கடந்த சனிக்கிழமை (செப். 25) தேவகோட்டையில் காங்கிரஸ் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் கலந்துகொண்ட கட்சிக் கூட்டத்தில் அடிதடி. 2 பேருக்கு மண்டை உடைந்தது என்று வந்த செய்தியை என்னால் எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை.
சிதம்பர ரகசியம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அன்புத் தலைவர் ப.சிதம்பரத்தின் அரசியல் பூமி என்பதால், சிவகங்கையும் ரகசியம் நிறைந்ததாகப் போனது. அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தல்களில் முட்டல் மோதல் பாதிப்புகள் இழப்புகள் தவிப்புகள் இயல்பு. ஆனால், சிவகங்கையின் துரதிருஷ்டம் அந்த அரசியல் சதுரங்கத்தில் பாதிக்கப்பட்டவர்களே அதிகம்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய அரசின் நீதிமன்றத்தை எரித்து அங்கிருந்து கிளம்பி திருவாடானை சிறைச்சாலையைத் தகர்த்தெறிந்து சின்ன அண்ணாமலையை மீட்டதும், அதைத் தொடர்ந்து ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகு மிகப் பெரிய துப்பாக்கிச் சூடு நடைபெற்றதும் ஜமீன் பூமியாம் தேவகோட்டையில் தான்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மட்டுமல்ல... காங்கிரஸ் பேரியக்க வரலாற்றிலும் மறக்க முடியாத, மறுக்க முடியாத இடம் சிவகங்கை மாவட்டத்துக்கும் அதன் அங்கமான தேவகோட்டைக்கும் உண்டு. எனது கணிப்பு சரியாக இருக்குமானால், இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 3 முறை தவிர எல்லா தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை சட்டமன்றத்துக்கும் ஒருமுறை தவிர எல்லா தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை நாடாளுமன்றத்துக்கும் அனுப்பிய ஒரே ஊர் இந்தியாவிலேயே தேவகோட்டை நகரமாகத்தான் இருக்கும்.
அப்படிப்பட்ட காங்கிரஸ் களமான தேவகோட்டையில் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவங்களை சாதாரணமாக விட்டுவிட முடியாது. பதவிப் போட்டி, வாதப் பிரதிவாதங்கள் என்று வந்தால் காங்கிரஸ் என்றால் சேர் வீச்சு, திராவிட கட்சிகள் என்றால் வெட்டுக்குத்து என்று அரசியல் தரமிழந்தே போயிருக்கிறது.
ஆனால், சிவகங்கை மக்களைவை உறுப்பினராக தனது 25 ஆண்டு கால பயணத்தில் 'பட்டுப் போல்' தேவகோட்டைக்கு வந்த சிதம்பரம் 'பூ' போல நிகழ்ச்சிகளை முடித்துவிட்டுப் போயே பழகியிருக்கிறார். இப்போது அந்த நிலை போய் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களை தேவகோட்டை காங்கிரஸ் நிர்வாகிகள் சட்டையைப் பிடிக்காத குறையாக நிறுத்தி கேள்விக் கணைகளால் துளைத்திருக் கிறார்கள். அதன் பின்னணியிலேயே அங்கே கலவரம்.
தமது அரசியல் வாழ்வில் மக்களின் எல்லா தேவைகளையும் ஆசைகளையும் மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக நிறைவேற்றிவிட முடியாது. ஆனால், அடிப்படை வசதிகளை, தேவைகளை நிறைவேற்ற வேண்டியது அவசியம்; கட்டாயம்.
தேவகோட்டை சம்பவம் தங்களது அரசியல் வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தைத் தந்துவிட்டது என மக்கள் பிரதிநிதிகள் புலம்பிச் சென்றதாக தொண்டர்கள் சொல்கிறார்கள். “இந்த மோதல் எல்லாம் கட்சி இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கான அடையாளம்” என இளைய நிலா கார்த்தி சிதம்பரம் சொல்லி இருக்கிறார்.
அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு உயிரோட்டத்தையும் பதவிப் போட்டியையும் உற்றுக் கவனித்த போது, சலசலப்புக்கு காரணம் என இன்னும் பல செய்திகள் தெரியவருகிறது.
அரசியலில் ஏற்றமிறக்கம் இருக்கும். ஆனால், சிவகங்கை காங்கிரஸில் ஒரு பகுதியில் ஏற்பட்ட ஏற்றம் பல அரசியல் குடும்பங்களைக் காணாமலே செய்துவிட்டது பெருஞ்சோகம். காங்கிரஸில் மட்டும் அல்ல... இங்கே எந்த அரசியல் இயக்கத்திலும் ஒரு மிகப்பெரிய அரசியல் ஆளுமை இல்லாமல் போனதும் இதற்கு இன்னொரு காரணம். சிவகங்கை காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி காய்நகர்த்தல்களில் எண்ணற்ற தியாகங்கள் மறக்கப்பட்டுள்ளன. திறமைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. உழைப்பு மறைக்கப்பட்டுள்ளது; உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில், சிவகங்கையில் ஒரு ஒன்றியத்தை முழுமையாக தங்களது ஆளுகைக்குள் வைத்திருந்த காங்கிரஸ் குடும்பங்கள் அனைத்து ஒன்றியங்களிலும் இருந்தார்கள். ஆனால், அரசியல் ஆளுமைகளாய், சட்டப்பேரவை, பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்திருக்க வேண்டிய அவர்களில் பலர் அரசியல் முகவரி இழந்து போனார்கள். அதுதானே அரசியல்.
பொதுவாகவே காங்கிரஸ் அரசியலில் டெல்லியிலே நேரடியாக தொடர்பு உள்ளவர்கள் தான் சாதிக்க முடியும். உதாரணம், 1999 பாராளுமன்ற தேர்தலில் அன்றைய அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி எம்.பி சீட் கேட்கிறார். அவருக்குக் கிடைக்கவில்லை. கேரளாவில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட கருணாகரன் ஆதரவுடன் சீட் வாங்குகிறார்.
அப்படி சிவகங்கையில் டெல்லி தொடர்பு உள்ள ஒரு குடும்பமும், அரசியலைத் தாண்டி அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு உள்ள இன்னொரு குடும்பமும் தாக்குப்பிடித்து நிற்கிறது. அப்படியானால் மற்றவர்கள் நிலை என்ன? அதை பிறகு பார்ப்போம்.
தமது பகுதியையும் வளம்பெறச் செய்து, தானும் வளர்ந்து, மக்களையும் வளமாக வாழவைப்பது தான் ஆக்கபூர்வமான அரசியலாக இருக்க முடியும். சக போட்டியாளர்களை சதுரங்கம் போல காய் நகர்த்தல்களில் வெளியேற்றுவது இன்னொருவிதமான அரசியல்.
1984-ல் தனது முதல் பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் ப.சிதம்பரம் வாங்கியது 68 சதவீத வாக்குகள். அதன் பிறகு 1991-ல் ராஜீவ் காந்தி மறைவின் போதும், 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய போதும் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய ஆதரவு அலை வீசியது. அப்போதும் கூட மீண்டும் அந்த 68 சதவீத வாக்குகளை சிதம்பரத்தால் தொடமுடியவில்லை.
காரணம், 1984-ல் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற காத்திருந்த 11 ஒன்றியப் பெருந்தலைவர் வேட்பாளர்கள் கட்சியில் இருந்தார்கள். 1984 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு நேரடியாக மக்களிடம் வாக்குகள் பெற்று வெற்றியும் பெற்றார்கள்.
அப்போது களத்தில் இருந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெரியவர் உ.சுப்பிரமணியன். சிங்கம்புணரியில் அருணகிரி, இளையான்குடியில் பழனிச்சாமி, மானாமதுரையில் சுதந்திரபாண்டியன், சிவகங்கையில் சுதர்சன நாச்சியப்பன், கல்லலில் கருப்பையா, கண்ணங்குடியில் கரி.ராமசாமி, திருப்புவனத்தில் பாலகுரு சேர்வை, சாக்கோட்டையில் சொக்கலிங்கம் அம்பலம் போன்ற சொந்த செல்வாக்கு கொண்ட காங்கிரஸாரை இன்றைக்கு தேட வேண்டியுள்ளது.
ஆக, ஒன்றியப் பெருந்தலைவர்களான உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் போனது இழந்த செல்வாக்கை பெறமுடியாததற்கு முதல் காரணம்.
இல்லாமல் போனது ஏன் ?
1967-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கான புதிய வரவுகள் - இளைஞர்கள் முறையாக சேர்க்கப்படவில்லை. திராவிடக் கட்சிகளில் நேரு, காந்தி, காமராஜ் என்று பெயருடையவர்கள் நிறையப் பேர். அவர்களுடைய அப்பா யார் என விசாரித்தால் அவர் காங்கிரஸ் கட்சியின் ஊராட்சி மன்றத் தலைவராகவோ ஒன்றியப் பெருந்தலைவராகவோ இருந்திருப்பார். ஆக காங்கிரஸ், தக்க வைத்திருக்க வேண்டிய மக்கள் செல்வாக்குபெற்ற மனிதர்களை ஏதோ ஒரு காரணத்தால் இழந்திருக்கிறது; இன்னும் இழந்து கொண்டே வருகிறது.
அதற்கு அடுத்த தலைமுறை ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் நோக்கி சென்றார்கள். விஜயகாந்தின் அப்பா அழகர்சாமியே மதுரை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியால் இளைஞர்களை ஏன் ஈர்க்க முடியவில்லை?
அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியால் எந்தப் பதவியும் தர முடியவில்லை.
நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்காவது உள்ளாட்சி தேர்தலில் செய்திருந்தால் அந்த பதவிகள் மூலம் இளைஞர்கள் காங்கிரஸுக்கு வந்திருப்பார்கள். அது நடக்காமல் போனதும் காங்கிரஸின் துரதிருஷ்டம் தானே!
இனி முழுமையாக சிதம்பரத்தின் சிவகங்கையை பேசுவோம்...
1980-ம் வருடம் அன்னை இந்திரா காந்தி தமிழகம் வருகிறார். நேரு குடும்பத்திற்கு மிக நெருக்கமானவரும் அப்போது மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தவருமான பெரியவர் ஆர்.வி சுவாமிநாதனும் , இளைஞரான ப.சிதம்பரமும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கிறார்கள். அன்றைய மாவட்ட காங்கிரஸ் தலைவர் உ.சுப்பிரமணியமும் அன்றைய திருவாடானை சட்டமன்ற உறுப்பினரான இராம.கரியமாணிக்கம் அம்பலமும் ப.சிதம்பரத்துக்காக அன்னை இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசுகிறார்கள்.
“ப.சிதம்பரம் இளைஞர், சட்டம் படித்தவர், செட்டி நாட்டு அரச குடும்பத்தின் பேரன்” என்றெல்லாம் அன்னையிடம் எடுத்துச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார்கள். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அன்னை இந்திரா, “ஆர்.வி.எஸ். என்னைவிட கட்சியில் சீனியர். அவரை விட முடியாதே” என்கிறார்.
மீண்டும் அவர் டெல்லி திரும்ப விமான நிலையம் வந்தபோது சிதம்பரத்தையும் உடன் அழைத்துச் சென்று அவரைச் சந்திக்கிறார் உ.சுப்பிரமணியம். “பார்க்கலாம்” என சொல்லிவிட்டு நகர்கிறார் இந்திரா காந்தி. “சீட் இல்லை என்றால் கட்சியிலிருந்து ராஜினாமா செய்வேன்” என்கிறார் சிதம்பரம்.
இதைக் கேட்டுக் கொண்டே நகர்ந்த அன்னை இந்திரா காந்தி கைதட்டி, " கூப்பிடுங்கள் பத்திரிகையாளர்களை " என்கிறார். ஓடிவந்த பத்திரிகையாளர்களிடம், “ இந்தியா முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், சிவகங்கைக்கு நான் இப்போதே வேட்பாளரை அறிவிக்கிறேன். அவர் ஆர்.வி.சுவாமிநாதன்”.
சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தார் இந்திரா காந்தி.
(அப்புறம் என்ன நடந்தது?)