உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமா அரசு?


காய்கறிகளை ஆய்வு செய்யும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்

சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய செய்தி அது. சென்னை, பெசன்ட் நகர் ஓடைக்குப்பத்தைச் சேர்ந்த சதீஷ்-காயத்திரி தம்பதியின் 13 வயது மகள் தரணி, காலாவதியான 10 ரூபாய் குளிர்பானத்தைக் குடித்ததால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் குலைநடுங்க வைத்தது. ஆரணியில் தனியார் உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அதில் ஒரு சிறுமி உயிரிழந்தார். இப்படி கோவை, சென்னை என பல ஊர்களிலும் உணவகத்தில் சாப்பிடுகிறவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

இப்படிப்பட்ட செய்திகளை நாம் அவ்வப்போது படிக்கிறோம், பார்க்கிறோம். அத்தோடு அதை கடந்தும் போய்விடுகிறோம். ஆனால், ஒரு அரசாங்கத்தால் அப்படிக் கடந்துபோக முடியாது. அதற்குரிய வழிவகைகளைச் செய்யவேண்டும், செய்ய முன்வந்திருக்கிறது தமிழக அரசு. உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பணியிடத்துக்கு மேலும் 119 பேரை உடனடியாக நியமிக்க கடந்த 28-ம் தேதியன்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு.

உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வேலை என்ன?

5.8.2011-ல் மத்திய அரசு கொண்டுவந்த உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மாநிலங்களில் உணவு பாதுகாப்பு ஆணையர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கும்கீழ் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு களத்தில் இச்சட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.

அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உணவு விற்பனையாளர்களின் செயல்பாடுகளை கண்காணித்தல், உரிமம், பதிவுச் சான்று வழங்குதல், தடை செய்யப்பட்ட உணவு விற்பனையைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், சத்துணவு, அங்கன்வாடி, அம்மா உணவகங்கள், அன்னதானக் கூடங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வது இவர்களின் வேலை.

தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்பு அலுவலர்

இந்தப் பணிகளைக் கவனிப்பதற்காக தமிழகத்தில் 584 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இப்பணியில் இருந்த நிலையில், என்ன காரணத்தாலோ அது படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 272 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். வட்டார அளவில் ஒருவர் என்ற கணக்கில் பணிபுரியும் இவர்களால், தங்களது ஏரியாவில் இருக்கும் எல்லா ஊர்களிலும், எல்லா உணவகங்களிலும் ஆய்வு செய்வது என்பது இயலாத காரியம். அவர்கள் சிறுகடைகள் முதல் பெரியகடைகள் வரை, தரப்பரிசோதனை செய்வதும் நடைமுறைக்கு ஒத்துவராத காரியம். அதனால்தான் உணவையோ, உணவுப் பொருட்களையோ ஆய்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.

இதைச் சரியாக புரிந்துகொண்டதால்தான், தமிழக அரசு உடனடியாக மேலும் 119 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இந்த இடங்கள் நிரப்பப்பட்டால், அது ஓரளவுக்கு உணவுக் கட்டுப்பாட்டை சீர்செய்ய உதவும் என்கிறார்கள், தற்போது பணியிலிருக்கும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள்.

அ.தி.அன்பழகன்

மக்களின் உணவைப் பாதுகாக்க பணிபுரியும் இவர்களுக்கோ ஏகப்பட்ட பிரச்சினைகள். அதுகுறித்து தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழ் மாநில உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன், உணவுப் பாதுகாப்பு அலுவலர்களின் பிரச்சினைகள் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார்.

’’உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளமைக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம். பாதுகாப்பான உணவு மக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய முக்கிய பொறுப்பு உணவுப் பாதுகாப்பு அலுவலர்களையே சார்ந்தது. அந்த வகையில், இந்தியாவிலேயே மிகச்சிறந்த வகையில் உணவு பாதுகாப்பு துறை செயல்பட தமிழ்நாடு அரசு உதவிவருகிறது.

சட்ட விதிகளின்படி நியமிக்கப்பட்டு பணியாற்றிவரும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பணி விதிகளில் திருத்தம் (Saving Clause In Adcoc Service Rules) கோரி, பல்வேறு காலகட்டங்களில் கடந்த அரசிடம் முறையிட்டும், அப்போதைய அரசுச் செயலாளர் 2 முறை ஒத்துக்கொண்டும், அன்றைய மேலிடத்தின் அழுத்தம் காரணமாக அது நிறைவேற்றப்படவில்லை.

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலிருந்து உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருபவர்களுக்கு சுவீகார ( Obsorbtion) ஆணை வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து அவர்களுக்கான சேமநல நிதியும் பத்து ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்படவில்லை. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முதுநிலைப் பட்டியலும் வெளியிடப்படவில்லை.

முப்பதாண்டுகளாக பணி உயர்வு என்பதே இல்லாமல் பணியாற்றும் எங்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும். தமிழகத்தில் உணவு பாதுகாப்புத் துறை ஆரம்பிக்கப்பட்டபோது, தற்காலிக ஏற்பாடாக நியமிக்கப்பட்ட அரசு மருத்துவர்களை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்களாக நியமிக்கப்பட்டதை அவர்களுக்கான அனுமதிக்காலம் முடிவடைந்துவிட்ட நிலையில், அவர்களை அப்பணியில் இருந்து விடுவித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்களையே மாவட்ட நியமன அலுவலர்களாக பதவி உயர்வு கொடுக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் கவனிக்கப்படாத தமிழ்நாடு அரசு ஊழியர்கள் குறைகளைப் போக்கி, மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர். காசில்லா கலந்தாய்வு நடத்தி அவரவர் சொந்த மாவட்டத்துக்குள் பணிபுரியும் வகையில் எங்களுக்கும் சிறப்பான ஏற்பாட்டை சுகாதார அமைச்சர் செய்து கொடுத்திருக்கிறார். அதோடு சேர்த்து கடந்த ஆட்சியில் சிலரின் சுயநலத்திற்காக வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளையும் நீக்கிட வேண்டும்” என்றார் அன்பழகன்.

உணவகங்களிலும், கடைகளிலும் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும் இவர்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் அரசால் செய்துதரப்படவில்லை. இவர்களுக்கென ஒரு அலுவலகமோ, உதவியாளர்களோ கூட கிடையாது. அதனால் ஆய்வுக்குச் செல்லும்போது மற்ற ஊர்களில் உள்ள உணவுப்பாதுகாப்பு அலுவலர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு போகிறார்கள். பறிமுதல் செய்யப்படும் பொருட்களை எடுத்துச்செல்ல வாகன வசதியும் செய்து தரப்படவில்லை. அதனால், தாங்களே சொந்த செலவில் வாகனம் ஏற்பாடு செய்து எடுத்துச் செல்கிறார்கள்.

இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், அலைபேசி வசதிகூட இவர்களுக்குக் கிடையாது. சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் தவிக்கிறார்கள். பெரிய நிறுவனங்களில் இருந்தும், தனியார்களிடமிருந்தும் மிரட்டல்கள் வரும்போது அஞ்சி நடுங்கிப் போகிறார்கள். இவற்றையும் அரசு பரிசீலித்து தேவையானவற்றை செய்துகொடுத்து, மக்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

x