தஞ்சாவூர் பொதுமக்கள் யாரைக் கேட்டாலும் ’’இப்படி அதிரடியான, நேர்மையான ஒருத்தரைத்தான் ரொம்பநாளா எதிர்பார்த்திருந்தோம்” என்கிறார்கள். தஞ்சாவூர் மாநகராட்சி இடங்களில் இதற்கு முன்பு கடைகள் ஏலம் எடுத்திருந்தவர்களோ, ’’அவர் ரொம்ப, ரொம்ப மோசமானவர், எல்லாத்தையும் அவர் இஷ்டத்துக்கு ஏற்றிவிட்டுட்டார்” என்கிறார்கள். தஞ்சையின் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களைக் கேட்டால், “ அவரை மாதிரி திமிர்பிடித்தவரை பார்க்கவே முடியாது, அவரை உடனடியாக தஞ்சாவூரில் இருந்து மாற்ற வேண்டும்” என்று கொதிக்கிறார்கள்.
அதேநேரத்தில் மாநகராட்சி ஊழியர்களோ, ’’எங்களின் வாழ்வாதாரத்தை காக்க வந்தவர் அவர்” என்கிறார்கள்.
இத்தனை விமர்சனங்களுக்கும் உரியவர் தஞ்சாவூர் மாநகராட்சியின் தற்போதைய ஆணையர் க.சரவணக்குமார். இதற்குமுன் நாகர்கோவிலில் ஆணையராக பணியாற்றியவர், அங்கு மாநகராட்சிக்கே தெரியாமல் இருந்த மாநகராட்சி இடங்களை கண்டுபிடித்து மீட்டார். பெரும்புள்ளிகளிடம் ஆக்கிரமிப்பில் இருந்த இடங்களையும் மீட்டார். மிகக்குறைந்த வாடகைக்கு எடுத்துப் பலமடங்கு உள்வாடகைக்கு விட்டு லாபம் பார்த்தவர்களிடமிருந்து, கடைகளை மீட்டெடுத்து வாடகைப் பணம் முழுவதுமாக நாகர்கோவில் மாநகராட்சிக்கே கிடைக்கும்படி செய்தார்.
அங்கும் பலவித அரசியல் அழுத்தங்கள், எல்லாவற்றையும் சமாளித்து மாகராட்சியை சீரமைத்தவரை, ஸ்மார் சிட்டி திட்டப்பணிகள் நடைபெறும் தஞ்சாவூரை புனரமைக்க அனுப்பியிருக்கிறது தமிழக அரசு. இவரது பணிமாறுதலை வெடிவெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள் நாகர்கோவிலிலுள்ள அதிமுக, திமுக பிரமுகர்கள்.
தஞ்சாவூருக்கு வந்தவேகத்திலேயே தனது வழக்கமான பணிகளை கையிலெடுத்து, தஞ்சையின் அரசியல்வாதிகளையும், ஆக்கிரமிப்பாளர்களையும் கிடுகிடுக்க வைத்துவிட்டார் சரவணக்குமார். பழைய, புதிய பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் பலமடங்கு வாடகை உயர்த்தி ஏலம் விடப்பட்டிருக்கின்றன. தஞ்சை வீதிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. மிக முக்கியமாக, ரூ.200 கோடி மதிப்புள்ள மாநகராட்சி சொத்துகள் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நீதிமன்றம்வரை சென்றும் போராடி, மிகக்குறுகிய காலத்தில் செய்து முடித்திருக்கிறார் சரவணக்குமார்.
”ஜூபிடர் தியேட்டர், யூனியன் கிளப், காவேரி லாட்ஜ் போன்றவையெல்லாம் யார்யார் வசம் இருந்ததோ, அவரவர்களது பூர்விக சொத்துகள் என்றுதான் நினைத்திருந்தோம். அவை மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் என்பது தஞ்சாவூரில் உள்ள வயதான பெரியவர்களுக்குக்கூட தெரியவில்லை. ஆனால், அவையெல்லாம் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் என்பதைக் கண்டுபிடித்து அவற்றை அதிரடியாக மீட்டும் எடுத்திருக்கிறார் ஆணையர். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை வரலாற்றில் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தஞ்சாவூரை மீட்ட சோழனாக சரவணக்குமாரை இப்போது நேரிலேயே பார்க்கிறோம்” என்கிறார் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஜீவக்குமார்.
மாநகராட்சி ஊழியர்கள், “தஞ்சை மாநகராட்சி என்றாலே, ஊழல் மாநகராட்சி என்ற நிலைதான் இதுவரை இருந்து வந்தது. தற்போது இந்த ஆணையர் வந்த பிறகுதான் அந்தநிலை மாறியிருக்கிறது. கடும் நிதிநெருக்கடியில் இருப்பதால், இங்கு வேலை பார்க்கும் பலருக்கும் பல மாதங்களாக சம்பளம் கிடையாது. ஓய்வுபெற்ற ஊழியர்கள் பலருக்கும் இதுவரை பணப்பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை. இப்போதுதான் மாநகராட்சிக்கு பணவரவுகள் தாராளமாக வர ஆரம்பித்திருக்கின்றன. அதனால் ஊழியர்களின் நலன்கள் இனி பாதுகாக்கப்படும்” என்று மகிழ்கிறார்கள்.
இவரது வெளிப்படையான நேரடி ஏலத்தினால், கடந்த ஆண்டுகளில் நிர்ணயம் செய்யப்பட்ட கடை வாடகையை விட 10 மடங்கு கூடுதலான தொகை மாநகராட்சிக்கு கிடைத்திருக்கிறது. இதனால் ஆக்கிரமித்து கடைகளை வைத்திருந்த வியாபாரிகள், ஆணையரை உடனடியாக தஞ்சாவூரிலிருந்து மாற்ற வேண்டும் என வலியுறுத்தி நகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டினர். அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றினார்கள் பொதுமக்கள். தஞ்சாவூரில் ரூ.200 கோடி சொத்துகளை மீட்ட ஆணையரின் சேவையைப் பாராட்டுகிறோம் என சுவரொட்டிகள் பளீரிட்டன.
சர்ச்சைகள், விமர்சனங்கள், நடவடிக்கைகள் குறித்து மாகராட்சி அதிகாரிகளிடம் பேசினோம்.
“தஞ்சாவூர் யூனியன் கிளப், காவேரி லாட்ஜ், ஜூபிடர் தியேட்டர் ஆகியவை, அவற்றை வைத்திருந்தவர்களிடமிருந்து சட்டப்படி மீட்கப்பட்டுள்ளன. இவை ஒப்பந்த காலம் முடிந்தும், முறையான ஒப்பந்த ஆவணங்கள் இல்லாமலும் இருந்தன. காவேரி லாட்ஜ் இடத்திலிருந்து மாநகராட்சிக்கு வாடகையாக வருடத்துக்கு வெறும் ரூ.460 மட்டுமே கட்டி இருக்கிறார்கள். அதனுடைய ஒப்பந்தகாலம் 99 வருடம் முடிந்துவிட்டது. அதனால் சட்ட விதிகளின்படி அந்த இடம் மீட்கப்பட்டுள்ளது. யூனியன் கிளப்பில் எவ்வித ஆவணங்களூம் கிடையாது. ஆனாலும் அவர்களே வைத்துக் கொண்டிருந்தார்கள். மாநகராட்சி ஆட்கள் போய்க் கேட்டாலும், ‘எதுவும் டாக்குமென்ட் இல்லை, உங்களிடம் இருந்தால் எடுத்து வாருங்கள்’ என்பார்கள். தற்போது அதையும் மீட்டிருக்கிறோம். அதேபோல, ஜூபிடர் தியேட்டரும் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது.
திருவையாறு பேருந்து நிலையம் பகுதியில் கடைகளை வைத்திருந்தவர்கள், வெகு ஆண்டுகளாக அவர்களே வைத்திருந்தார்கள். நகராட்சியில் அனுமதி அளித்ததாகக் கூறி இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார்கள். அதையும் மீட்டிருக்கிறோம்.
தற்போது சுதர்சன சபாவை மீட்டெடுக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த இடம் சுதர்சன சபாவுக்கு நாடக வளர்ச்சிக்காக கொடுக்கப்பட்டது. ஆனால், அதில் நாடக வளர்ச்சிக்காக எதுவுமே நடைபெறவில்லை. தங்கமுத்து நாட்டார் உள்வாடகைக்கு வைத்திருந்தார். அவர் இன்னொருத்தருக்கு உள்வாடகைக்கு கொடுத்திருக்கிறார். 1970-ல் தேவர் ஹோட்டல்ஸ் காரர்களுக்கு கைமாற்றி விட்டிருக்கிறார்கள். அங்கு பேக்கரி, டாஸ்மாக் பார், மொபைல் கடை ஆகியவை அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளன. அங்கு கடை நடத்துகிறவர்கள் தினமும் ரூ.15,000 வாடகை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், மாநகராட்சிக்கு வருடத்துக்கு ஆறாயிரம் ரூபாய் மட்டுமே அங்கிருந்து வருகிறது. அதிலும் 20 கோடி ரூபாய் பாக்கியாக அவர்களிடமிருந்து வரவேண்டியிருக்கிறது.
இந்த சுதர்சன சபாவில் தான் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு 1946-ல் அறிஞர் பட்டம் கொடுக்கப்பட்டது. பாவேந்தர் பாரதிதாசன் அந்தப் பட்டத்தை அண்ணாவுக்கு வழங்கினார். இதே ஆண்டில்தான், கொடிமரத்து மூலையில் இருந்த கிருஷ்ணநாடக சபாவில் கருணாநிதி அவர்கள் ‘கலைஞர் கருணாநிதி’ என்று முதன் முதலாக அழைக்கப்பட்டார். அப்படி அழைத்தவர் டி.கே.ராமசாமி. அந்த இடத்தில்தான் கிருஷ்ணன் தியேட்டர் வந்தது. அந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. 1972-ல் தஞ்சாவூருக்கு வந்த தந்தை பெரியார் ஒருநாள் முழுவதும் அங்கு தங்கியிருந்தார்.
அண்ணாவுக்கும் கலைஞருக்கும் பட்டம் கொடுக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த இடங்களும் மாநகராட்சி வசமாகப் போகிறது” என்றார்கள் அதிகாரிகள்.
“சில விவகாரங்களுக்காக நீதிமன்றத்துக்கும் செல்ல வேண்டியிருந்தது போல...” என்று ஆணையர் சரவணக்குமாரிடம் கேட்டதற்கு,
“ஆமாம், செல்லவேண்டியிருந்தது. ஆனால், அதற்கு பலமான சட்ட உதவி கிடைத்தது. மதுரையிலிருந்து ஹைகோர்ட் வழக்கறிஞர்கள் திலீப்குமார், ஆதிமுலம்பாண்டி ஆகியோரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் சமூக அக்கறையோடு நீதிமன்றத்தில் எங்களுக்காக ஆஜரானார்கள். அவர்களின் வாதத்திறமையால், எதிர்பார்ட்டியினர் ஒரு கேஸை அவர்களே வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். மீதமுள்ளதும் நல்லபடியாக முடியும்” என்றார் ஆணையர்.
“பல மடங்கு வாடகை ஏற்றிவிட்டீர்கள், அதனால் சிறு தொழில் முனைவோர் யாரும் கடைகளை வாடகைக்கு எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார்களே?” என்று நாம் கேட்டதற்கு,
“அப்படியெல்லாம் கிடையாது. செல்வாக்குள்ள சிலர் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி கடைகளை ஏலம் எடுத்திருந்தார்கள். அதைப் பலமடங்கு உயர்த்தி உள்வாடகைக்கு விட்டிருந்தார்கள். தற்போது அப்படியில்லாமல், உள்வாடகைக்கு இருந்தவர்களே நேரடியாக வந்து கடைகளை ஏலம் எடுத்திருக்கிறார்கள். கமிஷ்னர் வாடகையை ஏற்றிவிட்டார் என்றால், நானா அவர்களிடம் போய் அதிக வாடகைக்கு கேட்கச் சொன்னேன். அவர்கள் உள்வாடகைக்கு இருக்கும்போது ஒருநாளைக்கு இரண்டாயிரம், மூன்றாயிரம் என்று கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தற்போது அந்த அளவுக்கான தொகையை மாநகராட்சியிடம் நேரடியாகக் கட்டி கடையை ஏலம் எடுக்கிறார்கள். பணம் தனியாருக்கு போகாமல் மாநகராட்சிக்கு கிடைக்கிறது” என்றார்.
“மிக அதிகபட்சமான வாடகைக்கு கடைகள் போயிருக்கிறதாமே?” என்ற கேள்விக்கும் பதில் சொன்ன சரவணக்குமார், “புதிய பேருந்து நிலையத்தில் இருந்த அபிராமி ஹோட்டல் மாத வாடகையாக 30 ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தற்போது அது 6,60,000-க்கு ஏலம் போயிருக்கிறது.
திருவையாறு பேருந்து நிலையமும், தஞ்சை பேருந்து நிலையமும் சேர்ந்து பழைய கடைகள் இருக்கும்போது 52 லட்சம் வருவாய் கிடைத்துவந்தது. தற்போது அங்கு புதிய கடைகள் கட்டப்பட்டு ஏலம் விட்டிருக்கிறோம். அதிலிருந்து 6 கோடி ரூபாய் வருட வருமானம் ஆகியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவர்களிடம் பெற்ற அட்வான்ஸ் தொகையாக மட்டுமே 6 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. அது நிரந்தர வைப்புத்தொகையாக வைக்கப்பட்டிருக்கிறது. இதில் நாங்கள் எதுவும் செய்யவில்லை. போட்டியின் அடிப்படையில் அவ்வளவு உயர்ந்திருக்கிறது” என்றார்.
“சரபோஜி மார்க்கெட் பிரச்சினையில் யாருமே கடைகளை எடுக்க முன்வரவில்லையாமே?” என்றதற்கு,
“அது ஒன்றுமில்லை. சிண்டிகேட் போட்டு டெண்டர் போடவேண்டாம் என்று சிலர் தடுத்திருக்கிறார்கள். ஆனால், வியாபாரிகள் டெண்டரில் கலந்துகொள்ளாவிட்டாலும் தற்போது நேரடியாக வந்து கடைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான கடைகள் விடப்பட்டுவிட்டன.
அதுமட்டுமில்லாமல், புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வெகுநாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் கடைகளையும் திறக்க ஏற்பாடு செய்துவிட்டோம். அங்கும் சிலர் அக்கடைகளை தாங்கள் எடுக்கவேண்டும் என்பதால் வாடகைக்கு விடாமல் தடுத்து வைத்திருந்தார்கள். அதற்கான தடைகளையும் உடைத்தாகிவிட்டது. அதனால் அந்தக் கடைகளை தற்போது இந்திய மருத்துவக் கழகம் சார்பில் வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். அவர்கள் அங்கு மருத்துவமனை, மருந்தகங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றை அமைக்கப் போகிறார்கள்” என்றார் ஆணையர்.
“இன்னும் என்ன திட்டம் பாக்கி இருக்கிறது?” என்று அவரைக் கேட்டபோது,
“காமராஜ் மார்க்கெட் பாக்கியிருக்கிறது. அதிலுள்ள கடைகளையும் ஏலம் விட வேண்டும். அதற்கடுத்தும் பணிகள் நிறைய இருக்கின்றன. எங்கள் கடன் பணி செய்து கிடப்பதே” என்றார்.
இறுதியாக, “ஆளும்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் நீலமேகம் உங்கள் மேல் கோபமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?” என்று கேட்டதற்கு,
“அது எனக்கு தெரியாது. ஆனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சிலர் சொல்வதால், ஒரு மக்கள் பிரதிநிதியாக அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார். அதை எங்கள் பணிக்கு இடைஞ்சல் என்றோ, கோபமாக இருக்கிறார் என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. அதேநேரத்தில் நாங்கள் எல்லாவற்றையும் சட்டபூர்வமாகவும், மாநகரின் வளர்ச்சிக்காகவும்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அனைவருமே புரிந்து கொண்டிருக்கிறார்கள்” என்று முடித்துக் கொண்டார் ஆணையர் சரவணக்குமார்
ஊருக்கு ஊர் இது மாதிரியான அதிகாரிகள் உளசுத்தியோடு தங்கள் கடமையை ஆற்றக் கிளம்பிவிட்டால், மக்கள் ஏன் அரசைக் குறைசொல்லப் போகிறார்கள்?