விமான நிலையத்தில், தன்னை ஒதுக்கிவிட்டு ஆர்.வி சுவாமிநாதனை அன்னை இந்திரா சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்ததை தலைவர் சிதம்பரத்தால் ஏற்க முடியவில்லை. அப்போதிருந்த அவரது இளமைத் துடிப்பும் வேகமும், "என் குடும்ப கவுரவம் போய்விட்டது. இனிமேல் நான், இந்த மூவர்ணக் கொடியின்கீழ் நின்று பேசமாட்டேன்” என்று சிவகங்கை பயணியர் விடுதியில் வைத்து கோபமாக பேட்டியளிக்க வைத்தது. இப்படி ஆவேசமாகப் பேட்டியளித்துவிட்டு, நேராக சென்னைக்குச் சென்றுவிட்டார்.
சிதம்பரம் அந்தத் தேர்தல் களத்தில் இல்லாத போதும் சிவகங்கையில், பெரியவர் ஆர்.வி.சுவாமிநாதன் வென்று அன்னை இந்திரா காந்தி அமைச்சரவையில் வேளாண் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அதன் பிறகு, அரசியலில் ஏராளமான மாற்றங்கள். சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தார். அன்னை இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். பெரியவர் ஆர்.வி.எஸ். மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, திருச்சி வழியாக சிவகங்கைக்கு காரில் வந்தார் சிதம்பரம். கார் திருமயம் எல்லை வந்தபோது, உடனிருந்த இன்னொரு நண்பரிடம் சொன்னார் சிதம்பரம் - "இங்கே இருந்து என் தொகுதி துவங்குகிறது" என்று. அவ்வளவு அழுத்தமான நம்பிக்கை. அதுதான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு சென்றது.
1984-ல் ராஜீவ் காந்தி காங்கிரஸுக்குள் காலடி எடுத்து வைத்ததும் இந்தியா முழுவதும் கட்சிக்கு உற்சாகம் கொடுக்க, இளரத்தம் பாய்ச்சுவது என முடிவானது. அப்படித்தான் சிவகங்கையும் தலைவர் சிதம்பரம் வசமானது.
ஒல்லியான உருவம். நீண்ட கிருதா. சுண்டி இழுக்கும் வசீகரம். தூய மிடுக்கான கத்தி போன்ற கதராடை. நிமிர்ந்த நடை. நேர்கொண்ட பார்வை. தெளிவான சிந்தனை. துணிவான செயலாற்றல். தேர்ந்த நிர்வாகத் திறன். நேரம் தவறாமை. ஆர்ப்பாட்டம் இல்லாத எளிமை. எளியோருக்கும் பாமரருக்கும் புரியும் வண்ணம் பேசும் சொல்லாடல். கடும் சொல் தவிர்க்கும் பாங்கு என சிதம்பரத்துக்கே உரிய சிறப்பு குணாதிசயங்கள் அவரை, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் மூலை முடுக்குக்கெல்லாம் கொண்டு சென்றது. அதுதான், 68 சதவீதம் வாக்குகளுடன் திமுக வேட்பாளர் தா.கிருட்டிணனை எளிதில் வெல்ல சிதம்பரத்துக்கு வாகானது.
காங்கிரஸ் கட்சியில், முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக வருபவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும் வழக்கம் அப்போது இல்லை. ஆனால், வென்ற 10-வது மாதத்திலேயே சிதம்பரத்தின் திறமையைக் கண்ட தலைவர் ராஜிவ் காந்தி, மரபுகளை உடைத்து அவரை மத்திய அமைச்சராக்கினார்.
தலைவர் சிதம்பரத்துக்கு முதலில் ஜவுளித் துறை ஒதுக்கப்பட்டது. ஆனால், “எனது குடும்பத்தினர், உறவினர்கள் ஜவுளி ஆலைத் தொழிலில் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் நான் அதே துறைக்குப் பொறுப்பேற்றால் தேவையற்ற சங்கடங்கள் வரலாம்” எனச் சொல்லி, அதை ஏற்க மறுத்தார் சிதம்பரம். இதன் மூலம் டெல்லியின் கணிப்பில் மேலும் உயர்ந்தார். பின்னர், பணியாளர் நலன் மற்றும் மக்கள் குறைதீர்ப்பு துறை, உள்துறை இணை அமைச்சர் ஆனார்.
1989, 1991 தேர்தல்களிலும் சிவகங்கையில் சிதம்பரமே நின்று வெற்றி பெற்றார். 1991-ல் நரசிம்மராவ் அமைச்சரவையில் தனிப் பொறுப்புடன் வர்த்தக அமைச்சர் பொறுப்பேற்றார்.
1996-ல் காங்கிரஸ் பிளவுபட்டு தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானபோது, மூப்பனாரின் அடி தொட்டு அங்கே நடந்தார் சிதம்பரம். அந்தத் தேர்தலில் தமாகா - திமுக கூட்டணியில் வென்று மத்திய நிதி அமைச்சரானார். அமைச்சராக இவரை பார்த்தவர்கள் மிகவும் கண்டிப்பானவர். கொடுத்த நேரம் தாண்டி யாரையும் சந்திக்க மாட்டார். அப்பாயின்மென்ட் இல்லாமல் யாரையும் பார்க்கச் செல்ல மாட்டார். அதிகாரிகளிடம் தேவையான விஷயங்களை மட்டுமே பேசுவார். அதிகார எல்லைகளை கடந்து செல்லமாட்டார். நிர்வாகத்திறன் மிக்கவர். ஒரு கோப்பில் குறிப்பு எழுதும்முன், கோப்பில் உள்ள விஷயங்களை படித்து அறிந்து கொள்வதுடன் அது சார்ந்த மற்ற விஷயங்களையும் அறிந்தே முடிவெடுப்பார் என்று சொல்கிறார்கள். அதனாலே தான், இவரால் 9 முறை சிக்கலின்றி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடிந்தது.
பதவியில் இருந்த காலத்தில் மாணவர்கள் கல்விக் கடன், விவசாயக் கடன் ரத்து என அடிமட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார் சிதம்பரம். உலகப் பொருளாதாரமே தடுமாறிய போதும், அமெரிக்காவில் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்ட போதும் , வங்கிகள் திவாலான போதும் இந்தியப் பொருளாதாரம் நிலையாக நின்றது இவராலே என்பது சிவகங்கைக்கும் பெருமை.
ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் கூடிய இவரின் பாராளுமன்ற உரைகள் பிரசித்தி பெற்றவை. சக உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி எல்லோரும் உற்று கவனிக்கும் பேச்சு இவரது பேச்சு. அதுவே உலகெங்கும் கடந்த 30 ஆண்டுகளாக சிவகங்கைக்கான அங்கீகாரம்.
1998 மீண்டும் தமாகா வேட்பாளராக சிவகங்கையில் வெற்றி பெற்றார் சிதம்பரம். 1999-ல் தமாகா தனித்து விடப்பட்டதால், அந்தத் தேர்தலில் 1,27,528 வாக்குகள் மட்டுமே பெற்று காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சன நாச்சியப்பனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார் சிதம்பரம்.
மூப்பனாருடன் முரண்பட்டு காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை கண்ட சிதம்பரம், தேசிய அரசியலுக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்ததாலோ என்னவோ மீண்டும் காங்கிரஸுக்கே திரும்பினார். 2004, 2009 தேர்தல்களில் மீண்டும் சிவகங்கையில் களம்கண்டார்; வென்றார். அப்போது நிதி அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் செயலாற்றினார்.
இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன் திருப்பதியில் தரிசனத்துக்காக வரிசையில் நிற்கிறேன். எனக்கு அடுத்து இருந்த மகாராஷ்டிரத்துக்காரர் என்னை, “எந்த ஊர்?” என்கிறார். நான் சிவகங்கை மாவட்டம். ராமேஸ்வரத்துக்கு வடக்கே” என்று விளக்கம் சொன்னேன். அதற்கு அவர், “சிதம்பரம் ஊர் என்று சொல்லுங்கள்” என்றார்.
ஆக, ‘சிதம்பரம் என்றால் சிவகங்கை. சிவகங்கை என்றால் சிதம்பரம்’ என்று தம் திறமையால் பரிணமித்தார். ஆனாலும் சென்னையிலிருந்த வழக்கறிஞரை இந்திய நாட்டுக்கு அறிமுகப்படுத்தி அடையாளப்படுத்தியது தலைவர் ராஜிவ் காந்தி. தொடர்ந்து வாய்ப்புகள் தந்து மெருகேற்றியது காங்கிரஸ் கட்சியும் அன்னை சோனியா காந்தியும்.
சிதம்பரம் சிவகங்கை அரசியலுக்கு வருவதற்கு முன்பு, 1977-ல் காரைக்குடியிலிருந்து சென்னை சென்று அவரை சிவகங்கைக்கு வரச்சொல்லி வலியுறுத்தியது இரண்டே இரண்டு பேர்.
(அதில் ஒருவரைப் பற்றி அடுத்து பார்ப்போம்)
சிவகங்கையும் சிதம்பரமும்... 1