பிரச்சார இயக்கத்தை, மக்கள் மனதை வென்றெடுக்கக் கூடிய கலாச்சார பேரியக்கத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. என்ன தான் பெரியார், பாரதியார், இடதுசாரிகள் எல்லாம் சாதிய எதிர்ப்பு இயக்கத்தை நடத்தியிருந்தாலும் கூட அது இன்னமும் போதுமான அளவுக்கு வெற்றிபெறவில்லை. எனவே, சட்டமும், சமூக மாற்றமும் ஒரே நேரத்தில் வருவதற்கான முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும்.
தொடர்ந்து இருமுறை ஆட்சியைப் பிடித்துவிட்டது பாஜக. அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலாவது பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியும் என்று நம்புகிறீர்களா?
கட்டாயமாக 2024 தேர்தலுடன் பாஜகவை வீட்டுக்கு அனுப்புகிற அளவுக்கு ஒரு புதிய சூழல் இந்தியாவில் உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உருவான மாதிரி எதிர்க்கட்சிகள் எல்லாம் தங்களுக்குள் இருந்த முரண்பாடுகளை ஓரங்கட்டிவிட்டு ஓரணியில் திரண்டதைப் போன்ற சூழல் இந்திய அளவில் இன்னும் ஏற்படவில்லை என்றாலும்கூட, ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அக்கட்சி தோல்வியடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் கூட அரை ஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றிருக்கிறார்கள். புதுச்சேரியில் பல தில்லுமுல்லுகளைச் செய்துதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அடுத்து வரக்கூடிய 6 மாநிலத் தேர்தல்களிலும்கூட அவர்கள் வெற்றிபெறக்கூடிய சூழல் இல்லை. வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் அந்தளவிற்கு வீச்சாக இருக்கிறது. நாடு முழுவதும் மோடி அரசின் தோல்வி மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கரோனா காலத்தில் இந்த அரசின் மோசமான செயல்பாடு, தடுப்பூசியை இலவசமாக வழங்க மறுத்து நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு வழங்கியது, கார்ப்பரேட்களுக்கு பொதுச் சொத்துக்களை விற்பது, மக்கள் சொத்துக்களை பெரு முதலாளிகளுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்குவதாக அறிவித்திருப்பது, அதிகப்படியான விலை வாசி உயர்வு, பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு என்று எல்லாமே மிகப்பெரிய அளவுக்கு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, 2024 தேர்தலில் பாஜக வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்பதுதான் கள நிலவரம்.
எதிர்ப்பு வாக்குகள் சிதறி மீண்டும் பாஜகவே ஆட்சிக்கு வந்துவிடும் அபாயம் இருப்பதையும், அதைத் தடுக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய தேவை இருப்பதையும் கம்யூனிஸ்ட் கட்சி உணர்கிறதா?
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது அவசியம். நிச்சயமாக அந்த ஒருங்கிணைப்பு உருவாகும் என்று நம்புகிறேன். மக்கள் வெகுண்டெழுந்து புறப்படுகிறபோது, அரசியல் கட்சிகள் விலகி நிற்க முடியாது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவாவது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துதான் ஆவார்கள்.