சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், “கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் திட்டம் ரூ.50 கோடி, நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கூவம் ஆற்றில் கழிவுநீர் கலக்கும் 23 இடங்கள் மற்றும் அங்கு செயல்படுத்தப்படும் திட்டம் குறித்த அறிக்கை, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநரால் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
குறிப்பாக, என்என்சி போஸ் சாலை, ரிச்சி தெரு, சிந்தாதிரிப்பேட்டை, நேப்பியர் பாலம், முகப்பேர் கிழக்கு உட்பட பல்வேறு இடங்களில் கழிவுநீரகற்றும் அமைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை கூவம் நதி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தவும், இதற்காக ரூ.50 கோடியை விடுவிக்கவும் சென்னை குடிநீர் வாரியம் கோரியது.
இதையடுத்து, நிதி ஒதுக்குவதற்கான அனுமதியைப் பெற்றுத்தர, குடிநீர் வடிகால் வாரியத்திடம் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை கோரியது.
குடிநீர் வடிகால் வாரியமும் அரசிடம் பரிசீலிக்க வேண்டுகோள் விடுத்தது. கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு, கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் அமைப்புகளை நிறுவ ரூ.50 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.