திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் பாலாற்றில் திறந்து விடப்படுகிறது. அதனால், மழைநீர் நுரையுடன் பாலாற்றில் ஓடுகிறது. இதன்காரணமாக பாலாறு மாசடைவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருவதாலும், தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் பெய்து வரும் கனமழையால் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதியில் உள்ள கிளை பாலாற்று பகுதியில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி ஆம்பூரில் உள்ள ஒரு சில தோல் தொழிற்சாலை நிர்வா கங்கள், ரசாயனம் கலந்த தோல் கழிவுநீரை கிளை பாலாற்றில் திறந்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றின் தரை பாலத்தின் கீழ் வெள்ளை நிறத்தில் நுரையுடன் கூடிய மழைநீர் பெருக்கெடுத்து நேற்று ஓடியது.
தோல் கழிவுநீர் பாலாற்றில் திறந்து விடுவதால் இவ்வாறு நுரையுடன் மழைநீர் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடுவதாக பொதுமக்களும், விவசாயிகளும் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ‘‘வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான தோல் தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து தோல் கழிவுநீர் இரவு நேரங்களிலும், மழைக்காலங்களில் பகிரங்கமாக பாலாற்றில் திறந்து விடப்படுகின்றன. பாலாற்று பகுதியை ஒட்டி உள்ள தோல் தொழிற்சாலைகள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றன.
இதையெல்லாம் ஆய்வு செய்து, பாலாற்றை பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட சுற்றுச் சூழல் அலுவலர்கள், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் என யாரும் கண்டும், காணாமல் இருப்பதால் வரலாற்று சிறப்பு மிக்க பாலாறு படிப்படியாக பாழாகி வருகிறது.
எனவே, பாலாற்றில் கழிவுநீரை கலக்கும் தனியார் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றை பாதுகாக்க அரசு தனது கடமையை செய்ய வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பாலாற்றில் நுரையுடன் கூடிய தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக வாட்ஸ்-அப்பில் வந்த தகவலை பார்த்தோம். இது தொடர்பாக ஆம்பூரில் ஆய்வு நடத்த சுற்றுச்சூழல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோல் கழிவுநீர் பாலாற்றில் கலந்திருப்பது உண்மை என தெரியவந்தால் சம்பந்தப்பட்ட தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அங்கு உற்பத்தி நிறுத்தப்படுவதுடன், தொழிற்சாலையை மூடி ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நுரை கலந்த தண்ணீரை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்தவுடன் உரிய விசாரணை நடத்தப்படும்’’ என்றனர்.