குடிபோதையில் ஓட்டிவந்த வழக்கறிஞரின் கார் மோதி 5 பேர் படுகாயம், 3 வாகனங்கள் சேதம்


பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள், மான் கொம்பு

எழும்பூர், எத்திராஜ் கல்லூரி பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (50). இவர் தனது மகள்களுடன் நனோ காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

எழும்பூர், காசா மேஜர் சாலை அருகே வரும்போது எதிரே வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து நனோ கார், ஆட்டோ, இருசக்கரவாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நானோ காரில் பயணித்த வில்சன் மற்றும் அவரது 2 மகள்கள், ஆட்டோ ஓட்டுநர், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை உடனடியாக சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், நானோ காரில் வந்த வில்சனுக்கு மார்பு மற்றும் கால் பகுதியில் முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த மற்றவர்களுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விபத்தை ஏற்படுத்தியதாக அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (56) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. அதிக அளவில் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியதே, விபத்துக்குக் காரணம் என்பதும் தெரியவந்தது.

மேலும், விபத்துக்குள்ளான நனோ காரில் இருந்த பிளாஸ்டிக் பையில் 6 யானை தந்தங்கள்,1 மான் கொம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து யானை தந்தங்களைப் பறிமுதல் செய்த போலீஸார் இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததன் பேரில், வனத் துறை அதிகாரிகள் தந்தத்தைக் கைபற்றி, கார் உரிமையாளர் வில்சனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x