ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவு: விவசாயிகள் மகிழ்ச்சி


ஆழியாறு அணை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு வரும் 10-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 24-ம் தேதி வரை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு பள்ளிவிளங்கால், காரப்பட்டி, அரியாபுரம், பெரியணை, வடக்கலூர் அம்மன் கால்வாய் வழியாக ஆண்டுதோறும் குறுவை, சம்பா என இரண்டு போக சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படாமல், நிலை பயிர்களை காப்பாற்ற மட்டும் தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர்வளத்துறை அதிகாரிகள், தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் வரும் 10-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 24-ம் தேதி வரை தொடர்ந்து 136 நாட்களுக்கு 1,020 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.